ஷபீர், அர்வின், பவித்ரா, ரவிராகவேந்திரர், ரோகிணி, ஜெயகுமார், பசங்க சிவகுமார், ரவி வெங்கட் ராமன் நடித்துள்ளனர் ஏ. ராகவேந்திர பிரசாத் இயக்கியுள்ளார் இசை ஜோஷ்வா ஸ்ரீதர். தயாரிப்பு மெயின்ஸ்ட்ரீம் புரொடக்ஷன்ஸ்.
இது ஒரு சைக்கோ த்ரில்லர். பொதுவாகசைக்கோ த்ரில்லர் எடுப்பவர்கள் ஏதாவது வாயில் நுழையாத உளவியல் கோளாறு ஒன்றை ஆதாரமாக எடுத்துக் கொள்வார்கள். இதில் ஓசிடி என்ற ஒன்றை அதாவது Obsessive-compulsive disorder எடுத்துக் கொண்டுள்ளனர்.
பிறருடன் சிறுவயதில் ஒப்பீடு செய்து திணிப்புடன் வளர்க்கப்படும் அழுத்தம் சிறுவனின் மனதில் குடிகொண்ட வன்மமாக மாறுகிறது. அது எப்படி வளர்ந்து பழிவாங்குகிறது என்பதே கதை.
படத்தின் விமர்சனத்துக்குள் போகும்முன் இது ஆரோக்கியமான பட மல்ல ; ஆபத்தான படம் என்று மட்டும் சொல்ல முடியும்.
நாயகன் பள்ளிப்பருவ சிறுவயதில் தன்னுடன் சக மாணவனை ஒப்பிடுவதை வெறுக்கிறான். அப்படி ஒப்பிடப்படும் சிறுவனின் தாயைத் தள்ளிவிட்டு காரில் அடிபட்டு இறக்க காரணமாகிறான். வன்மத்தில பெற்ற தாயையே கழுத்தில் கத்தியால் கீறி சாகடிக்கிறான். தந்தையையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறான்.
சிறுவர் ஜெயில் செல்பவன் அங்கும் போலீசை தாக்குகிறான். தப்பித்து வந்தவன் நல்லவனாக இருக்கும் தன் நண்பனை கெட்டவனாக்க ஒரு குழந்தையைக் கொலை செய்யத் தூண்டுகிறான். பெற்ற தந்தையை சாக்கு மூட்டையில் கட்டி வைத்து சித்திரவதை செய்கிறான்.
நண்பனைப் பழிவாங்க அவனது காதலியைக் கட்டிவைத்து சித்திரவதை செய்கிறான்.
தடை செய்யப்படவேண்டிய இவ்வளவும் நிறைந்த வக்கிர கதைதான். ‘54231’ இதற்கும் மேலும் இந்தப் படத்தைப் பார்க்கத்தான் வேண்டுமா?
போங்கப்பா நீங்களும் உங்கள் கதையும் என்று வெறுப்பூட்டுகிறது படம் .கதையே தவறாக உள்ளதால் நன்றாக இருந்த ஒளிப்பதிவும் இசையும் விழலுக்கு இறைத்த நீராகியுள்ளன.