‘அலங்கு’ திரைப்பட விமர்சனம்

குணாநிதி, காளி வெங்கட் , செம்பன் வினோத், சரத் அப்பானி, சௌந்தர்ராஜா, ஸ்ரீலேகா , ரெஜின் ரோஸ், கொற்றவை, தீக்ஷா, நிரோஷா, அர்ச்சனா நடித்துள்ளனர் – எஸ் பி சக்திவேல் இயக்கியுள்ளார். பாண்டிக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் அஜீஸ் . ஷான் லொகேஷன் படத்தொகுப்பு செய்துள்ளார். டிஜி பிலிம் கம்பெனி, மேக்னஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சபரிஷ், சங்கமித்ரா சௌமியா அன்புமணி தயாரித்துள்ளனர்.சக்தி ஃபிலிம் ஃபேக்டரி பி சக்திவேலன் படத்தை வெளியிடுகிறார்.

நாயகன் குணாநிதி தமிழக மலைவாழ் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்.   அனைத்து உயிர்களையும் ஒன்றாக பார்த்து அன்பு செலுத்துபவர்.காளி என்ற நாயை வளர்க்கிறார். எங்கு சென்றாலும் அந்த நாயுடன் பயணிப்பவர், வேலைக்காக தனது  உறவினர்களுடன் கேரளா செல்லும் போதும் காளி நாயை தன்னுடன் அழைத்துச் செல்கிறார். அங்கே ஒரு அரசியல்வாதி தன் மகளை நாய் கடித்து விடவே வெறி நாய் ஆபத்தில் சுற்றுப்புறமுள்ள எல்லா நாயையும் அவர் கொன்று விட ஆட்களை அனுப்புகிறார். அதன்படி கொன்று வருகிறார்கள் அவர்களிடம் காளியும் சிக்கிக் கொள்கிறது.அதில் இருந்து காளியை காப்பாற்றும் முயற்சியில் குணாநிதி  ஒருவரது கையை வெட்டிவிடுகிறார்.கையை இழந்தவர் குணாநிதி மற்றும் அவரது கூட்டத்தை கொலை செய்ய துரத்துகிறார்கள்..அவர்களிடம் இருந்து தப்பிக்க  குணாநிதி, காட்டு வழியாக பயணம் மேற்கொள்கிறார். அந்த பயணம் அவர்களை தப்பிக்க வைத்ததா? அல்லது வேறு ஆபத்தில் சிக்க வைத்ததா? என்பதே ‘அலங்கு’ படத்தின் கதை.

தர்மா என்ற கதாபாத்திரத்தில் மலைவாழ் பழங்குடியினராக நடித்திருக்கும் குணாநிதி, துடிதுடிப்பான நடிப்பில்  அசத்திருக்கிறார்.  தனது நாய்க்கு ஆபத்து என்றதும் காட்டும் ஆவேசநடிப்பு, சண்டைக்காட்சி, வனப்பகுதியில் பயணம் என கதாபாத்திரத்திற்காக குணாநிதி கடுமையாக உழைத்திருப்பது  தெரிகிறது.

மலையன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட் வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம்  ஈர்க்கிறார்.

கேரள முதலாளியாக நடித்திருக்கும் செம்பன் வினோத், தன் மகள் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்துவதற்காக நாய்கள் மீது காட்டும் வெறித்தனம்,.கையை இழந்து கொலைவெறியோடு நாயகனை துரத்தும் சரத் அப்பானி, ஆக்ரோஷமான நடிப்பு மூலம் மிரட்டுகிறார்.நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீரேகா, வித்தியாசமான தோற்றத்திலும்  நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார்.

சவுந்தர்ராஜா, சண்முகம் முத்துசாமி, ரெஜின் ரோஸ், இதயக்குமார், மாஸ்டர் அஜய், கொட்ரவை, ஏஞ்சல், மஞ்சுநாத் உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கிறார்கள்..ஒரு நாயை பிரதான பாத்திரமாக்கிக் கதை தொடங்கினாலும் போகப்போக கதை திசை திரும்பி பல்வேறு திருப்பங்களோடு ஒரு கிரைம் திரில்லராக மாறுகிறது.நாய்  காட்சிகள் குறைவாக இருப்பது சிறு ஏமாற்றமளிக்கிறது.கதை நாயை பிரதானப்படுத்தி இருந்தாலும் ஆங்காங்கே படத்தில் யானைகள் வரும் காட்சிகள் நிறைய உள்ளன. கண்முன் யானையைக் காணும் போது அந்தக் காட்சி பிரம்மாண்டத்தை உணர வைக்கிறது.படத்தில் கேரளத்தின் காடு மலை அருவி போன்ற காட்சிகள் வேறு வகையான காட்சி அனுபவத்தை தருகின்றன. அந்தக் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் பாண்டிக்குமாரின் கைவண்ணம் தெரிகிறது.

அஜீஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களத்தை பிரதிபலிக்கிறது.சான் லோகேஷின் படத்தொகுப்பு படத்தை விறுவிறுப்பாகவும், வேகமாகவும் நகர்த்திச் செல்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் எஸ்.பி.சக்திவேல், காளி என்ற நாயையும், அதன் செயல்பாடுகளையும் மிக தத்ரூபமாக படமாக்கியிருப்பதோடு, வனப்பாதையின் ஆபத்து நிறைந்த பயணத்தை சாகச காட்சிகளாக வடிவமைத்திருக்கிறார்.

ஒரு நாயை மையப்புள்ளியாக வைத்துக்கொண்டு இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் அமைத்திருக்கும் திரைக்கதை புதிதாக இருக்கிறது.ஆக்‌ஷன் படம் என்றாலும், செல்லப்பிராணியான நாய் மட்டும் இன்றி யானை, நரிக்கூட்டம் என்று வன விலங்குகளையும் காட்சிகளில் பயன்படுத்தி சிறுவர்களையும் கவர முயற்சித்திருக்கும் இயக்குநர் சக்திவேல் தான் எடுத்துக்கொண்ட கதைக்கருவுக்கு  நியாயம் சேர்க்கும் வகையில் உழைத்திருப்பது திரையில் தெரிகிறது.

மொத்தத்தில், சினிமாத்தனமான செயற்கைத்தனமான திருப்பங்கள் இல்லாமல் கதை சொல்லும் போக்கில் உருவான படம் ‘அலங்கு’ .