சித்தார்த் ,சரத்குமார், தேவயானி ,யோகி பாபு , மீதா ரகுநாத், சைத்ரா நடித்துள்ளனர். இயக்கம் ஸ்ரீ கணேஷ் .இசைஅம்ரித் ராம்நாத் ,தயாரிப்பு சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஷ்வா.
நகரங்களில் வாடகை வீடுகளில் இருக்கும் மக்களின் கவலைகளும் கண்ணீரும் வேறு விதமானவை.அனுபவித்தால் மட்டுமே தெரியக்கூடியவை.அப்படி ஒரு நடுத்தர வர்க்கத்து நாயகனின் கதையை எடுத்துக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தின் கனவு குடியிருக்க ஒரு வீடு. அப்படி ஒரு வீட்டுக் கனவை நிறைவேற்றப் போராடும் நடுத்தர வர்க்கத்து நாயகனின் கதைதான் இந்த ‘3 பிஎச்கே’.
மனைவி, ஒரு மகன், ஒரு மகள் என்று அளவான குடும்பம், குறைவான வருமானத்தோடு வாழும் சரத்குமார், சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதே சமயம், தன்னைப் போல் தனது மகனின் வாழ்க்கை இருக்க கூடாது என்பதற்காக தனது சக்திக்கு மீறி மகனின் படிப்புக்குச் செலவு செய்கிறார். வீடு வாங்கும் அவரது முயற்சி பல இடையூறுகளால் தடைப்பட்டு தோல்வியில் முடிந்தாலும்,நம்பிக்கை இழக்காமல் இருக்கிறார்.படிப்பில் சுமாராக இருக்கும் சித்தார்த் தந்தையின் நம்பிக்கையை காப்பாற்ற முடியாமல் திணறுகிறார்.இந்நிலையில் அந்தக் குடும்பம் சந்திக்கும் சவால்கள் தான் இந்த ‘3 BHK ‘ படம்.
தனியார் நிறுவனத்தில் கணக்கராக இருக்கும் வாசுதேவன் என்ற கதாபாத்திரத்தில் வரும் சரத்குமாருக்கு அழுத்தமான வேடம். அதில் பளிச்சிட்டுள்ளார்.மனதில் அழுத்தும் சொந்த வீட்டுக் கனவை முகத்தில் காட்டிய படியே இருக்கும் அவரது பாத்திரம் சிறப்பு.
சரத்குமாரின் மகனாக நடித்திருக்கும் சித்தார்த், குடும்பத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியவில்லை என்ற ஏக்கத்தையும், தொடர் தோல்வியால் துவண்டு போவதையும் தனது நடிப்பில் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவராக அவரது தோற்றம் எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது.
சரத்குமாரின் மனைவியாக நடித்திருக்கும் தேவயானி, அதிகம் பேசாமல் முக பாவனைகள் மூலமாகவே நடுத்தர குடும்ப தலைவிகளின் எதிர்பார்புகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.அவரை மேலும் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.
சரத்குமாரின் மகளாக நடித்திருக்கும் மீதா ரகுநாத், சித்தார்த்தின் தோழியாக நடித்திருக்கும் சைத்ரா இருவரும் கொடுத்த வேலையைக் குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். இவர்கள் தோன்றும் ரசிக்க வைக்கும் காட்சிகள் உள்ளன.யோகி பாபு சில காட்சிகளில் வந்தாலும் சிரிக்க வைக்கிறார்.
அம்ரித் ராம்நாத் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.பின்னணி இசையிலும் சோடை போகவில்லை.
ஒளிப்பதிவாளர்கள் தினேஷ் கிருஷ்ணன்.பி மற்றும் ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ் நடுத்தர குடும்பத்தினரின் வாழ்வியல், கதைக்களம் மற்றும் கதை மாந்தர்கள் என அனைத்தையும் மனதுக்கு நெருக்கமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.காட்சிகளை சுவாரஸ்யம் குறையாமல் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா.
எழுதி இயக்கியிருக்கும் ஸ்ரீ கணேஷ், சொந்த வீடு என்ற கருவை வைத்துக்கொண்டு, நடுத்தர வர்க்க குடும்பத்தினர் தங்களை தொடர்புபடுத்திக் கொள்ளும் திரைக்கதையை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார். மனிதர்கள் ஒவ்வொருவரும் கடந்து போகும் கதையை எடுத்துக்கொண்டு உணர்வு பூர்வமான சித்திரமாகக் கொடுத்துள்ளார் இயக்குநர்.பிரதான கதையை விட்டு சற்றே தடம் மாறும் காட்சிகள் உள்ளன .அதை தவிர்த்து இருக்கலாம்.மொத்தத்தில், ’3 பி.ஹெச்.கே’நம்மை நாமே திரையில் பார்த்துக் கொள்ளும் அனுபவத்தை தரும் திரைப்படம்.


