‘வாத்தி ‘விமர்சனம்

கல்வியை வணிகமாக்கி அரசுப் பள்ளிகளை கபளீகரம் செய்யும் தனியார் பள்ளிகளின் வியாபார வசூல் வேட்டையைத் தோலுரிக்கும் கதை.கல்வியை வியாபாரம் ஆக்கும் கார்ப்பரேட் முதலாளிக்கும், பலருக்கும் கல்வியை இலவசமாகக் கொடுக்க நினைக்கும் ஆசிரியருக்கும் இடையிலான போராட்டம் தான் இந்தப் படம்.

தனுஷ், பாரதிராஜா, சம்யுக்தா ஹெக்டே, சமுத்திரக்கனி, சாய்குமார், தனிகல பரணி, தொட்ட பள்ளி மது, நாரா சீனிவாஸ், ஆடுகளம் நரேன், ஹரிஷ் பெராடி, இளவரசு, மொட்டை ராஜேந்திரன், சாரா, கென் கருணாஸ்,பிரவீனா லலிதா பாய் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.

எழுதி இயக்கியிருக்கிறார் வெங்கி அட்லூரி. இசை ஜி.வி பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு ஜெ. யுவராஜ் ,எடிட்டர் நவீன் நூலி. சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் நாகவம்சி எஸ், சாய் சௌஜன்யா தயாரித்துள்ளனர்.

வாத்தி படத்தின் கதை என்ன?

சமுத்திரக்கனி நடத்தும் பள்ளியில் கடை நிலை ஆசிரியராக வேலை பார்க்கிறார் தனுஷ்.அரசுப் பள்ளிகளை நடத்த அரசு முடியாத போது தனியார் பள்ளிகள் அவற்றை மேம்படுத்த பொறுப்பு எடுத்துக் கொள்வதாகப் பாசாங்கு செய்கின்றன.
அப்படி அரசுப் பள்ளிக்கு அனுப்பப்பட்ட தனுஷ் தனது தீவிர உழைப்பால் சோழவரம் ஊரிலுள்ள மேல்நிலைப்பள்ளியில் சிறந்த மாணவ மாணவிகளை உருவாக்குகிறார். அவர்களை டாக்டர்களாக, இன்ஜினியர்களாக ஆக்க கனவு காண்கிறார்.
அவரது முயற்சி வெற்றி பெற்றால் தங்களது பிழைப்பு கெட்டுவிடும் என்று தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவராக இருக்கும் சமுத்திரக்கனி அதற்குப் பெரிய தடைக்கல்லாக நிற்கிறார் .அதையும் மீறி தனுஷ் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் கதாநாயகன் தனுஷ் தான் என்றாலும் அவரிடம் ஆசிரியர் களை சற்றும் வரவில்லை .ஒரு மாணவனைப் போல் தான் இருக்கிறார், அதுவும் குறும்பு செய்யும் மாணவன் போல் தோற்றத்தில் வருகிறார். அவருக்கு பாந்தமாக அந்த பாத்திரம் பொருந்தவில்லை. ஏனென்றால் வயதுக்கும் தோற்றத்திற்கும் மீறிய பாத்திரமாகத் தோன்றுகிறது.இருந்தாலும் பஞ்ச் வசனங்கள் பேசி ஆங்காங்கே சண்டைகள் போட்டு தன்னால் முடிந்ததைச் செய்திருக்கிறார்.நடிப்புக்குப் பெரிய தீனி இல்லையென்றாலும் மாணவர்களின் அபிமான வாத்தியாக மனம் கவர்கிறார். 

தனி ஒருவனாக வில்லன் ஏரியாவினைக் குத்தகை எடுத்துக் கொண்டு சமுத்திரக்கனி தோன்றினாலும் அந்த கார்ப்பரேட் வில்லத்தனம் பல படங்களில் பார்த்தது தான்.
கதாநாயகி சம்யுக்தா ஒரு டெம்ப்லேட் நாயகிதான்.
ஏராளமான பாத்திரங்கள் வருகிறார்கள். அவர்களில் ஊர்த் தலைவராக வரும் சாய்குமார், மாற்றுத்திறனாளி மாணவனாக வரும் கென் கருணாஸ் மட்டும் பளிச்சிடுகிறார்கள்.

ஜி வி பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் கமர்சியல் ரகம்.

தமிழ்நாட்டின் கல்வி, பள்ளிகளின் வரலாறு தெரியாமல் இந்தப் படத்தின் கதை எழுதப்பட்டிருப்பதால் நம்மால் அத்துடன் தொடர்புபடுத்திக் கொண்டு ஒன்ற முடியவில்லை.கல்வி கற்க இவ்வளவு எதிர்ப்பு தமிழ்நாட்டில் எங்காவது இருப்பதாகக் கற்பனையே செய்ய முடியாது.ஆனால் படத்தில் காட்டுகிறார்கள்.
தனியார் பள்ளிகளின் கொள்ளை என்பதனை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.மற்றபடி இது ஏதோ வேறு மாநிலத்தில் நடப்பது போன்ற உணர்வே தோன்றுகிறது.
தெலுங்கு இயக்குநர் இயக்கியதாலோ என்னவோ ஆங்காங்கே தெலுங்கு வாசனையைத் தவிர்க்க முடியவில்லை.இது அவர்களுக்குப் புரிந்ததால் தானோ என்னவோ கதை ஆந்திர எல்லையில் நடப்பது போல் சமாளித்துள்ளார்கள்.
படம் முழுக்கக் பாடம் எடுக்கிறார்கள்.அது சலிப்பூட்டுகிறது. அதனால் திரைமொழியை கோட்டை விட்ட உணர்வைத் தவிர்க்க முடியவில்லை.அதனால் ரசனையை மீறி போதனையே தெரிகிறது.