கட்டை பிரம்மாச்சாரி என்று அழைக்கும் அளவுக்கு 40 வயதாகியும் திருமணமாகாத ஒருவரின் கதை.அவரது வலிகளை வேதனைகளை மனதைத்தொடும் வகையில் சொல்லாமல் கலகலப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
இப்படம் ‘வெள்ளி மூங்கா’ என்ற மலையாளப் படத்தை தழுவிய கதை. மலையாளத்தில் பிஜூ மேனன் நடித்த பாத்திரத்தில் சுந்தர்.சியும், நிக்கி கல்ரானி பாத்திரத்தில் பூனம் பாஜ்வாவும் நடித்துள்ளனர். 2014-ம் வருடத்திலேயே மலையாளத்தில் வசூலைக் குவித்த படமாம் அது .
சுந்தர்.சி தான் திருமணம் தள்ளிப்போன அந்த முத்தின கத்திரிக்கா. தனது தம்பிக்கும், தங்கைக்கும் திருமணம் செய்து வைத்து விட்டு அக்கடா என்று திரும்பிப்பார்த்தால் ,அவருக்கு 40 வயதாகி விடுகிறது. எனவே திருமணம் செய்து கொள்ளாமல், அம்மாவின் சமையலை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் மத்தியில் பிரபலமாகாத ஒரு துக்கடா கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்து கொண்டு, உள்ளூரில் அரசியல் நடத்துகிறார்.
இவருக்கு எதிராக வேறு கட்சிகளில் உள்ள அரசியல்வாதிகள் வி.டி.வி.கணேசும், அவருடைய தம்பி சிங்கம்புலியும். அவர்கள் இருவரும் சேர்ந்து சுந்தர்.சியை ஒழித்துக் கட்ட திட்டமிடுகிறார்கள். அவர்களின் சதிகளில் இருந்து தப்புகிறார், சுந்தர்.சி. இவருக்கு பூனம் பாஜ்வா மீது காதல் வருகிறது. பூனம் பாஜ்வாவின் அப்பா ரவிமரியா, சுந்தர்.சியை எதிரியாக பார்க்கிறார்.அதற்கு ஒரு காரணம் உள்ளது.
இந்த நிலையில், சட்டசபை தேர்தல் வருகிறது. அதில், சுந்தர்.சி போட்டியிட்டு வெல்கிறார். அதன் பிறகாவது அவர் பூனம் பாஜ்வாவுடனான காதலில் வெற்றி பெறுகிறாரா, இல்லையா? என்பது படத்தின் உச்சக்கட்ட காட்சி.
நாற்பது வயதை தாண்டிய அரசியல்வாதி கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார், சுந்தர்.சி. வெள்ளை வேட்டி-சட்டை, கையிடுக்கில் ஒரு தோல்பை சகிதம் வரும் அவருடைய தோற்றமே பேசாமலேயே பேஷ் பேஷ் போட வைத்து விடுகிறது. அப்படி ஒரு பாத்திரப் பொருத்தம் . அவரும், பூனம் பாஜ்வாவும் சந்தித்துக் கொள்ளும் அறிமுக காட்சியே, அமர்க்களம். முதல் பார்வையிலேயே பூனம் பாஜ்வா மீது சுந்தர்.சிக்கு காதல் வருவதும், பூனம் பாஜ்வா அம்மன் அருள் வந்து சாமியாடுவதும், ஜாலி ரகளை.
பூனம் பாஜ்வா கழுக் மொழுக்கென செழிப்பான தோற்றத்தில், படம் முழுக்க வந்து வசீகரிக்கிறார். சதீஷ், வி.டி.வி.கணேஷ், சிங்கம்புலி, யோகிபாபு, ரவிமரியா, ஸ்ரீமன், சித்ராலட்சுமணன், சுமித்ரா, கிரண் என அத்தனை பேரும் ‘காமெடி’ பண்ணுகிறார்கள்.
குறிப்பாக, சுந்தர்.சியை போட்டுத்தள்ள அவருடைய போட்டோவை அடியாட்களிடம் யோகி பாபு கொடுப்பதும், அதை சுந்தர்.சியே வந்து பார்க்கும் அளவுக்கு ரவுடிகள் பார்த்துக் கொண்டிருப்பதும், ‘‘பார்க்கத்தானே சொன்னேன். அவனே வந்து பார்க்கிற வரையா பார்க்க சொன்னேன்?’’ என்று யோகி பாபு சொல்வதும், தியேட்டர் அதிரும் நகைச்சுவை.
‘‘நாற்பது வயதுக்கு மேல்தான் எம்.ஜி.ஆர். ஹீரோ ஆனார்’’ என்று சுந்தர். சி சொல்லும் போது ‘‘ஆனால், நாற்பது வயதில் டெண்டுல்கர் ரிட்டயர்டு ஆகிட்டார்’’ என்று யோகிபாபு பதிலடி கொடுப்பது போன்ற வசன வரிகள், சிரிப்பு மத்தாப்புகள்.‘‘ஒரு வயதுக்கு மேல வயசுப்பொண்ணை லவ் பண்றது, நாய் துரத்தும்போது ஜட்டி அவிழ்கிற மாதிரி. போனா போவுதுன்னு ஓடவும் முடியாது. நிற்கலாம்னு நின்னு போடவும் முடியாது’’ என்று சுந்தர்.சி சொல்லும் இடம், இன்னொரு கலகல இடம்.இப்படி படம் முழுக்க வசன ரகளைகள் உண்டு.
முத்தின கத்திரிக்கா என்கிற தலைப்பு முன்பு ஒரு மாதிரியாக இருந்தது.ஆனால் படத்தைப் பார்த்த பிறகு பிடித்துப் போகிறது. பொருத்தமாகவே உள்ளது.
தமிழ்ப்படுத்தியதில் இப்படம் மலையாளப் படத்தின் தழுவல் என்பது தெரியவேவில்லை. காமெடி , அரசியலோடு போய்விடக் கூடாது என்பதற்காக பேமிலி செண்டிமெண்ட்டிற்காக சுமித்ரா-சுந்தர்.சி பாசத்தைக் காட்ட வேண்டி காபியில் சர்க்கரை போடாமல் கொடுக்க வைத்து, இதற்கு குடும்பத்தினர் பதில் மரியாதை தரும் காட்சியை பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் வேங்கட் ராகவன்.
சித்தார்த் விபினின் இசையில் ‘எனக்கென்ன ஆச்சோ’, ‘சும்மா சொல்லக் கூடாது’ பாடல் காட்சிகளை ரசிக்கலாம் .டெல்லி நகர அழகை படம் பிடித்து இருப்பதில், ஒளிப்பதிவாளர் பானு முருகன் கவர்கிறார்.
குடும்ப உறவுகள் மற்றும் காதல் கதையை அரசியல் பின்னணியில் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார், இயக்குநர் வேங்கட் ராகவன். அவர் சுந்தர் சியிடம் பணியாற்றியதால் அவரைப் போலவே சிந்தித்துள்ளார் படம் முழுக்க சுந்தர் சி பாணி. முதல் பாதியின் , வேகம். இரண்டாம் பாதியில் குறைவது சிறு குறை.சில இடங்களில் வரும் இரட்டை அர்த்த வசனங்களை தவிர்த்திருக்கலாம். ஆரம்பம் முதல் இறுதி வரை, படம் பார்ப்பவர்களை சிந்திக்க வைக்க வேண்டாம் சிரிக்க வைத்தால் மட்டுமே போதும் என்கிற நோக்கத்தில் படமெடுத்துள்ள வேங்கட் ராகவன் அதில் வெற்றி பெற்று இருக்கிறார்.