’99/66′ (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு) திரைப்பட விமர்சனம்

ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா, சபரி, ரோஹிந்த், பவன் கிருஷ்ணா, சிங்கம்புலி,கே.எஸ்.ஜி.வெங்கடேஷ்,எஸ்.சினேகா
குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா பி.எல்.தேனப்பன்,சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ் ,அம்பானி சங்கர்,முல்லை, ோதண்டம்,
தயாரிப்பாளர், இயக்குநர் எம்.எஸ். மூர்த்தி நடித்துள்ளனர்.

கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்துத் தயாரித்து இயக்கியுள்ளார் எம்.எஸ். மூர்த்தி.
ஒளிப்பதிவு – சேவிலோ ராஜா ,படத்தொகுப்பு – மீனாட்சி சுந்தரம் ,கலை இயக்குநர் – ஜெயமுருகன் ,தயாரிப்பு நிறுவனம் -மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்.இணைத் தயாரிப்பு – சுஜாதா மூர்த்தி.

நாயகி ரக்சிதா மகாலட்சுமி – சபரி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் .புதுமண ஜோடியான அவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் பி பிளாக்கில் 66 எண் ப்ளாட்டை வாங்கி அதில் புதிதாகக் குடி வருகிறார்கள். அதே குடியிருப்பின் சி பிளாக்கில் 99 வது எண் வீட்டில் இருக்கும் ஸ்வேதா, ரக்சிதாவுடன் நட்பாகிறார்.அவர் வீட்டுக்கு ரக்சிதா செல்கிறார் அழகான வீடாக இருக்கிறது.அவர்களது நட்பு வளர்கிறது.அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.மூர்த்தி இரவு நேரங்களில் வெளியே செல்ல முயல்கிறார்.அவரை ஆந்தை தடுத்து நிறுத்துகிறது.ஏதோ மனித சந்தடியற்ற அமானுஷ்யம் அங்கு இருப்பதாகத் தெரிகிறது.காதல் மணம் புரிந்து கொண்ட கணவனே ரக்சிதாவைக் கொலை செய்ய முயற்சி செய்கிறார்.பல்வேறு முயற்சிகளில் தெய்வாதீனமாக ரக்சிதா தப்பித்துப் பிழைத்துக் கொள்கிறார்.இது ஒரு புறம் இருக்க இரவு நேரத்தில் ஸ்வேதாவை அவரது கணவர் கொலை செய்ய முயல்வதாக ரக்சிதா உணர்கிறார்.அவரைக் காப்பாற்ற பிறரது உதவியை நாடும்போது,ஏற்கெனவே ஸ்வேதா இறந்துவிட்டார் என்று தெரிகிறது.அதுமட்டுமல்ல அந்த 99 ஆம் வீட்டில் யாரும் வசிக்காமல் இருப்பதும் தெரிகிறது. தண்ணீர் கேன் போடுபவனும் அந்த ஒரு சக்தியால் பாதிக்கப்படுகிறான்.அதுமட்டுமில்லாமல் அங்கு நட்பாக இருக்கும் பெண்களுக்கும் அதே அமானுஷ்ய அனுபவம் ஏற்படுகிறது. குடும்பத் தலைவிகள் தங்கள் கணவர்களைக் கொலை செய்ய முயற்சி செய்வதாக உணர்கிறார்கள். அப்படியானால் ரக்சிதாவோடு பழகிய அந்த ஸ்வேதா யார்?அது மட்டுமில்லாமல்அங்கே மறைந்துள்ள அமானுஷ்ய சக்தி எது ? இப்படிப் பல கேள்விகளுக்குத் திகில் கலந்தும் திருப்பங்கள் நிறைந்தும் கிளுகிளுப்போடும் பதில் சொல்லியிருக்கும் படம் தான் ’99/66′ (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு).  

திரைப்படங்களில் திகில் கதை, அமானுஷ்ய சக்தி என்றாலே காட்டில் தனியே உள்ள வீடு, பாழடைந்த பங்களா என்பதிலிருந்து இப்போது அடுக்குமாடி குடியிருப்பாக மாற்றம் அடைந்துள்ளது.அப்படிப்பட்ட சட்டகத்தில் இந்தக் கதை அடங்கியிருந்தாலும் திருப்பங்களும் திகிலும் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சியில் பிரபல முகமாக மாறியுள்ள நடிகை ரக்சிதா மகாலட்சுமி, சமூக ஊடகங்களில் பிரபலமாக இருக்கிறார்.அவர்தான் படத்தில் பிரதான நாயகி. அவருக்குள் ஆவி நுழைந்து அவர் வெளிப்படுத்தும் முகபாவனைகள் உடல் மொழிகள் பயமுறுத்தி ரசிக்க வைக்கின்றன.அச்சத்தையூட்டிய அளவிற்கு அவர் அழகையும் காட்சிகளில் வெளிப்படுத்தி இருக்கலாம்.மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா, புத்தரின் கொள்கை வசப்பட்டவராக இருக்கிறார்.உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்ற கருணைகொண்டவராக இருக்கிறார்.

நாயகர்களாக குணாவாக வரும் சபரி, கரணாக வரும் ரோகிந்த் இருவரும் புதுமுகங்கள் போலத் தோன்றாமல் முடிந்தவரை நடித்துள்ளார்கள்.மனைவியை ஏமாற்ற நல்லவர் போல் நடித்து தங்கள் எதிர்மறைக் குணச்சித்திரத்தை அவர்கள் வெளிப்படுத்தி உள்ளார்கள்.ரக்சிதாவின் தோற்றத்திற்கு ஏற்ற ஜோடியாக சபரி இல்லாதது ஓர் உறுத்தல்.

பஞ்ச் பரமேஷ்,திகில் தினேஷ்,கசமுசா கருணாஸ் என்கிற பெயரில் சாம்ஸ், முல்லை, கோதண்டம் வந்து கிச்சு கிச்சு முட்டுகிறார்கள்.துர்கா தேவி அன்னையாராகச் சிறப்புத் தோற்றத்தில் வரும் கே.ஆர்.விஜயா, அனைவரும் தீய சக்தி என்று பயந்து கொண்டிருக்கும் போது அது நல்ல ஆத்மா என்று எல்லோருக்கும் ஆறுதல் தருகிறார்.

இயக்குநர் எம்.எஸ்.மூர்த்தி, பவன் கிருஷ்ணா, சிங்கம்புலி, பி.எல்.தேனப்பன் ஆகியோர் திரைக்கதையின் ஓட்டத்திற்கு உதவியுள்ளார்கள்.

அடுக்குமாடி குடியிருப்பிலேயே பெரும் பகுதி கதை நடந்தாலும் அந்தக் குறை தெரியாமல் காட்சிகளை மாறுபட்ட கோணங்களில் படப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் சேவிலோ ராஜா.படத்தொகுப்பாளர் மீனாட்சி சுந்தரம் இயக்குநர் எதிர்பார்த்த பாதையில் பயணம் செய்துள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கித் தயாரித்திருக்கும் எம்.எஸ்.மூர்த்தி, அடுக்குமாடிக் குடியிருப்பில் அமானுஷ்ய சம்பவங்கள் என்பதை வைத்துக் கொண்டு ஒரு முழு நீளப் படமாக வணிக ரீதியில் உருவாக்கி இருக்கிறார் . இந்தத் திகில் கதையின் நடுவே பிற உயிர்களிடத்தில் அன்பு காட்ட வேண்டும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும், பெண்கள் மதிக்கப்பட வேண்டும் என்கிற கருத்தையும் கூறி இருக்கிறார்.

மொத்தத்தில், ’99/66′ (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு) பெண்களுக்குத் தீங்கிழைப்பவர்களைப் பேய் அடித்தாலும் சலிப்பூட்டாத ஒரு வணிகப்படமாக இருக்கிறது எனலாம்.