‘3.6.9’ விமர்சனம்

துப்பாக்கி முனையில் வங்கியில் பணம் களவாடப்படுவதுண்டு. ஆனால் இப்படத்தில் ஒரு தேவாலயத்தில் துப்பாக்கிகளுடன் நுழைந்த மனிதர்களும் அதன் பின்னே செல்லும் காட்சிகளும் என்று கதை நகர்கிறது.

வழிபாட்டுத்தலமான தேவாலயத்தில் மக்கள் பிராத்தனை நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், துப்பாக்கி ஏந்திய ஒரு கும்பல் உள்ளே நுழைகிறது.
உள்ளே இருப்பவர்களை மிரட்டி அந்த இடத்தையே தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது.தேவாலயத்தின் பாதிரியாரான கே.பாக்யராஜிடம் இருக்கும் ஒரு பொருளைக் கைப்பற்ற முயற்சிக்கிறது.
அது என்ன பொருள்? அதை ஏன் மிரட்டிப் பிடுங்க பார்க்கிறார்கள்?அதை அவர்களிடம் இருந்து காப்பாற்ற நினைக்கும் பாக்யராஜ் யார்?என்பதே 3.6.9 கதை செல்லும் பாதை.

பாதிரியாராக நடித்திருக்கும் கே.பாக்யராஜ், தனது நடிப்புலக அனுபவத்தின் மூலம் அலட்டிக் கொள்ளாமல் அந்தப் பாத்திரத்திற்குப் பலம் சேர்த்துள்ளார். அவரது மற்றொரு முகமும், அதன் மூலம் அவர் கண்டுபிடித்த அந்தப் பொருளும் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க வைக்கின்றன.

மற்றொரு முக்கியமான வேடத்தில் வரும் பிஜிஎஸ், தனது அழுத்தமான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்.

பிளாக் பாண்டி, அங்கையர் கண்ணன், அலம் ஷா, நரேஷ், சோஹைல், ராஜஸ்ரீ, சக்திவேல், சுபிக்‌ஷா, ஜெய், கார்த்திக், பிரவீன், ரிஷி, பாலு, ஸ்ரீ எனப் படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையைக் குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

கதை நிகழ்விடம் ஒரு தேவாலயம் என்றாலும் காட்சிகளில் சலிப்பூட்டாமல் விதவித கோணங்களின் மூலம் அதை ஈடு செய்கிறார்கள்.
அதைச் சாத்தியப்படுத்தி இருக்கும் ஒளிப்பதிவாளர் மாரீஸ்வரன் மோகன் குமார் பாராட்டுக்குரியவர் அதே போல இசையமைப்பாளர் கார்த்திக் ஹர்ஷா, பின்னணி இசை மூலம் படத்திற்குப் பலம் கூட்டியிருக்கிறார்.

அரிய கண்டுபிடிப்பை மையமாக்கி அறிவியல் புனைகதையை மிக எளிமையாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஷிவ மாதவ்.

முதல் பாதியில் போடும் மர்ம முடிச்சுகளை ஒவ்வொன்றாக இரண்டாம் பாதியில் அவிழ்த்து திரைக்கதைக்கு க எடை கூட்டி உள்ளார்.

படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு திருப்பத்திற்கும் பின்னால் உள்ள காரணத்தை விவரிக்கும் போது படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. சற்றும் எதிர்ப்பார்க்காத க்ளைமாக்ஸ் சபாஷ்.

சாதனை செய்வதாக நினைத்துக் கொண்டு எடுக்கப்படும் படங்களில் சாதனை நேர அளவை மட்டும் கணக்கிலும் கருத்திலும் கொண்டு கதையோட்டத்தில் நம்பகத்தன்மையில் திரைக்கதையில் கோட்டை விடப்படுவதுண்டு. இப்படித்தான் பெரிதாகச் செலவு செய்யப்பட்டு ஒரே நாளில் எடுக்கப்பட்ட சுயம்வரம் தொடங்கி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட பார்த்திபனின் இரவில் நிழல் வரை ஒவ்வொரு படமுமே நிறைவு தராத அனுபவமாக இருந்தது. ஆனால், சிறிய பட்ஜெட்டில் இப்படி ஒரு முயற்சியினை மேற்கொண்டு ஓரளவு திருப்தியான படத்தை கொடுத்துள்ள இயக்குநர் இயக்கிய ஷிவ மாதவ் மற்றும் படக்குழுவினரின் உழைப்பை நிச்சயம் பாராட்டலாம்.

இந்த ’3.6.9’ படத்தை எந்தவித முன் கணிப்பும் இல்லாமல் பார்க்க உட்கார்ந்தால் ஏமாற்றாது.