தமிழகம் முழுவதும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேவையாற்றிவரும் வளமான தமிழகம் என்கிற அமைப்பின் ஆதரவுடன், 5 எலிமெண்ட்ஸ் என்கிற தனது நிறுவனத்தின் மூலம் பொன்னியின் செல்வன் நாவலை 2 டி தொழில் நுட்பத்தில் திரைப்படமாகத் தயாரிக்கிறார் பொ.சரவணராஜா.
இரண்டு மணி 20 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்தின் தொடக்க விழா சோழா ஹோட்டலில் நடந்தது. தவயோகி மஹாத்ரயா ( Diviner infinitheism Spiritual Foundation ) கலந்து கொண்டு பொன்னியின் செல்வன் 2டி படத்தினைத் தொடங்கி வைத்து வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய மஹாத்ரயா, “ நமக்கு சினிமா மூலம் தான் கத்திச் சண்டை என்றால் என்ன என்று தெரிந்தது… எம் ஜி ஆரும் நம்பியாரும் போட்ட கத்திச்சண்டைகள் மூலம் தான் அதனை அறிந்து கொண்டோம்…. வில்லன் என்றால் வீரப்பா போல் தான் இருப்பார் என்பதையும் , வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் போன்றவர்களையும் சினிமா மூலம் தான் அறிந்து கொண்டிருக்கிறோம்… அதைப்போலவே , பொன்னியின் செல்வனையும் பொ.சரவண ராஜா தயாரித்து வெளிவரும் போது அறிந்து கொள்வோம்….
எந்த ஒரு ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும் தோற்பதில்லை, மாறாக அந்த சிந்தனைகளுக்குப் பின்னால் இருக்கும் வியாபார தந்திரங்களில் வேண்டுமானால் வெற்றி தோல்வி இருக்கலாம்….
கிரிக்கெட் எப்படி ஐபிஎல் மூலம் இன்னும் அதிக வீரியம் அடைந்ததோ, கால்பந்து , டென்னிஸ் மற்றும் கபடி உள்ளிட்ட விளையாட்டுகளும் அழகான வியாபார சூட்சுமத்துடன் முன்னெடுத்துச் செல்லப்படும் போது, உலகளாவிய அங்கீகாரம் பெற்று விடுகின்றன…
அதைப்போலவே, தமிழர்களுக்கு மட்டுமே வரலாறாக உள்ள பொன்னியின் செல்வன், பொ.சரவ்ண ராஜா உள்ளிட்ட குழுவினரால் உலகத்தரமான படைப்பாக வெளிவரும் போது இன்னும் அதிக மக்களைச் சென்றடையும்….
கடமைக்கு எதையும் செய்தால் வெற்றிபெற முடியாது, அப்படி செய்திருந்தால் கல்கியின் பொன்னியின் செல்வன் தலைசிறந்த நாவலாக உருவாகியிருக்க முடியாது…. பொன்னியின் செல்வனே ஒரு வரலாறு, அந்த வரலாற்றை திரும்பவும் திரையில் கொண்டு வருவது இன்னொரு வரலாறு, அந்த வரலாறு படைக்கப் போகிறார் பொ சரவண ராஜா.
2 டி படங்களின் தர ஒப்புமைக்கு, டிஸ்னியின் லயன் கிங் மற்றும் டாய் ஸ்டோரி ஆகிய படங்களை மேற்கோள் காட்டும் இன்றைய நிலை, இன்னும் ஏழு ஆண்டுகள் கழித்து, 5 எலிமெண்ட்ஸின் பொன்னியின் செல்வன் என்று மாறவேண்டும, மாறும் என்று நம்புகிறேன்….” என்று வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் பொ.சரவண ராஜா, “ 1950க்குப் பிறகு வந்த தமிழ் நாவல்களை எடுத்துக் கொண்டால், 5 பாகங்கள் 2500 பக்கங்கள் கொண்ட கல்கியின் பொன்னியின் செல்வனே அவற்றுள் மிகப்பெரிய நாவல்…. 9 முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை நடைபெற்ற சோழர்களின் பொற்கால ஆட்சி, தமிழர்களின் உயர்ந்த வாழ்க்கை நெறி, கலாச்சாரம் போன்ற வற்றை இன்றைய தலைமுறைக்கும் இனி வரும் தலைமுறைக்கும் கொண்டுசெல்லும் பணியே பொன்னியின் செல்வன் 2 டி திரைப்படம்….” என்றார்.
பொன்னியின் செல்வன் 2 டி திரைப்படத்தை இயக்குபவர் மு.கார்த்திகேயன். இவர், 20 ஆண்டுகளாக அனிமேஷன் துறையிலும், அனிமேஷன் படங்களில் வரும் கதாபாத்திர வடிவமைப்புத்துறையிலும் தேர்ந்த அனுபவம் மிக்கவர். அத்துடன் கூத்துப்பட்டறை பாரம்பரியம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பொன்னியின் செல்வன் நாவலில் வரும் முக்கிய கதாபாத்திரங்களான வந்தியத்தேவன் மற்றும் குந்தவை ஆகியோரின் ஓவியங்களை, தவயோகி மஹாத்ரயா திறந்து வைத்து பொன்னியின் செல்வன் 2 டி படத்தை தொடங்கி வைத்தார்.
தயாரிப்பாளர் பொ.சரவண ராஜா மற்றும் இயக்குநர் மு.கார்த்திகேயனுடன் ஒரு நேர்காணல்
அரினா மல்டிமீடியா என்கிற பயிற்சி மையம், அதனைத் தொடர்ந்து 5 எலிமெண்ட்ஸ் என்கிற அனிமேஷன் நிறுவனம் ஆகியவற்றைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2டி திரைப்படத்தைத் தயாரிக்க வந்திருக்கிறார் பொ.சரவண ராஜா.
அவ்வளவு பெரிய நாவலை இரண்டரை மணி நேர படமாகக் கொடுத்து விடமுடியுமா..?
தயாரிப்பாளர் பொ.சரவணராஜா: ஒரு சவாலான விஷயம் தான். எனினும், முழு நாவலின் சுவாரஸ்யம் குறைந்து விடாதபடி திரைக்கதை அமைத்து இரண்டரை மணி நேரமாக குறைத்திருக்கிறோம்….
அனிமேஷன் படங்களுக்கு அதிக காலமும் செலவும் பிடிக்குமே..?
தயாரிப்பாளர் பொ.சரவணராஜா: :ஆம், கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 2 ஆண்டுகளில் இந்தப் படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்….
இதுபோன்ற படங்களுக்கு ஹாலிவுட்டிலேயே குறைந்தது 6 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் போது, இங்கே இரண்டு ஆண்டுகளில், அதே தரத்துடன் எடுப்பது சாத்தியமா..?
தயாரிப்பாளர் பொ.சரவணராஜா:அனிமேஷன் படங்களைப் பொறுத்தவரை Pre Production என்கிற திட்டமிடுதலுக்கான நேரம் தான் மிகுதியாக இருக்கும். ஹாலிவுட்டில் வெளிவரும் பெரும்பாலான அனிமேஷன் படங்களுக்கான கதாபாத்திரங்கள் மற்றும் கதைகள் முழுக்க முழுக்க கற்பனையாகவே புனையப்பட்டிருக்கும்…. அதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்வார்கள்…. பொன்னியின் செல்வனிலோ ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் , கதைக்களங்களையும் மிகவும் நேர்த்தியாக விவரித்து விட்டார் கல்கி. அந்த கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களங்களை ஓவியமாக தீட்டுவதுதான் எங்கள் வேலை…. அதனைத் தொடர்ந்து தயாரிப்பு, அதாவது அனிமேஷன் வேலைகள்…. கிட்டத்தட்ட 150 தேர்ந்த அனிமேஷன் வல்லுநர்கள் பணியாற்றவுள்ளார்கள்…. அவர்களை மேற்பார்வையிடும் குழுத்தலைவர்களோ அனிமேஷன் துறையில் அனுபவம் மிக்கவர்கள் மட்டுமல்ல, பொன்னியின் செல்வன் நாவலைப் பலமுறை படித்தவர்கள்…. இப்படிப்பட்ட திறமையானவர்களை ஒருங்கிணைத்து இரண்டரை வருடங்களில் இந்தப் படத்தினை உலகத்தரத்தில் கொடுக்க முடியும் என்பது சாத்தியமே!
மணியம் மற்றும் ம.செவின் ஓவியங்களை அப்படியே மாதிரிகளாக எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா..?
இயக்குநர் மு.கார்த்திகேயன்: இல்லை, அவரது ஓவியங்களை அடிப்படையாக வைத்தும் , இன்றைய தலைமுறைக்குப் பிடிக்கும் வகையிலும் கதாபாத்திரங்களை வரைந்திருக்கிறோம்…. முக்கியமாக, நமக்கே உரித்தான சாமுத்ரிகா லட்சணத்தின் படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உருவாக்கியிருக்கிறோம்
…
வசன உச்சரிப்பும் கதாபாத்திரங்களின் உதட்டசைவுகளும் பொருந்திப்போவது மிகவும் சவாலான விஷயமாயிற்றே..?
இயக்குநர் மு.கார்த்திகேயன்: அனிமேஷன் படங்களை பொறுத்தவரை உதட்டசைவுகளை விட உணர்ச்சிகளுக்கும் ,உடல்மொழிகளுக்கும் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்…. அவை நேர்த்தியாக இருந்து விட்டாலே அனைத்தும் நேர்த்தியாக அமைந்து விடும்… தவிர, வசன உச்சரிப்புக்கு ஏற்ற உதட்டசைவைக் கொண்டு வரும் தொழில் நுட்பம் நம்மிடையே இருக்கிறது…. அதனையும் சரியாகக் கொண்டு வந்துவிட முடியும்…..
பொன்னியின் செல்வன் 2 டி படம் தமிழில் மட்டும்தானா..? பிறமொழிகளில் எடுக்கும் எண்ணம் உள்ளதா..?
தயாரிப்பாளர் பொ.சரவணராஜா: இப்போதைக்கு, உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களுக்குச் சென்று சேரவேண்டும் என்கிற எண்ணத்தில் தமிழில் மட்டும் தான் எடுக்கிறோம்…. வெளியான பிறகு, பிறமொழிகளில் டப் செய்யப்படலாம் அல்லது சட் டைட்டிலுடன் வெளியிடப்படலாம்…
*உங்களது இந்தப் படைப்புக்கான டார்கெட் ஆடியன்ஸ் – என்றால் யாரைக்குறிப்பிடுவீர்கள்..?
தயாரிப்பாளர் பொ.சரவணராஜா: ஹாலிவுட்டில் எடுக்கப்படும் அனிமேஷன் படங்கள் ஒரு குறிப்பிட்ட வயதினரை மட்டும் கவனத்தில் கொண்டு எடுக்கப்படுவதில்லை…. மொழிகளைக் கடந்து உலகம் முழுவதும் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் கண்டுகளிக்கும் விதத்தில் தான் எடுக்கப்படுகின்றன…. அதைப்போலவே, பொன்னியின் செல்வன் 2 டி படமும் , அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் விதத்தில் எடுக்கப்படும்
….
படத்திற்கான இசைக்கு பிரபல இசையமைப்பாளர்களை அணுகும் திட்டம் உள்ளதா..?
தயாரிப்பாளர் பொ.சரவணராஜா: பொன்னியின் செல்வனைப் பொறுத்தவரை இது தமிழர்களின் பெருமை சொல்லும் காவியம்… இந்தப் படைப்பில் தாங்களாகவே முன்வந்து பங்களிப்பு வழங்கக் காத்திருக்கும் அனைவரையும் ஏற்றுக் கொள்ள முடிவு செய்திருக்கிறோம்…. அந்த வகையில், இசைக்காகவும் தாங்களாக முன்வந்து யாரவாது அணுகினால் ஏற்றுக் கொள்வோம்…
முப்பரிமாண தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட இந்த நிலையில் இன்னும் இரு பரிமாண படங்களை எடுக்கின்றீர்களே..?
தயாரிப்பாளர் பொ.சரவணராஜா: இன்னும் இருபரிமாணப்படங்களுக்கான சந்தையும் வரவேற்பும் இருந்து கொண்டுதான் இருக்கிறது…. நேர்த்தியாகக் கொடுத்து விட்டால் எந்த ஒரு படைப்பும் முழுமையான வெற்றிபெற்றுவிடும்…
தேசவுடைமையாக்கப் பட்ட பொன்னியின் செல்வனை, தமிழர்களின் பெருமை சொல்லும் இந்தக் காவியத்தை 2டி படமாக எடுக்கும் 5 எலிமெண்ட்ஸ் நிறுவனம் கடந்த 15 வருடங்களாக வெளிவந்த ஹாலிவுட் படங்களில் இடம்பெறும் கிராஃபிக்ஸ் மற்றும் அனிமேஷன் காட்சிகளில் தனது பங்களிப்பை ஆற்றிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.