‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் தொடர்! -பகுதி -2
தன் இளமைக்கால திரைநுழைவு அனுபவங்களைக் கூறுகிறார் கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன்.
சின்னவயதிலேயே சிவாஜியைப் படமெடுத்தேன்!
அப்போது ஜெமினி ஸ்டுடியோவில் புதிய கலைஞர்களாக தேர்வு செய்ய ஆள் எடுப்பதாக விளம்பரம் செய்தார்கள். இளம் திறமைசாலிகளை இனம் கண்டு ஊக்கப் படுத்த ஜெமினி எஸ்.எஸ்.வாசன் முடிவு செய்திருந்தார். என்னை நடிக்க பெயர் கொடுக்கச் சொன்னார்கள். சிலகாலம் கேமராவுடன் பழகிய எனக்கு போட்டோகிராபர் ஆக.. அதுவும் சினிமா எடுக்க ஆசை வந்தது.
அப்போது வாசன் கலைஞர்கள் ,நடிகர்கள் பலரைத் தேர்வு செய்து மாதச்சம்பளத்துக்கு அமர்த்தியிருந்தார். அப்படி ஒரு ஏற்பாடு செய்தவர் இந்தியாவிலேயே எஸ்.எஸ்.வாசன் மட்டும்தான்.
நான் ஆசைப்பட்டு அங்கு போய் கே.ஜே.மகாதேவன் என்பவரைச் சந்தித்தேன்.அவர்தான் ஜெமினி எஸ்.எஸ்.வாசனின் கதை இலாக்காவின் பொறுப்பாளர். கேமரா உதவியாளராகும் என் ஆசையை அவரிடம் கூறினேன். நிறைய படங்கள் எடுத்திருக்கிறேன் நேருவைக் கூட எடுத்திருக்கிறேன் என்றேன் ஆர்வமாக.
அங்கு ஒரு பெரிய கேமரா இருந்தது. அது டம்மி கேமரா தான். அதைத் தூக்க முடியுமா? என்றார்.என்னால் தூக்கவே முடியவில்லை.சினிமா கேமரா உதவியாளராக வேண்டும் என்றால் முதலில் கேமராவைத் தூக்கவேண்டும் ,இதற்கு உனக்கு வயது போதாது என்று சொல்லாமல் சொன்னார்.
‘கேமரா பற்றி தெரிய வேண்டுமென்றால் வா சொல்லித் தருகிறேன்’ என்றார். நான் அவ்வப்போது போவேன். கேமராக்கள் பற்றிசொல்லித்தருவார். கேமராவின் பாகங்களைப் படம் வரையச் சொல்வார். வரைந்து காட்டுவேன்.
இப்படியே சிலகாலம் போனது. ஒரு கட்டத்தில் நல்ல மாதிரி பெரிய ஸ்டில் கேமரா எவ்வளவு தெரியுமா? என்றார்.நான் விழித்தேன்.மூவாயிரம் ரூபாய் என்றார்.அது அப்போது பெரிய தொகைதான்,இருந்தாலும் அப்பாவிடம் கேட்டேன். அவர் மறுநாளே கொடுத்துவிட்டார்.எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. வானத்தில் மீண்டும் பறப்பது போலிருந்தது.புது கேமரா புது பிலிம்ரோல் வாங்கிவிட்டேன்.
அப்போது நியூ டோன் ஸ்டுடியோ என்று கீழ்ப்பாக்கத்தில் ஒரு ஸ்டுடியோ இருந்தது. அங்குதான் படப்பிடிப்பு நடக்கும். அங்கு 3 வது தளத்தில் பாகவதர், என்.எஸ்.கே, ராஜகுமாரி எல்லாரும் இருப்பார்கள். ஆனால் எனக்கு அருகில் செல்லப் பயம் .தினசரி 3 படங்களாவது படப்பிடிப்பு நடக்கும்.
ஒரு நாள் வயதான கிழவர் போல ஒருவர் உட்கார்ந்து இருந்தார் அது யார் தெரியுமா சிவாஜி!அந்தப் படம் பராசக்தி, அவரது வாழ்க்கைக் கதை நாளிதழ்களில் வருகிறது.
புது கேமராவுடன் அவரிடம் சென்று போட்டோ எடுத்துக்கலாமா என்று தயங்கியபடி கேட்டேன்.
“அப் கோர்ஸ் யு கேன் டேக் இட்” என்றார். என்னைப் படித்த பையன் என்று நினைத்தவர், இப்படி ஆங்கிலத்தில் கூறியதும் எனக்கு அதிர்ச்சி. ஆச்சர்யம். சிவாஜி அதிகம் படிக்காதவர். அவரிடமிருந்து இப்படி ஒரு ஆங்கிலமா என்று எனக்கு கிறுகிறுத்தது.
வாங்கிய முழு ரோலிலுள்ள 12 பிலிமையும் அவரையே எடுத்து விட்டேன். எனக்கு ஒரே குஷி! சிவாஜியை படமெடுத்தேன் என்று பலநாட்கள் இதையே சொல்லிக் கொண்டிருந்தேன்.
மறுநாளும் ஸ்டுடியோ போனேன். காண்பித்தேன் பாராட்டினார். பிரமாதமாக வந்திருக்கிறது என்றார்.
அப்புறம் தினசரி ஸ்டுடியோ போவது வாடிக்கையாகி விட்டது.
காரில்தான் ஸ்டுடியோ ரவுண்ட்ஸ் போவேன்!
அப்போது அப்பா கார் வைத்திருந்தார். நானோ இப்படி ஸ்டுடியோக்கள் என்று சுற்றிக் கொண்டிருந்தேன். அப்பாவிடம் காரைக் கேட்டேன். காலையில் அவரை ஆபீஸில் விட்டுவிட்டு மாலைவரை பயன்படுத்திக் கொள்வதாகக் கூறினேன். உன் விருப்பம் என்று கூறி டிரைவரை நிறுத்திவிட்டார். அதன்பிறகு காலையில் அவரை ஆபீஸில் விட்டுவிடுவேன். மாலையில் அழைக்கச் செல்வேன். இடைப்பட்ட நேரங்களில் கார் என்னிடம்தான் இருக்கும்.
ஸ்டுடியோவுக்கு கேமராவுடன் காரில் போகும்போது எனக்கு நல்ல மரியாதை இருந்தது. நடிகர் நடிகைகளும் மதித்தார்கள். அந்த வகையில் கார் எனக்கு கௌரவமாகவும் உதவியாகவும் இருந்தது. கம்பீரமாகக் காலரைத் தூக்கிக் கொண்டு நடமாட வைத்தது.
ஸ்டுடியோ போகும் போது நடிகர், நடிகைகளை படத்தில் பணிபுரிவது போல படமெடுப்பேன். அப்போது அப்படி யாரும் எடுக்க மாட்டார்கள். தனித்தனியே படமெடுப்பேன்.நடிகர்களை நடிகையுடன் எடுப்பேன். தயாரிப்பாளர் நடிகருடன் எடுப்பேன். இப்படி தனிப்பட்ட படங்களாக எடுப்பேன். அப்படி எடுப்பதை அவர்களும் விரும்பினார்கள். பெருமையாகக் கருதினார்கள். அதனால் எனக்கு நல்ல மரியாதையும் கிடைத்தது.என்மேல் எல்லாருக்கும் பிரியமும் உண்டானது.
இப்படிப்பட்ட படங்களை தந்தி, மாலைமுரசு போன்ற பத்திரிகைகளுக்கும் கொடுப்பேன். அவை பிரசுரமாகும். அதைப் பார்த்து நட்சத்திரங்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.
அது 1954. தென்னிந்திய வர்த்தக சபை சார்பில் ஒரு பத்திரிகை வந்தது. மாதஇதழ் அது. உறுப்பினர்களுக்கு மட்டும் போகும் .அதற்கு படமெடுக்க வேலைபார்க்க விருப்பமா என்றார்கள் நானும் ஒப்புக் கொண்டேன். அப்போது நிறைய நட்சத்திரங்களை படங்கள் எடுத்துக் கொடுத்தேன். எல்லாமே தனிப்பட்ட வகையிலான படங்கள்தான்.
வீட்டில் இருக்கும் போது எடுத்தவை, காரில் இருக்கும் போது எடுத்தவை, செல்லப் பிராணிகளுடன் எடுத்தவை என இப்படி நிறைய எடுத்துக் கொடுத்தேன்.
தகவல் திரட்டும் ஆர்வம் வந்தது எப்படி?
தென்னிந்திய வர்த்தக சபை அலுவலகத்துக்கு அப்போது தினசரி செல்வேன். அங்கு ‘கால்ஷீட் புக்’ என்று ஒன்று இருக்கும். அதில் என்னென்ன படங்கள் எங்கெங்கு படப்பிடிப்பு நடக்கிறது என்கிற விவரம் இருக்கும். இப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என எல்லாப் படப்பிடிப்பு விவரமும் இருக்கும். அதைக் குறித்துக் கொண்டு அங்கே ஆஜராகி விடுவேன்.
இப்படி தகவல்கள் சேர்ந்தன. அதை எல்லாம் பதிவு செய்தேன். ஒரு கட்டத்தில் தென்னிந்தியாவில் தயாராகும் படவிவரங்கள் சேர்ந்தன .அவற்றை எல்லாம் மாதாமாதம் சேர்த்து திரட்டி தொகுத்தேன் அதன்பிறகு இதை ஒன்று விடாமல் சேகரித்தால் என்ன என்று தோன்றியது .அதற்கு முன் வெளியான விவரங்களையும் திரட்டினேன்.
1955ல் தென்னிந்திய படங்கள் பற்றியவிவரம் தேவை என்றால் என்னிடம் தேடி வருமாளவுக்கு சேகரித்து வைத்திருந்தேன்.
படத்தகவல்களுடன் சார்ந்த புகைப்படங்களையும் திரட்டினேன். தகவல்களுடன் இணைத்து தொகுத்தேன்.
இதைச் சில மாதங்களில் செய்து முடித்தேன் செத்துப் போன பட நெகடிவ்களையும் வாங்கி சேகரித்தேன்.
நான் வருவதற்கு முந்தைய 1931 முதல் 1954 வரையிலான தகவல்களையும் விடுபடாமல் சேகரித்தேன். பல வகையிலும் தேடினேன். பாட்டுப் புத்தகம், சென்சார் புத்தகம், கதை வசன புத்தகம். இப்படி பலவழிகளிலும் பலவற்றையும் பார்த்து சரிபார்த்து பிறகு தொகுத்தேன். இப்படிப் படம் சம்பந்தப்பட்ட தகவல்களை ஒரு தேடலோடு அர்ப்பணிப்போடு தேடித் தேடிப் பிடித்து சேகரித்தேன்.
இப்போதுள்ள மாதிரி நிறைய படங்கள், நெட் வசதி எல்லாம் அப்போது கிடையாது. அவ்வளவையும் பல அசௌகரியங்களுக்கு மத்தியில்தான் அலைந்து திரிந்துதான் செய்தேன்.
(…தொடரும் )