‘புரோக்கன் ஸ்கிரிப்ட் ‘ விமர்சனம்

பெயருக்கு ஏற்றபடி வெவ்வேறு திசையில் பயணிக்கிற கதை கொண்ட படம்.

மருத்துவர் கொலைகள், உறுப்பு திருட்டு, டிராவல் ஏஜென்சி நடத்துபவர்களின் தந்திரங்கள் என்று வேறுவேறுதிசைகளில் பயணிக்கும் கதையை நாம் புரிந்து கொள்ளும்போது படம் முடிகிறது. துண்டு துண்டான திரைக்கதை அமைப்பைக் கொண்டுதான் படத்திற்கு இப்படி புரோக்கன் ஸ்கிரிப்ட் என்று பெயர் வைத்தார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் படத்தின் கதை எழுதி நாயகனாக நடித்து இயக்கியிருக்கிறார் ஜோ ஜியாவினி சிங் . இவர அசப்பில் பார்வைக்கு ஒரு வெள்ளைக்காரர் போல இருக்கிறார். இவர் தான் முரண்பட்ட கதைகளை இணைக்கும் தொடர்புச் சங்கிலியாக வருகிறார்.

தொலைக்காட்சி மூலம் பிரபலமான ரியோ ராஜ், பிரதான வேடத்தில் நடித்துள்ளார்.

மருத்துவர்களின் மர்மக் கொலைகளைச் செய்தவர் யார் என்கிற கேள்வி வரும் போது ஆளாளுக்கு தானே செய்ததாகக் கூறுகிறார்கள்.உண்மையில் யார் செய்தார்கள் என்பதுதான் சஸ்பென்ஸ்.

படத்தின் ஆரம்பக் காட்சியையும், முடிவுக் காட்சியையும் பார்க்காதவர்களுக்கு இந்தக் கதை புரியாது.அப்படி அனேக குழப்பங்களுடன் குழப்பி, குழம்பி கதை நகர்கிறது.

படத்தில் எந்தக் காட்சி சீரியஸான காட்சி ?எது நகைச்சுவைக காட்சி? என்று புரியாத வகையில் அனைத்துமே சிரிக்க வைத்து விடுகின்றன.

சிங் என்று பெயரை வைத்துக் கொண்டு வெள்ளைக்காரன் போலிருக்கும் ஜோவைப் பார்த்து ஓரிடத்தில் இன்னொருவர், “ஒரு தமிழனாக இருந்து கொண்டு நீ இதைச் செய்யலாமா..?” என்று கேட்கும் போது அதைவிட சிரிப்பு வருகிறது.

தொலைக்காட்சி மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் நாயகனாக வலம் வரும் ரியோ ராஜ், இப்படி ஒரு வேடத்தில் நடித்தது அதிர்ச்சி. இருந்தாலும், கொடுத்த வேலையைக் குறையில்லாமல் செய்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜெய்னீஷ், கம்பீரமாக இருந்தாலும், அவருடைய நடிப்பும், வசனங்களும் சிரிக்க வைப்பவை.

கதாநாயகியாக நடித்திருக்கும் நபிஷா ஜுலாலுதீன் அக்காவாக நடித்தாலும், நடிப்பு, பாடல்கள் என்று திரை முழுவதும் ஆக்கிரமிக்கிறார்.

சைக்கோவாக நடித்திருக்கும் குணாளன், வேடத்திற்கு ஏற்ற வேலையைச் சிறப்பாக செய்திருக்கிறார்.

படத்தின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் ஜோ ஜியோவானி சிங் எம்.ஜி.ஆர் பாணி மூலம் குலுங்க குலுங்கச் சிரிக்க வைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சலீம் பிலால் ஜித்தேஷ் பார்க்காத கோணத்தில் சிங்கப்பூரைக் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் பிரவீன் விஸ்வா மாலிக் இசை ஒரு சிறந்த தமிழ் படத்துக்குரிய நேர்த்தியுடன் உள்ளது,பாராட்டுக்குரியது.

சிங்கப்பூரில் நடக்கும் கதை, திடீரென்று தமிழகத்தில் தொடர்கிறது. பிறகு மீண்டும் சிங்கப்பூருக்கு வருகிறது. படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு திரைக்கதையும், காட்சிகளும் ஒன்றுக்கு ஒன்று ஒட்டாத வகையில் உடைந்திருந்தாலும், ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கிறது.

நம்மைப் படத்துடன் இணைக்காத கதைக்களம்
மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை இப்படத்தின் பலவீனங்கள். இருந்தாலும் தனக்குத் தோன்றியதை முடிந்த வரை செய்து முடித்துள்ளார் இயக்குநர்.