‘சூரரை போற்று’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான, 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘சூரரை போற்று’. இந்த படத்தை சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனமும், அபூன்டான்டியா என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனமும் இணைந்து ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு, கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இந்த படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், ‘ 2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் அபுன்டான்டியா என்டர்டெய்ன்மென்ட் ஆகியவை இணைந்து ‘சூரரைப்போற்று’ படத்தின் ஹிந்தி ரீமேக்கினை தயாரிக்கக் கூடாது எனவும், ஹிந்தி ரீமேக் படத்தின் பணிகளுக்கு உடனடியாக தடை விதிக்குமாறும்’ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதியரசர், 2டி என்டர்டெய்ன்மென்ட் தாக்கல் செய்த ஆதாரங்களை ஏற்றுக் கொண்டு, இந்த வழக்கில் உள்ள தடையை நீக்கி உத்தரவிட்டார்..
முன்னதாக இந்த வழக்கில் 2டி நிறுவனம், கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பாக அவர் எழுதிய ‘சிம்ஃப்ளி ஃப்ளை’ என்ற நூலிற்கான காப்புரிமை தொகை, அவரது சம்மதம் மற்றும் அதற்கான திரைப்பட உரிமை தொகை உள்ளிட்ட அனைத்து கட்டணத்தையும் 2டி நிறுவனம் முழுமையாக கேப்டன் கோபிநாத்திடம் நேரடியாக செலுத்தி இருக்கிறது. அத்துடன் 2டி நிறுவனம், இவ்விவகாரம் தொடர்பாக ஒப்புதல் மற்றும் உதவி செய்ததற்காக சீக்யா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கு பெரும் தொகையை (காப்புரிமை உரிமம் பெறுவதற்கான இடைத்தரகு தொகையாக ) முழுமையாக வழங்கியிருக்கும் ஆதாரங்களையும் தாக்கல் செய்தது.
இதன் மூலம் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மற்றும் அபுன்டான்டியா என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனம், விமர்சன ரீதியாக தமிழில் பெரிய வரவேற்பையும், பாராட்டையும் பெற்ற ‘சூரரைப்போற்று’ ஹிந்தி பதிப்பிற்கான பணிகளைத் தொடர்வதற்கான தடை நீக்கப்பட்டிருக்கிறது.
‘சூரரை போற்று’ படத்தை தமிழில் இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா, ஹிந்தியிலும் இயக்குகிறார். நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் அபுன்டான்டாயா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து, இப்படத்திற்கான பணிகளை விரைவில் முழுவீச்சில் தொடங்குகிறது.
இதுதொடர்பாக 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் பேசுகையில், “இந்த தீர்ப்பின் மூலம் நீதி மீண்டும் ஒருமுறை உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நீதித்துறையின் மீது நேர்மறையான எண்ணம் மேலோங்கி இருக்கிறது. ‘சூரரை போற்று’ படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். இப்படத்தின் ஹிந்தி பதிப்பிற்கான பணிகள் விரைவில் முழுவீச்சில் நடைபெறும் .”என்றார்.
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரை போற்று’ திரைப்படம், 78வது கோல்டன் குளோப் விருதுகளுக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவின்கீழ் திரையிடப்படுவதற்காக தேர்வு செய்யப்பட்ட பத்து இந்திய படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது. இந்தியாவில் அமேசான் பிரைம் டிஜிட்டல் தளத்தில் அதிகளவு பார்வையாளர்களால் பார்வையிடப்பட்ட பிராந்திய மொழி படமாகவும் ‘சூரரைப்போற்று’ அமைந்தது. தற்போது ஐஎம்டிபி எனப்படும் சர்வதேச திரைப்படங்களை வரிசைப்படுத்தும் இணையதள பட்டியலில் அதிக மதிப்பீடு செய்யப்பட்ட மூன்றாவது படமாக, ( 9.1 என்ற மதிப்பீட்டை ) ‘சூரரைப் போற்று ’ பெற்றிருக்கிறது. இந்த பட்டியலில் ‘ஷாவ்ஷாங் ரிடெம்ஷன்’ மற்றும் ‘த காட்பாதர்’ ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ‘சூரரைப்போற்று’ இடம் பிடித்திருக்கிறது.
இதனிடையே மெல்பேர்ன் நகரில் நடைபெற்ற 12 ஆவது இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த படமாக சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகராக நடிகர் சூர்யாவும் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.