தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் புதுமுகங்கள் என்றால் இயக்குநர், ஹீரோ, ஹீரோயின் என ஒருசிலர் இருப்பார்கள். ஆனால் கோலிவுட் வட்டாரத்தில் தயாரிப்பாளர் முதல் இசையமைப்பாளர் வரை முற்றிலும் புதுமுகங்களின் முயற்சியாக தயாராகி உள்ள படம் ‘வாய்தா’. அறிமுக இயக்குநர் மகிவர்மன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் ‘வாய்தா’ படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகிறார்.’ஜோக்கர்’, ‘கே.டி. என்கிற கருப்பத்துரை’ ஆகிய படங்கள் மூலம் பிரபலமான நடிகர் மு.ராமசாமி, நாசர், அறிமுக நாயகி ஜெசிகா பவுலின், ‘நக்கலைட்ஸ்’ புகழ் பிரசன்னா மற்றும் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவைச் சேர்ந்த கலைஞர்கள் சிலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சர்வதேச அளவில் 20க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்ததோடு, அரசியல் கட்சி தலைவர்கள் நல்லக்கண்ணு, முத்தரசன், டி.ராஜா, கே.பாலகிருஷ்ணன், சி.மகேந்திரன், சீமான் மற்றும் திரைப்பிரபலங்கள் பொன்வண்ணன், நாசர், கவிதா பாரதி உள்ளிட்ட ஏராளமானோரது பாராட்டுக்களையும் குவித்து வருகிறது. முதன் முறையாக சலவை தொழில் செய்யும் சமூகத்தினர் பற்றியும், நீதிமன்றம் சாமானிய மனிதர்களை அணுகும் விதம் குறித்தும் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏற்கனவே பலமுறை ரிலீசுக்காக வாய்தா மேல் வாய்தா வாங்கிய திரைப்படம் மே 6ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் அப்போது ஏற்பட்ட சிக்கல் காரணமாக படத்தை மே 27ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ரிலீசுக்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் வேலைக்கு புதிதாக சிக்கல் உருவாகியுள்ளது.
வாய்தா படம் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்துவதாகவும், சாதி மோதல்களை உருவாக்கும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராஜகுல சமூக நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகார் மனுவில் சாதி வன்மத்தை தூண்டும் விதமாக இயக்குநரும், தயாரிப்பாளரும் படத்தை எடுத்துள்ளதாகவும், வரும் 27ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாக உள்ள வாய்தா திரைப்படத்தை ஈரோடு மாவட்ட திரையரங்குகளில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.