‘தீர்க்கதரிசி’ விமர்சனம்

ஶ்ரீ சரவணா ஃபிலிம்ஸ் ஓபிசி பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், இரட்டை இயக்குநர்கள் பிஜி மோகன் – எல்ஆர் சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த், ஶ்ரீமன் நடித்திருக்கும் படம் ‘தீர்க்கதரிசி’

போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தொலைபேசி அழைப்பு வருகிறது, அதில், அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று எச்சரிக்கை தர, அதே போல் நிஜத்திலும் நடக்கிறது. ஆரம்பத்தில் காவல்துறை அதை அலட்சியப்படுத்துகிறது.
காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொன்ன நபர் அதனை ஊடகங்களுக்கும் தெரியப்படுத்துகிறார். இதனால் ஊடகங்கள் காவல்துறையினரின் அலட்சியப்போக்கு பற்றி வினாக்கள் எழுப்பி விமர்சிக்கின்றன.

அடுத்தடுத்து இப்படி அனாமதேய அழைப்புகள் மூலம் சொல்லப்படும் எச்சரிக்கைகள் நிஜத்தில் நடக்கவே அந்த அசரீரி குரலுக்குரியவர் தீர்க்கதரிசியாக மக்கள் முன் பிரபலமாகிறார்.

சம்பவங்களை இணைத்து காவல்துறை துப்பு துலக்குக்கிறது.தீர்க்கதரிசி யார்? அவரின் பின்னணி என்ன?அவர் சொல்வது எப்படி நடக்கிறது ? என்கிற கேள்விக்கெல்லாம் பதில் கிளைமாக்ஸ் மூலம் தெரிகிறது.

முக்கியமான சில பிரதான கதாாத்திரங்களின் மூலம் கதை பயணிக்கிறது.

படத்தின் ஆரம்பத்திலிருந்து தொடரும் சத்யராஜின் குரல் படத்திற்குப் பெரிய பலம். அவர் முகம் காட்டும் இறுதிக் கட்ட சில நிமிடங்களை தனது அநாயாசமான நடிப்பில் மிளிர வைக்கிறார். அதற்கான பின்னணிக் கதை தான் பார்த்து அலுத்துப் போன ஒன்றாக இருக்கிறது.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அஜ்மல், அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளாக நடித்திருக்கும் துஷ்யந்த் மற்றும் ஜெய்வந்த் அதிக காட்சிகளால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.

திரைக்கதை, வசனம் இப்படத்தின் முதுகெலும்பு. எதிர்பாராத திருப்பம் படத்தின் வேகத்திற்குப் பலம். கதாநாயகிகள் இல்லாமல் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கும் இரட்டை இயக்குநர்களைப் பாராட்டலாம்.இந்தக் காலத்து தொழில் நுட்ப நேர்த்திகள் படத்தில் பிரதிபலிக்கின்றன. சினிமாத் தனமான கவர்ச்சிகள் இல்லை, காமெடிகள் இல்லை.அந்தத் துணிச்சலுக்காகவும் இயக்குநர்களைப் பாராட்டலாம்.

எல்லா பக்கங்களிலிருந்தும் விமர்சனங்களைக் குவிக்கும் காவல்துறை பற்றிய ஒரு பாடலை இணைத்திருக்கிறார்கள்.காவல் துறை மத்தியில அந்தப் பாடல் பிரபலமாகும். ஒளிப்பதிவு, பின்னணியிசை,படத்தொகுப்பு படத்தின் விறுவிறுப்பைக் கூட்டி, பக்கபலமாகத் திகழ்கிறது.

படம் தொடக்கத்திலிருந்து விறுவிறுப்பைப் பராமரிக்கும் இயக்குநர்கள்,கொலைகளின் காரணம் பழிவாங்கும் பாதையைச் சொல்லும்போது வழக்கம் போல காதல் ஆணவக் கொலையால் பாதிக்கப்படும் குடும்பத் தலைவர் ஒருவர், அதற்கு காரணமானவர்களைப் பழிவாங்குவது என்று கூறிச் சாதாரணமாக்கி விடுகிறார்கள். கொலைகளுக்கான காரணத்தை வேறு வகையில் வேறு திசையில் புத்திசாலித்தனமாக யோசித்து இருந்தால் நிச்சயம் இந்தப் படம் வித்தியாசமான ஒரு படைப்பாக மாறி இருக்கும்.

அதனால் தீர்க்கதரிசி படம் புதிய அட்டைப்படம் போட்ட பழைய புத்தகம் போலாகி விடுகிறது.