ராகவா லாரன்ஸ், சரத்குமார், ப்ரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ், காளி வெங்கட், ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ள படம்.
கதிரேசன் இயக்கியுள்ளார். பின்னணி இசை சாம் சி எஸ். தயாரிப்பு பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்.
ராகவா லாரன்ஸ் ஐடி நிறுவனத்தில் வேலை செய்பவர்.மற்ற நேரங்களில் பொறுப்பில்லாமல் ஜாலியாகக் குடித்துவிட்டுத் திரிபவர்.அவரது தந்தை நாசர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அதை மேலும் விஸ்தரிப்பதற்காகக் கடன் வாங்க நினைக்கிறார். அதற்காக வாங்கிய பணத்தை நண்பர் ஏமாற்றி விடுகிறார்.அந்த துரோகத்தைத் தாங்க முடியாமல் குடும்பம் தத்தளிக்கிறது. கடன்காரர்கள் கழுத்தை நெருக்குகிறார்கள். கடனைக் கட்ட முடியாமல் நாசர் திடீரென்று ஒரு நாள் இறந்து விடுகிறார் .
குடும்பக் கடனை அடைப்பதற்காக வெளிநாடு சென்று சம்பாதிக்க நினைக்கிறார் லாரன்ஸ். அதன்படி லண்டனில் போய் வேலை பார்க்கிறார். அவரது காதல் மனைவி பிரியா பவானி சங்கர் லண்டனில் இருந்து தனியாக சென்னை வருகிறார். வந்தவரைக் காணவில்லை .இங்கே இருக்கும் அம்மாவும்திடீரென இறந்து போகிறார்.
தன் அம்மாவும் காதல் மனைவியும் கொலை செய்யப்பட்டுதான் இறந்துள்ளார்கள் என்பது லாரன்சுக்குப் பிறகு தான் தெரிகிறது . இந்தக் கொடுமைக்குக் காரணமானவர்களைத் தேடி பிடித்துப் பழி வாங்கும் கதை தான் படம்.
ராகவா லாரன்ஸ் இரக்கம் இல்லாமல் ரவுடிகளை ரத்த கலறியில் கொல்வதிலிருந்து படம் தொடங்குகிறது. அவர் ஒரு அடி அடித்தால் ஒன்றரை டன் வெயிட்டில் அடி விழுகிறது .அந்த அளவிற்கு அவர் எதிரிகளைப் பந்தாடுகிறார்.
எதிரில் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் வில்லனாக சரக்குமார் வருகிறார். அவரது கொடூரத்திற்கு அளவே கத்தி வெட்டு ரத்தம் துப்பாக்கி குண்டு டுமீல் என்று இருக்கிறார்.
இப்படிப்பட்ட இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு தாக்கிக் கொள்கிறார்கள் முடிவு என்ன என்பதுதான் படம்.
லாரன்ஸ் படத்தில் நடித்ததை விட அடித்ததுதான் அதிகம். அந்த அளவிற்கு சண்டை காட்சிகள் டமால் டுமீல் சத்தம் காதைக் கிழிக்கிறது.
ப்ரியா பவானி சங்கர்
காதலுக்கும் செண்டிமெண்டுக்கும் பயன்பட்டு உள்ளார். அதேபோல் பூர்ணிமா பாக்யராஜ் பாசத்தைக் காட்ட பயன்பட்டுள்ளார் .அவரது இறுதிச் சடங்கு காட்சியின் நீளம் சென்டிமெண்டி உச்சம்.
லாரன்ஸ் நண்பனாக வரும் காளி வெங்கட் மட்டும் எதார்த்த நடிப்பு நடித்து இறுதி இறந்து போகிறார். லாரன்ஸ்க்கு உதவி செய்யும் போலீசாக இளவரசு வருகிறார்.
மோசமான போலீசாக ஜெயப்பிரகாஷ் வருகிறார்.
இப்படி கமர்சியல் கலவை குத்தாக இந்த ருத்ரன் உருவாகி உள்ளது. அந்த காலத்து பாடாத பாட்டெல்லாம் பாடலைக் கூட ரீமிக்ஸ் செய்து பாடாய்ப்படுத்துகிறார்கள்.
படத்தில் லாரன்ஸ் கொல்பவர்கள் எண்ணிக்கைஎத்தனை என்று எண்ண முடியாத அளவிற்கு அத்தனை கொலைகள் விழுகின்றன.
படத்தில் ரசிப்பதற்கு என்ன உள்ளன? லாரன்ஸ் ஆடும் நடனத்தை மட்டும் கூறலாம்.சின்ன சின்ன நகைச்சுவைகளைக் கூறலாம்.
ருத்ரன் முழு நீள தெலுங்குப் பட மசாலாவில் ஒரு காலம் கடந்த தமிழ் படம்.