’35 சின்ன விஷயம் இல்ல’ திரைப்பட விமர்சனம்

நிவேதா தாமஸ், பிரியதர்ஷி, விஷ்வதேவ், பாக்யராஜ், கௌதமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.நந்த கிஷோர் இமானி இயக்கியுள்ளார். S ஓரிஜினல் வால்டர் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு குறுக்கீடுகளும் திசை மாற்றங்களும் நிலவும் சூழலில் குழந்தைகளைப் படிப்பில் எப்படி நேர் வழிக்குக் கொண்டு வருவது என்று தெரியாமல் பெற்றோர்கள் திணறுகிறார்கள். இந்தக் கேள்விக்கான விடையைத் தேடிச் செல்லும் ஒரு திரைப்படத்திற்கான கதை செல்லும் பாதையும் பயணமும்தான் இந்த 35 சின்ன விஷயம் இல்லை என்கிற படம்.

தலைப்பைப் பார்த்தாலே தெரியும் தேர்வில் தேற குறைந்தபட்ச 35 மார்க் எடுப்பது என்பது. சாதாரண நிலையில் தேர்வு எழுதி 35 மதிப்பெண் பெறுவது கூட சின்ன விஷயம் இல்லை. நாம் அதற்காக உழைக்க வேண்டி இருக்கிறது என்று கூறுகிற படம்.

கதை திருப்பதியில் நடக்கிறது.
நாயகி விஷ்வ தேவ் நிவேதா தாமஸ் தம்பதிகளுக்கு அருண், வருண் என்று இரண்டு பிள்ளைகள்.

மூத்த பையன் அருணுக்கு கணக்கே வருவதில்லை.பூஜ்ஜியம் மார்க் எடுக்கிறான். அதனால் அவனை ஜீரோ என்று கிண்டல் செய்கிறார்கள். அவன் கணக்கு சார்ந்தும் சூத்திரங்கள் சார்ந்தும் கேள்விகள் கேட்கிறான். அதனால் அவனைப் பள்ளியில் ஒதுக்கி வைக்கிறார்கள். அதனால் அவன் பள்ளிக்கு போகவே தயங்குகிறான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவனது தர்க்க ரீதியான கேள்விகளுக்கு வாழ்க்கை கணக்குகள் மூலம் பதில் சொல்வதற்கு கௌதமி மூலம் கற்றுக் கொள்கிறார் நிவேதா தாமஸ். அதன் பிறகு நடக்கும் சுவாரசியங்கள் தான் இந்தப் படம்.

நாயகன் விஷ்வதேவ் ஒரு பொறுப்புள்ள தந்தையாக எனது மனப் போராட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.நிவேதா தாமஸ் செயற்கைப் பூச்சு இல்லாமல் அந்தப் பாசத்தை எடுத்துக்காட்டுகிறார். பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்த நிவேதா தான் இந்தப்பட நாயகி. தோற்றமும் நடிப்பும் வளர்ந்து உயர்ந்துள்ளது சிறப்பு. நாயகி நடிப்பைப் பாராட்டுவதா? நாயகனின் நடிப்பைப் பாராட்டுவதா? என்று பட்டிமன்றம் வைக்கும் அளவிற்கு இருவரும் போட்டி போட்டுக் கொண்டு அந்தந்த கதாபாத்திரங்களில் வாழ்ந்துள்ளார்கள். நாயகன் விஷ்வதேவ், நாயகி நிவேதா தாமஸ் இருவருக்கும் அப்படி ஒரு பாசம் பந்தம் காதல் அன்பு நிலவுகிறது.ஆதர்ச தம்பதிகளாக அப்படி ஒரு ஒத்திசைவுடன் அந்தப் பாத்திரங்கள் வெளிப்பட்டுள்ளன.அவர்களின்  பெரிய மகன் அருணாகவும் சின்ன பையன் வருணாகவும் இரண்டு சிறுவர்கள் நடித்துள்ளார்கள். குறிப்பாக 35 மார்க் எடுக்க போராடும் அருண் பாத்திரம் மேலோங்கி தெரிகிறது.

அந்தப் பள்ளியின் பிரின்ஸ்பால் ஆக வரும் கே பாக்யராஜும் கணக்கு ஆசிரியர் சாணக்கிய வர்மா பாத்திரத்தில் வரும் பிரியதர்ஷியும் நன்றாகவே நடித்துள்ளார்கள்.
அந்த வகுப்பறையில் படிக்கும் அத்தனை மாணவர்களும் நம்மை அந்தப் பள்ளிக்கு அழைத்துச் சென்று அந்தச் சூழலை உணர வைக்கிறார்கள்.அந்த வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.நிவேதா தாமசுக்கு உதவுகிற ஒரு நல்ல பாத்திரத்தில் கௌதமி வருகிறார்.

எதார்த்தமான காட்சிகள் அளவான நடிப்பு மிகை இல்லாத உணர்ச்சிகள் என்று அனைத்தையும் கொண்ட சுவாரசியமான படமாக ’35 சின்ன விஷயம் இல்ல’ படம் உருவாகி இருக்கிறது. குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்து மகிழ வேண்டிய படம் இது.