பிற மொழிகளைப் போல் இல்லாமல் கதாநாயகர்களை மையம் கொள்ளாத படங்களும் உருவாவதற்கான வாய்ப்புகள் தமிழில் உண்டு .அந்த வகையில் பெரிய கதாநாயகனாக இல்லாமல் நகைச்சுவை,குணச்சித்திரம் என்று சிறு சிறு வேடங்களில் என்று நடித்து வந்த ரமேஷ் திலக்கைக் நாயகனாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் யானை முகத்தான்.
ரமேஷ் திலக் உடன் யோகி பாபு, கருணாகரன், ஊர்வசி போன்றவர்களும் நடித்துள்ளார்கள்.
ரெஜிஷ் மிதிலா இயக்கி உள்ளார் .இசை- பரத் சங்கர்.தி கிரேட் இந்தியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ரமேஷ் திலக் ஒரு ஆட்டோ ஓட்டுநர். அவரது வீடு,ஆட்டோவின் முதலாளி ஊர்வசி, ஆட்டோ வாடகையும் தராமல் வீட்டு வாடகையும் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார் ரமேஷ் திலக், சமாளிப்பது டிமிக்கி கொடுப்பது ஏமாற்றுவது ரமேஷ் திலக்கின் கூடப் பிறந்த குணமாக இருக்கிறது. இருந்தாலும் அவருக்குப் பக்தி அதிகம். குறிப்பாக விநாயகர் மீது அதிக பக்தி. அப்படிப்பட்டவர் முன்பு ஒரு நாள் விநாயகர், யோகி பாபு வடிவத்தில் நேரில் வருகிறார். யாரையும் ஏமாற்றாமல் நேர்மையாக ஒரு நாள் வாழ வேண்டும் என்று சொல்கிறார். அதன்படி ரமேஷ் நடக்க ஆரம்பிக்கிறார். அடுத்து என்ன நடக்கிறது கதை எப்படிச் செல்கிறது என்பதுதான் யானை முகத்தான் .
பேண்டஸி கொண்ட கதையாக இது உருவாகி இருக்கிறது. கடவுள், அறை எண் 305 ல் கடவுள், ஓ மை கடவுளே போன்ற படங்களின் வரிசையில் இந்த படத்தைச் சொல்லலாம்.
ரமேஷ் திலக் தான் இதுவரை ஏற்று வந்த வேடங்களிலும் குறை சொல்லாத நடிப்பை தந்தவர் .அப்படியே இதிலும் நடித்துள்ளார். குறை சொல்ல ஒன்றுமில்லை .படம் தொடங்கும் போதும் இடைவேளைக்குப் பிறகும் என யோகிபாபு வருகிறார். அவர் வருவதால் நகைச்சுவை காட்சிகள் இருக்கும் என்றால் அதுதான் இல்லை. நகைச்சுவைகள் அதிகம் இல்லை என்றாலும் வாழ்க்கையின் எதார்த்தங்கள் தத்துவங்களை இந்தக் கதாபாத்திரம் மூலம் பேச வைத்துள்ளார் இயக்குநர்.
படத்தில் கதாநாயகி என்று யாருமே கிடையாது என்பது ஆறுதலான ஆச்சரியம். நண்பனாக கருணாகரன் வீடு, ஆட்டோ உரிமையாளராக ஊர்வசி என இருவர் மட்டுமே முக்கியமான கதாபாத்திரங்களாக வருகிறார்கள்.
இரண்டாவது பாதியில் உச்சகட்ட காட்சிக்கு முன்பு வரும் சில காட்சிகள் பழைய படங்களை நினைவூட்டுகின்றன.
ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என்று இயக்குநருடன் இணைந்து பயணித்திருக்கிறார்கள்.
ஒரு பேண்டஸி கதையைத் தேர்ந்தெடுத்தவர் திரைக்கதையில் நேர்த்தி காட்டி சுவாரஸ்யமான காட்சிகளையும் காட்டி சீர் செய்திருந்தால் இந்தப் படம் மேலும் உயரம் கூடியிருக்கும். நடிப்பு திறமை கொண்ட நடிகர்களை வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஏற்ற தீனி போடாதது ஒரு குறை. இது ஒரு பொழுதுபோக்குப் படம்.