‘2 கே லவ் ஸ்டோரி’ திரைப்பட விமர்சனம்

ஜெகவீர் ,மீனாட்சி கோவிந்தராஜன்,பால சரவணன், ஜெயபிரகாஷ், நிரஞ்சன், ஹரிதா , சிங்கம்புலி, அந்தோணி பாக்யராஜ், வினோதினி வைத்தியநாதன்,ஜிபி முத்து நடித்துள்ளனர்.சுசீந்திரன் எழுதி இயக்கி இருக்கிறார்.ஒளிப்பதிவு வி. எஸ். ஆனந்த கிருஷ்ணா, எடிட்டிங் தியாகு, இசை டி. இமான், சிட்டிலைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

நாயகன் கார்த்திக்கும் நாயகி மோனியும் சின்ன வயதில் இருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள். ‘ப்ரிவெட்டிங் ஃபோட்டோ ஷூட் ‘நிறுவனம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்குள் உள்ள நட்பையும் புரிதலையும் பார்த்து அவர்கள் ஏன் காதலர்களாகித் திருமணம் செய்து கொள்ளக்கூடாது? என்று சமூகம் நினைக்கிறது. பெற்றோர் கூட அப்படியே நினைக்கிறார்கள். கார்த்திக்கின் காதலியாக பவித்ரா இவர்களின் உறவிற்குள் வருகிறார்.அதன் மூலம் நட்பில் விரிசல் விழுகிறது.காதலி வரும்போது நட்பில் விரிசல் வருவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.இந்த நிலையில் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.தங்களுக்குள் இருப்பது நட்புதான் காதல் அல்ல என்று அவர்கள் சொன்னாலும் நம்ப மறுக்கிறது சமூகம். அந்த நட்பை நிரூபிக்க அவர்கள் முயல்கிறார்கள்.இதில் என்ன நடந்தது ? தங்களது ஆரோக்கியமான நட்பைக் காதல் ஆக்கிக் கொள்கிறார்களா? சுசீந்திரன் இயக்கியிருக்கும் இந்த `2கே லவ் ஸ்டோரி’ படத்தின் முடிவே பதில் சொல்லும்.

ஜெகவீர் 2கே இளைஞர் என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் அவரது நடவடிக்கைகள் அவர் அணியும் வண்ண வண்ண உடைகள் 90கே என்று தான் சொல்லத் தோன்றுகிறது.சுமாரான தோற்றம் ,சுமாரான நடிப்பு. மேலும் நடிப்பு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

கதையின் மையமாக இருக்கும் மோனி கதாபாத்திரத்தில் வரும் மீனாட்சி கோவிந்தராஜன் அப்பாத்திரத்திற்கு ஓரளவிற்கு நியாயம் செய்திருக்கிறார்.
பல காட்சிகளை உயர்த்திப் பிடித்து நிறுத்த முயன்றிருக்கிறார் மீனாட்சி.எப்போதும் படத்தில் பேசிக்கொண்டே இருக்கும் பால சரவணன் சில இடங்களில் மட்டும் சிரிக்க முயற்சிக்கிறார். கார்த்திக்கின் காதலியாக வருபவர், ஜெயபிரகாஷ், நிரஞ்சன் ஜெயபிரகாஷ், ஹரிதா ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். சிங்கம்புலி – ஜி.பி.முத்து கூட்டணியின் ‘காமெடி முயற்சி’ சில நொடிகள் மட்டும் கிச்சுக் கிச்சு மூட்டுகிறது. திருமணத்தை நிறுத்த சிங்கம்புலி போடும் திட்டங்களும் பேசும் வசனங்களும் சரியான அலுப்பு.

வழக்கமான ‘காதலன் – காதலி – காதலனின் தோழி’ என்கிற ஒரு வரியை 2கே நிறத்தில் கதையாக்கி பரிமாற முயன்றிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.ஆழமில்லாத பாத்திரங்கள், மேலோட்டமான காட்சிகள், செயற்கையான திரைக்கதை, புதுமையில்லாத் திருப்பங்கள், புளித்துப்போன எமோஷன் காட்சிகள் என ஏகப்பட்ட பின்னடைவுகள்.

மோனி கதாபாத்திரத்தின் முதிர்ச்சியும் தெளிவும் ஓகே. தொடக்கத்தில் கவனிக்கவும் வைக்கிறது. முக்கியமாக, பொசஸிவ்னஸ் குறித்து மோனி விளக்கும் இடம் சில் ரகம் .ஆனால், இரண்டாம் பாதியில் அதே பாத்திரம் இயல்புக்கு மாறாகத் தடம் புரண்டு குழப்பி விடுகிறது.இது ஓர் ஏமாற்றமாக இருக்கிறது.

இடைவேளை வரை மையத்திலிருந்து விலகாத கதை அதற்குப் பின் பாதை மாறிச் செல்கிறது .வார்த்தைக்கு வார்த்தை 2கே என்று எல்லா கதாபாத்திரங்களும் சொல்கின்றன.
ஆனால், அந்தத் தலைமுறையில் தனிப்பட்ட தெரியும் வாழ்வியல், உளவியல் பார்வை,உறவுச் சிக்கல், போன்றவை படத்தில் சரியாக வெளிப்படவே இல்லை.

பெயரளவில் மட்டும் இருக்கும் `2கே வைப்ஸ்’ கொஞ்சம் கதை, திரைக்கதைக்குள்ளும் மெனக்கெட்டு இருக்கலாம்.

படத்திற்கான ஒளிப்பதிவு இசை எல்லாமே அந்த வட்டத்திற்குள் தான் சுற்றுகின்றன.இந்தப் படம் சார்ந்து இயக்குநர் சுசீந்திரனிடம் இன்னும் எதிர்பார்த்தோம். மொத்தத்தில் போதாமையையே உணர வைக்கிறது.