இயக்குநர் சொன்ன கதையைக் கேட்டவுடனே நடிக்கச் சம்மதித்த ஆர்.கே சுரேஷ் உடனடியாகப் படப்பிடிப்புக்கும் தயாராகியிருக்கிறார்.
விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ் , இயக்குநர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ க்குப் பின் ஒரு நடிகராக அழுத்தமான அடையாளம் பெற்றார். அதன் பிறகு தொடர்ச்சியான பட வாய்ப்புகள் வரவே வரிசையாகப் படங்களில் நடித்து வருகிறார் .
ஒரு வில்லனாக அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ் , இப்போது தனி நாயகனாக ‘தனி முகம் ‘ , ‘பில்லா பாண்டி’ போன்ற படங்களிலும் வேறு நாயகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
ஓய்வில்லாமல் நடித்து வரும் அவரிடம் ஓர் இயக்குநர் கதை சொல்ல முன் வந்த போது தேதிகள் இல்லை என்று ஆரம்பத்தில் தவிர்த்திருக்கிறார். கதையைக் கேளுங்கள் என்று இயக்குநர் கேட்டபோது அரை மனதுடன் கேட்க உட்கார்ந்தவர் , கதையைக் கேட்டு முடித்தவுடன் எப்போது படப்பிடிப்புக்குப் போகலாம் என்றிருக்கிறார். அது மட்டுமல்ல தனது தேதிகளைச் சரி செய்து கொடுத்துள்ளார். விரைவில் படம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அந்தப் படம் தான் ‘வேட்டை நாய் ‘. அப்படிக் கதை சொல்லி ஆர்.கே. சுரேஷைக் கவர்ந்திருப்பவர் தான் எஸ்.ஜெய்சங்கர். இவர் ஏற்கெனவே அப்புக்குட்டியை நாயகனாக்கி இயக்கிய ‘மன்னாரு ‘ படம் பாலுமகேந்திரா போன்ற படைப்பாளிகளால் பாராட்டப்பட்டது. ‘வேட்டை நாய் ‘இவரது இரண்டாவது படம் .
நாயகனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்க, நாயகியாக ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்ஷா நடிக்கிறார். ராம்கி, வாணி விஸ்வநாத் , தம்பி ராமையா, சரவண சக்தி , ‘என் உயிர்த் தோழன் ‘ ரமா ஆகியோரும் நடிக்கிறார்கள் . இப்படத்தை தாய் மூவீஸ் தயாரிக்கிறது.
படம் பற்றி இயக்குநர் எஸ். ஜெய்சங்கர் பேசும் போது ” படத்தின் நாயகன் முரடன் என்றால் அப்படி ஒரு முரடன். என்கிற அளவுக்குக் கடினமான மூர்க்கனாக இருப்பவன். ஆனால் அடிப்படையில் நல்லவன். இவ்வளவு நல்லவனா என்று அவனுக்குத் தெரியாது அப்படிப் பட்டவனை உலகையே அறியாத குழந்தைத்தனம் கொண்ட பெண் அவனை யார் என்று உணர வைக்கிறாள்.
இப்படிப்பட்ட இரு துருவ குணச்சித்திரங்களும் எப்படி இணைய முடியும்.?
அவர்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர் கொண்டார்கள் என்பதே கதை.
இந்த நாயகன் பாத்திரத்தில் ஆர்.கே. சுரேஷ் சாரைத் தவிர யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அப்படியே அவரிடம் கதை சொன்னேன் . பிடித்து விட்டது. இதோ அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளோம். ” என்கிறார்.
மலையும் மலை சார்ந்த கொடைக்கானல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.