காசியின் பின்னணியில் ஒரு காதல் கதையாக உருவாகி இருக்கிறது ‘பனாரஸ்’ .
கங்கைக் கரையோரம் மலர்ந்துள்ள காதல் கதை இது எனலாம்.ஆனால் அத்துடன் டைம் லூப் என்கிற விஞ்ஞான விஷயத்தைச் சேர்த்துக்கொண்டு காதல் கதையைப் பின்னி உள்ளார்கள்.
காசி என்பது பாவங்களைத் களைகிற இடமாக மக்களால் நம்பப்படுகிறது.காசிக்குச் சென்றால் கர்ம வினை தீரும் என்பார்கள். அப்படி இப்படத்தின் கதாநாயகன் ஜையித்கான் கதாநாயகி சோனல் மாண்டெரியாவுடன் விளையாட்டுக்காகப் பழகி நெருக்கமாக இருப்பதைப் போல் ஒரு புகைப்படத்தைச் சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார். இது அதிவேகமாகப் பரவி சோனலுக்குப் பெரிய அவமானத்தையும் களங்கத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி விடுகிறது. இந்தக் களங்கத்தைக் களைய , தான் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கேட்டு, பரிகாரம் தேடி கதாநாயகன் ஜையித்கான், கதாநாயகி சோனல் கோபித்துக் கொண்டு சென்றுள்ள அவரது சித்தப்பா வீடிருக்கும் பனாரஸ்ஸுக்கு அதாவது காசிக்குச் செல்கிறார்.
மோதலில் தொடங்கும் கதை காதலில் முடிகிறதா?
கதாநாயகியிடம் மன்னிப்பு கிடைத்ததா இல்லையா? அவர்களுக்குள் காதல் மலர்ந்ததா ? என்பதுதான் கதை.
கதாநாயகன் ஜையித்கான் ஒரு புதுமுக நடிகர் என்று நம்ப முடியாத அளவிற்குத் தவிப்பும் காதலும் மனதில் குற்ற உணர்ச்சியைச் சுமந்து மனச்சிக்கலில் அலைந்து திரியும் தருணங்களிலெல்லாம் இயல்பான நடிப்பைக் கொண்டு வருகிறார்.
கதாநாயகி சோனலும் ஒன்றும் குறை வைக்கவில்லை. அழகையும் நடிப்பையும் அள்ளி அள்ளி வழங்கியுள்ளார்.பார்க்கப் பாந்தமாக குடும்பப் பாங்காக இருப்பது கூடுதல் பலம்.அவரது தோற்றமே அவர் பாத்திரத்தின் மீது அனுதாபத்தை அள்ளிக் கொண்டு செல்கிறது.
அச்யுத்குமார் , ஸ்வப்னா ராஜ், தேவராஜ் உள்ளிட்ட நடிகர்களும் தங்கள் பங்கைக் சரியாகச் செய்திருக்கின்றனர்.போட்டோகிராபராக, ஆட்டோ ஓட்டுநராக, நாயகனின் நண்பராக என நகைச்சுவை வேடத்திலேயே பல முகம் காட்டியுள்ள சுஜய் சாஸ்திரியும் நடிப்பால் கவனம் பெறுகிறார்.
அத்வைத குருமூர்த்தியின் ஒளிப்பதிவில் காசி நகரத்து அழகையும் கங்கை நதியின் பிரம்மாண்டத்தையும் இயற்கை எழிலையும் அங்கே நிலவும் ஆன்மீக மணத்தையும் காட்சிகளாக்கிப் படத்தில் நம்மை வேறு ஓர் அனுபவத்திற்கு இட்டுச் செல்கிறார்கள். கங்கை நதி அழகும் கங்கைக் கரை வெளியும் கண்களை நிறைக்கின்றன.
அஜனீஷ் லோக்நாத் இசையில் பழனி பாரதி எழுதிய பாடல்கள் கேட்பதற்கு இதமாக உள்ளன.கதை ஓட்டத்திற்கு ஊறு செய்யவில்லை.
கதாநாயகன் கதாநாயகியாக நடித்த இருவருமே பார்ப்பதற்கு அழகாகவும் பொருத்தமாகவும் இருப்பதால் ரசிகர்கள் மனதை அள்ளி வெல்லுகிறார்கள்.ஒரு காதல் கதைக்கு முக்கியமான அம்சம் இதுதான்.இதே கதையை உணர்ச்சி பூர்வமாக மனதைத் தொடும் வகையில் காட்சிப்படுத்தி உருவாக்கி இருக்கலாம். ஆனால் டைம் லூப் என்ற விஷயத்தை ஏன் சேர்த்தார்கள் என்பது தெரியவில்லை.
இயக்குநர் ஜெயதீர்த்தாவுக்கு காதல் கதை அமைப்பது கைவந்த கலையாக உள்ளது.இயல்பான பாணியில் அதைச் சொல்லியே வெற்றி பெறலாம்.
டிக்கெட் இல்லாமல் நம்மை காசிக்கு அழைத்துச் சென்று சுற்றிக்காட்டுகிற அனுபவத்தைத் தருகிறது பனாரஸ் படம். அதற்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம்.