விஷால், பிரபு, சுனைனா, ரமணா ,முனீஸ் காந்த் ,தலைவாசல் விஜய்,மாஸ்டர் லிரிஷ் ராகவ், வினோதினி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ.வினோத்குமார் இயக்கியுள்ளார்.பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
நடிகர் சங்கச் செயல்பாடுகளின் மூலம் நண்பர்களாக நெருங்கிய ரமணா மற்றும் நந்தா ஆகியோரைத் தயாரிப்பாளர்களாக்கி விஷால் நடித்துள்ள படம் இந்த ‘லத்தி’ .
ரானா புரொடக்ஷன் சார்பில் நடிகர்கள் ரமணாவும் நந்தாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
லத்தி சார்ஜ் செய்வதில் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கும் விஷால் ஒரு பெரிய தாதாவின் மகனை லத்தி சார்ஜ் செய்கிறார் அதாவது லாடம் கட்டுகிறார்.தாதாவின் மகன் பழி வாங்கத் துடிக்கிறார்.அமைச்சர்களே மிரளும் தாதாவிடம் விஷால் சிக்கிக் கொள்கிறார் .அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை.
ஒரு சாதாரண போலீஸ்காரராக வருகிறார் விஷால்.அவரது மனைவி சுனைனா . இவர்களுக்கு ஒரு மகன்,பள்ளி செல்லும் பிள்ளை லிரிஷ் ராகவ். தவறுதலாக குற்றவாளி அல்லாத ஒருவரை அடித்து துன்புறுத்தியதால் மனித உரிமை கமிஷனின் புகாரின் பேரில் விஷால் சஸ்பெண்டில் இருக்கிறார்.
மீண்டும் பணியில் சேர அலைந்து கொண்டிருக்கிறார்.அவர் மீண்டும் பணியில் சேர்வதற்கு உதவிய போலீஸ் மேலதிகாரி பிரபு தன் மகளிடம் தவறாக நடந்து கொண்ட ஒருவனைப் பற்றி கூற அவனை அடித்து துவம்சம் செய்கிறார் விஷால்.அவன் மிகப்பெரிய தாதாவின் மகன் என்று தெரிகிறது.விஷாலைத் போட்டுத் தள்ள தாதாவின் கூட்டம் அலைகிறது.பழிவாங்கத் துடிக்கும் அந்த கொலைவெறிக் கும்பலில் இருந்து விஷால் தப்பித்தாரா இல்லையா என்பதுதான் மீதிக் கதை.
படம் ஆரம்பித்ததுமே இரத்தக்களரியாக வருகிறார் விஷால். அதன் பின்னணி என்ன என்று கூற,கதை பின்னோக்கி நகர்கிறது.
ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் மசாலா படமாக கதை விரிகிறது.ஒரு பெரிய கும்பலை ஒரே ஆளாக ஒற்றை லத்தியுடன் விஷால் அடக்கும் காட்சியிலேயே படம் பக்கா ஆக்ஷன் மசாலா என்பதை இயக்குநர் வினோத் புரிய வைத்துவிடுகிறார்.
இதில் முருகானந்தம் என்கிற போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் விஷால் ஆக்சன் காட்சிகளில் அசுரத்தனம் செய்து காட்டுகிறார்.படத்திற்காக அவர் உழைத்திருப்பது புரிகிறது. மனைவி,குடும்பம் மகன் என்று சென்டிமெண்ட் காட்சிகளிலும் தன் பங்கைச் சரியாக செய்துள்ளார்.
குடும்ப குத்து விளக்காக வருகிறார் சுனைனா.கொஞ்சம் காதல் ,கொஞ்சம் கவலை, கொஞ்சம் பதற்றம் என்று ஆக்சன் படக் கதாநாயகிக்கான ரெடிமேட் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.
தாதா சுராவின் பிள்ளை வெள்ளையாக வருகிற ரமணா வில்லனாக பிரம்மாண்ட அவதாரம் எடுத்துள்ளார்.அவரது கொலைவெறியும் பழிவாங்கும் உணர்வும் பார்வையாளர்களைப் பதற வைக்கும்.
விஷாலின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் லிரிஷ் நடிப்பில் அனாயாசம் காட்டியுள்ளான்.
ஆக்ஷன் காட்சிகளை பீட்டர் ஹெயின் இயக்கியுள்ளார் இரண்டாம் பாதி படத்தை அவர் கையில் எடுத்துக் கொண்டுள்ளது போல் ஆக்ஷன் உள்ளது.
தனது கேமராவை சுழல விட்டு ஆக்ஷன் படத்திற்கான அதிரிபுதிரி ஒளிப்பதிவு செய்துள்ளார் பாலசுப்பிரமணியெம்.பின்னணி இசையில் யுவன் சங்கர் ராஜாவும் குறை வைக்கவில்லை. பிரமாதப்படுத்தியுள்ளார். யுவனின் பின்னணி இசை படத்திற்குப் பெரும் பலம்.
‘நாம் ஹெல்ப்லஸ் தான் ஹோப்லஸ் இல்ல’, ‘பயப்பட்ற விஷயத்துக்கு எதிராக சண்டை போடணும், இல்லன்னா நகர்ந்திடணும் ‘ போன்ற வசனங்கள் பளிச்.
லத்தி சார்ஜ் என்பதையே மனித உரிமை ஆர்வலர்கள் கண்டிக்கும் இந்தக் காலத்தில் லத்தி சார்ஜை நியாயப்படுத்தும் வசனங்கள் உள்ளன.குற்றவாளி அல்லாத சந்தேகப்பட்ட ஒரு நபரை அடித்துத் துன்புறுத்தும் காட்சி உள்ளது. அதைப் பற்றி எந்த விதமான வருத்த விளக்கமும் தரப்படவில்லை.அலட்சியமாகக் கடந்து செல்கிறார்கள்.இது ஓர் உறுத்தல்.
இரண்டாம் பாதியில் வன்முறைக் காட்சிகளை அதன் நீளத்தை குறைத்து இருந்தால் மேலும் நேர்த்தி கூடியிருக்கும்.பார்வையாளர் யூகிக்க முடிகிற சில காட்சிகளைத் தவிர்க்கும் படி மேலும் யோசித்து இருக்கலாம்.
மற்றபடி இது ஒரு சுவாரசியமான தொய்வில்லாத வேறு எதையும் யோசிக்க வைக்காத ஆக்ஷன் தில்லர் என்பதில் சந்தேகம் இல்லை.மொத்தத்தில் ஆக்ஷன் மசாலாவாக உருவாகியிருக்கும் ‘லத்தி’பை லாஜிக் கேள்விகளைப் புறம் தள்ளிவிட்டு ஆக்ஷனை ரசிகர்கள் ரசிப்பார்கள்.