‘RRR’ விமர்சனம்


 ‘

 ‘ரத்தம் ரணம் ரௌத்திரம்’

தேசபக்தியும் சென்டிமென்ட்டும் பிரம்மாண்டமும் இணைந்த ஒரு கலவை இந்திய சினிமாவின் வெற்றி பெற்ற சூத்திரமாகி வருகிறது அப்படி ஒரு சூத்திரத்தை அமைத்துக்கொண்டு ராஜமெளலி எடுத்திருக்கும் படம் தான் RRR எனப்படும் ‘ரத்தம் ரணம் ரௌத்திரம்’ படம்.

காட்சிகளின் பிரம்மாண்டம் கொஞ்சம் மாயாஜாலம் ,கொஞ்சம் சென்டிமென்ட் என்பதைச் சரிவிகிதத்தில் கலந்து வெற்றி பெற்றவர் ராஜமௌலி .இப்படத்திலும் அதே கலவையுடன் வந்திருக்கிறார்.
1920-களில் வெள்ளையர்களை எதிர்த்து நின்ற அல்லூரி சீதாராம ராஜு, கொமாரம் பீம் இருவரின் சிறு வரலாற்று ஆதாரத்துடன் தேவையான அளவு கற்பனை சேர்த்து பிரமாண்டமான பொழுதுபோக்குப் படமாக மாற்றியிருக்கிறார் ராஜமௌலி.

தேச விசுவாசமும் வெள்ளையர்கள் அதிகாரத்தின் ராஜவிசுவாசமும் எதிரெதிர் நின்று மோதினால் என்ன ஆகும் என்பதைப் பிரமாண்ட காட்சிகள் மூலம் சொல்லியிருக்கிறார்.

கதைதான் என்ன?

பழங்குடியின சிறுமி ஒருத்தியை வெள்ளைக்கார துரையும் அவர் மனைவியும் எடுத்துக்கொண்டு போய்விட, அந்த இனத்தின் காப்பாளன் கொமாரம் பீம் அச்சிறுமியை மீட்க டெல்லி வருகிறார். இன்னொரு பக்கம் நீதி, நேர்மை என பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அடிபணிந்த காவல் அதிகாரியாக அல்லூரி சீதாராம ராஜு மண்ணின் மக்களையே எதிர்க்கிறார்.

இந்த எதிரெதிர் துருவங்களும் விதிவசத்தால் நண்பர்களாக மாற, இடையில் துரோகம் சென்டிமென்ட், நிறைய ஆக்ஷன், கொஞ்சம் காதல் என எல்லாமே எட்டிப் பார்க்க, மூன்று மணி நேரம் பிரமாண்ட விருந்தாக விரிகிறது இந்த ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’.

இரு வேறு முக்கிய சுதந்திரப் போராட்ட வீரர்கள்போராளிகளாக ஆவதற்கு முன் நண்பர்களாக வாழ்ந்திருந்தால் எப்படியிருக்கும் என்ற தன் கற்பனைக்கு உயிர் கொடுத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி.

இயக்குநரின் கனவை நிறைவேற்ற ராம் சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் தோள் கொடுத்திருக்கிறார்கள். இருவரில் யாருக்கு அதிக முக்கியத்துவம் என்ற கேள்விக்கே இடம் எழாதவாறு இருவரின் கதாபாத்திரங்களும் சமன் செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

இருவரும் இணைந்து ‘நாட்டுக் கூத்து’ பாடலுக்குப் போட்டிப் போட்டு ஆடுவது தியேட்டருக்கான திருவிழா கொண்டாட்டம்.

சிறப்புத் தோற்றத்தில் அஜய் தேவ்கன் பிளாஷ்பேக் காட்சிகளில் வருகிறார்.

ஆலியா பட், சமுத்திரக்கனி, ஷ்ரேயா ஆகியோருக்குப் பெரிய வேலை எதுவும் இல்லை. வில்லன் ஸ்காட் துரையாக ரே ஸ்டீவன்சன் மிரட்டுகிறார். அவரின் மனைவியாக அலிசன் டூடி கொடூர வில்லியாக வருகிறார். 

படத்தின் மிகப்பெரிய பலம் அதன் ஆக்ஷன் காட்சிகளும் அது உருவாக்கப்பட்ட விதமும்தான்.ஸ்டன்ட் இயக்குநர்களான சாலமன் மற்றும் நிக் பவல் ஆக்ஷன் காட்சிகளில் தெறிக்க விட்டிருக்கிறார்கள். கே.கே.செந்தில் குமாரின் ஒளிப்பதிவும், விஷூவல் எஃபக்ட்ஸ் ஶ்ரீனிவாஸ் மோகனும் இதில் தொட்டிருப்பது இந்திய சினிமாவின் அடுத்த கட்ட உயரம் எனலாம்.

 மரகதமணியின் பின்னணி இசை ஓகே. பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை .

பொதுவாகவே ராஜமௌலியின் படங்களில் பிரமாண்டத்தைத் தாண்டி அதன் உயிரோட்டமாக இருப்பவை அதன் உணர்வுபூர்வமான காட்சிகள்.

மூன்று மணி நேரப் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் உச்சபட்ச என்டர்டெயின்மெண்டாக இருக்க, உணர்வுபூர்வ காட்சிகள் அதன் உச்சத்தைத் தொடாமல் போய்விடுகின்றன.

இந்த ‘ரத்தம் ரணம் ரௌத்திரம்’ திரையரங்கு நோக்கி ரசிகளை இழுக்கும் வல்லமை கொண்ட வணிகப் படமாக உருவாகி உள்ளது என்பதை மறுக்க முடியாது.