நாயகன் கார்த்திக் சிங்கா ஆதரவற்ற குழந்தைகளின் இல்லம் நடத்துகிறார்.அவர்களைப் படிக்க வைத்து உயர்த்துவது அவரது லட்சியமாக உள்ளது.அந்த இல்லத்திற்கு அன்பளிப்பாக ஒரு ‘கொடை’யாக பெருந்தொகை கிடைக்கிறது.ஆனால் அதை ஒரு மோசடிக்கும்பல் அபகரித்து விடுகிறது.இழந்த பணத்தை அவர்கள் வழியில் சென்று கதாநாயகன் மீட்க்கிறாரா இல்லையா என்பது தான் கதை மையம்.இதற்குள் காதல், நகைச்சுவை போன்ற தமிழ் சினிமாவிற்கான வணிக அம்சங்களையும் கலந்து கொடுத்திருக்கிறார்கள்.
நாயகன் கார்த்திக் சிங்காவுக்கு காதல், சண்டை, பாசம் ஆகிய எல்லாவற்றையும் வெளிப்படுத்தக் கூடிய வேடம். அதை நிறைவாகச் செய்திருக்கிறார்.சண்டைக் காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார்.அவரை மேலும் பயன்படுத்தி இருக்கலாம்.
நாயகி அனயா புதுமுகம்.தோற்றத்திலும் நடிப்பிலும் குறை இல்லை.
நாயகனின் நண்பனாக வந்து நகைச்சுவைக் காட்சிகளில் தோன்றும் ரோபோ சங்கர் சிரிப்பை மட்டும் வர வைக்கவில்லை.
வில்லனாக நடித்திருக்கும் அஜய்ரத்னம், நிறையவே பயமுறுத்தி கொடூரம் காட்டி, தன் பாத்திரத்தை செய்துள்ளார்.
எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட், மாரிமுத்து, சிங்கமுத்து,கு.ஞானசம்பந்தன், ஆனந்த்பாபு, கே.ஆர்.விஜயா, வைஷாலி தணிகா, கராத்தே ராஜா போன்றவர்களும் படத்தில் இருக்கிறார்கள்.இத்தனை நட்சத்திரங்களை வைத்துக் கொண்டு இன்னும் அழுத்தமான காட்சிகளை அமைத்திருக்கலாம்.
அர்ஜுனன் கார்த்திக் ஒளிப்பதிவில் பாத்திரச்சித்தரிப்புகளை நன்கு வெளிப்படுத்தி உள்ளது பலம் என்றாலும்,கொடைக்கானல் பின்னணியில் நடக்கும் கதையில் கொடைக்கானலையே சரியாகக் காட்டவில்லை.இது ஒரு குறையே.
சுபாஷ்கவியின் இசையில் பாடல்கள், பின்னணி இசை ஓகே.
ராஜா செல்வம் எழுதி இயக்கியிருக்கிறார். திரைக்கதை பலவீனமாக இருக்கிறது. மேலும் பலம் சேர்த்திருந்தால் படத்திற்கு அழுத்தம் கிடைத்திருக்கும்.ஜனதா சாப்பாடு ரகத்திலான திருப்தி.