தெருக்கூத்துக் கலைஞர்களின் தியாகம் சாதாரணமானதல்ல: ‘டப்பாங்குத்து’ விழாவில் லியோனி பேச்சு!

மதுரையில் வீதிக்கு வீதி நடந்து வந்த தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘டப்பாங்குத்து’ என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது.

‘மருதம் நாட்டுப்புறப்பாடல்கள்’ வழங்கும்
இப்படத்தை பாடல்கள் எழுதி ஆர்.முத்துவீரா இயக்கியுள்ளார் .கதை, திரைக்கதை, வசனத்தை எஸ்.டி .குணசேகரன் எழுதியுள்ளார் .இசை சரவணன் ,ஒளிப்பதிவு ராஜா. கே. பக்தவத்சலம், நடனம் தீனா, கலை எம்.சிவா யாதவ்,படத்தொகுப்பு டி. எஸ். லட்சுமணன்.இப்படத்தை ராம்ஜி ஆடியோஸ்  எஸ் .ஜெகநாதன் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் சங்கரபாண்டியன், தீப்தி, காதல் சுகுமார், துர்கா, ஆண்ட்ரூஸ் ஆகியோருடன் ஏராளமான தெருக்கூத்துக் கலைஞர்களும் நடித்துள்ளனர்.

‘டப்பாங்குத்து’
படத்தில் தாலாட்டு, ஒப்பாரி ,கும்மாங்குத்து ஆட்டம், ராஜா ராணி ஆட்டம், நலுங்கு, குல சிந்து, , நையாண்டி, தூதுப் பாடல், குலவை போன்ற 15 வகையான கிராமியப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரை அரங்கில் நடைபெற்றது. நகைச்சுவைத் தென்றல் திண்டுக்கல் ஐ .லியோனி பாடல்களை வெளியிட்டார். தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இயக்குநர் ஆர் முத்துவீரா முன்னிலை வகித்தார்.

.
நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகன் சங்கர பாண்டியன் பேசும்போது,

“இந்தப் படத்தில் நான் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.இதுவரை மதுரை என்றாலே சண்டை , வன்முறை என்றுதான் படங்களில் காட்டப்பட்டு இருக்கிறது .ஆனால் மதுரை கலைநகரம் .இந்தப் படத்தில் மதுரையின் , தென்தமிழ் நாட்டின் கலையை எளிய மக்களுக்கான திரைப்படமாக எடுத்திருக்கிறோம்.

6000 ஆண்டு கால பழம் பெருமை கொண்ட கலைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துக் கொண்டு மதுரை தமிழ்நாட்டுக்கான அடையாளமாக இருக்கிறது. ‘மதுரையைச் சுற்றிய கழுதை வெளியில் போகாது ‘என்று பேசுவார்கள். ஏனென்றால் மதுரைப் பகுதியில் 80 திரையரங்குகள் இருந்தன. நிறைய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கும். அதையெல்லாம் தின்று விட்டு கழுதை வெளியே செல்லாது என்பதற்காகச் சொல்வார்கள்.

‘டப்பாங்குத்து’ படத்தில் உள்ள பாடல்கள் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானதாக இருக்கும். நாட்டுப்புறக் கலைஞர்கள் என்கிற எளிய மக்களின் கதையைச் சொல்லி இருக்கும் இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் ” என்றார்.

 

சிறுபடத் தயாரிப்பாளர்கள்தான் திரையுலகத்தை இன்று வரை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஒருவர் சொல்கிறார் அவர் படம் ஓடிவிட்டது என்று நாலு கோடி பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் டெபாசிட் செய்து விடுங்கள் படம் எடுக்க வராதீர்கள் என்று.

இப்படிச் சொல்லலாமா ?இது எவ்வளவு பெரிய தவறு.
அவரது அந்தப்பேட்டி பிரபலமான பிறகு சிறுபடம் எடுக்க ,தயாரிக்கத் தயாராக இருந்தவர்கள் கூட பின் வாங்கி விட்டார்கள் .இரண்டு வருடம் எந்த சின்ன படமும் ஓடாதாம்,எதுவும் கிடைக்காதாம் என்று சொல்கிறார்கள்.

திமிரு படம் ஓடினதுக்குப் பிறகு பல வருடங்கள் கழித்து ஒரு படம் ஓடியதற்காக இப்படித் திமிராகப் பேசக்கூடாது. அது ரொம்ப தப்பு.
தயவுசெய்து தமிழ் சினிமாவை வாழ வையுங்கள். கண்டதையும் பேச வேண்டாம்”
என்றார்.

தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் பேசும் போது,

” இங்கே உள்ளே வந்த பார்த்தபோது டப்பாங்குத்து இசை வெளியீட்டு விழாவா? அல்லது இங்கேயே பாடல்கள் ஒலிப்பதிவு செய்கிறார்களா என்று சந்தேகம் வரும் அளவிற்கு இந்தக் கச்சேரி இருந்தது.இது தயாரிப்பாளர் ஜெகநாதன் ஒருவரால் தான் முடியும். ஒட்டுமொத்தமாக மதுரையில் இருந்து தெருக்கூத்துக் கலைஞர்களை அழைத்து வந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்.தயாரிப்பாளர் அண்ணன் ஜெகநாதன் எனக்கு சுமார் 25 ஆண்டுகளாகத் தெரியும். இங்கே சினிமாவில் தயாரிப்பாளர் ஆர். பி. செளத்ரி புதியவர்களை அறிமுகப்படுத்துவது போல் இவர் மதுரையில் ஏராளமான தெருக்கூத்துக் கலைஞர்களை உருவாக்கி இருக்கிறார்” என்றார்.

பாடல்களை வெளியிட்டு திண்டுக்கல் ஐ .லியோனி பேசும்போது,

“டப்பாங்குத்து என்கிற வித்தியாசமான பெயரில், 15 நாட்டுப்புறப் பாடல்களை இடம்பெற வைத்து இப்படி ஒரு அருமையான படத்தை எடுத்துள்ள ராம்ஜி ஆடியோஸ் ஜெகநாதன் அவர்களை அனைவரும் பாராட்டலாம். இந்த முயற்சிக்காக அவரை வாழ்த்தலாம் ,வாழ்த்த வேண்டும்.

நான் இந்த இடத்தில் நிற்பதற்கு மிகப்பெரிய அடித்தளமாக இருந்ததே மதுரை ராம்ஜி ஆடியோ நிறுவனம் தான். அந்தக் காலத்தில் வத்தலகுண்டு போன்ற பகுதிகளில் தான் எங்கள் பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கும். முதன்முதலாக பேராவூரணி என்ற ஊரில் நீலகண்ட விநாயகர் கோவிலில் என் பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது லியோனி என்றால் யாருக்குமே தெரியாது .பெரிய பெரிய பட்டிமன்ற பேச்சாளர்கள் தான் பிரபலமாக இருந்தார்கள்.என்னையெல்லாம் யாருக்கும் தெரியாது.

மிகப்பெரிய திருவிழா .ஊரெல்லாம் மைக் செட் கட்டி இருந்தார்கள் ஆனால் கூட்டமே இல்லை.அந்த ஊரில் எங்கள் நிகழ்ச்சிக்காக நாங்கள் போய் பேச ஆரம்பித்தபோது ஆறு பேர் தான் முன்பாக பார்வையாளர்களாக இருந்தார்கள். பட்டுக்கோட்டையா கண்ணதாசனா என்பதுதான் தலைப்பு .நான் பாடிப் பாடி, பேசப் பேச மைக் ஸ்பீக்கரில் கேட்டு மக்கள் கூட்டம் வந்து சேர்ந்து 15 ஆயிரம் பேர் கொண்ட பெரிய கூட்டமாகிவிட்டது.அதைப் பாதியில் வந்து ஒருவர் ஒலிப்பதிவு செய்து மணிராஜ் ஆடியோஸ் என்று மீண்டும் காலையில் ஒலிபரப்பு செய்து விட்டார்.மணிராஜ் ஆலங்குடி கேசட் என்பதுதான் லியோனியின் முதல் கேசட்டாக வெளியில் வந்தது.

அப்படி இருந்த என்னை அதிகாரப்பூர்வமாக ராம்ஜி ஆடியோஸ் கேசட்ஸ் மூலம் உலகம் முழுக்கக் கொண்டு சென்ற பெருமை ராம்ஜி ஆடியோவைத் தான் சேரும்.அதில் முதல் தலைப்பு பட்டுக்கோட்டையா கண்ணதாசனா?அதன் பிறகு பழைய பாடலா புதிய பாடலா? இரண்டும் பெரிய வெற்றி பெற்றன.

வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பஸ்கள் விக்கிரவாண்டி என்ற ஊரில் நிற்கும்.நள்ளிரவு இரண்டு மணிக்கு அங்கு என் பட்டிமன்ற கேசட்டுகள் ஒலிக்கும். அப்போது அதைக் கேட்டு ஏராளமானவர்கள் வாங்குவார்கள். ஒருமுறை என்னிடமே வந்து என் கேசட்டை ஒருவர் விற்க முயன்ற கதை உண்டு. இப்படி 15 தலைப்புகளில் கேசட்ஸ் போட்டார்கள்.இப்படி என்னை உலகம் முழுக்க கொண்டு சேர்த்த பெருமை ராம்ஜி ஆடியோ நிறுவனத்திற்குச் சேரும் .அவர்கள் இப்போது ஒரு படம் செய்திருக்கிறார்கள் என்பதால், காலையில் எனக்கு உடல்நிலை சரியில்லாது மருத்துவமனை சென்று வந்த போதும் அந்த நன்றிக் கடனுக்காகத்தான் இங்கே வந்தேன் .பாரதிராஜா இயக்கிய தெக்கித்திபொண்ணு தொடரில் நடிக்கும்போது இந்த என் மாப்பிள்ளை சங்கரபாண்டியன் அறிமுகம். அதன் ஆயிரமாவது எபிசோடில் நடைபெற்ற விழாவில் தலைமையேற்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டார்.அடுத்து நடைபெற்ற செம்மொழி மாநாட்டின் பட்டிமன்றத்தில் என்னைச் சேர்க்கவில்லை ஏன் என்று தலைவரிடம் நான் கேட்டேன்.  பட்டிமன்றத் தலைப்பு ‘மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் சீர்படுத்துவது பத்திரிகைகளா?
தொலைக்காட்சியா? ‘ என்பது. தனது உதவியாளர் சண்முக நாதனை அழைத்து பட்டிமன்றத்தில் பேசுபவர்கள் பெயர்ப் பட்டியலைப் பார்த்த தலைவர் அவர்கள்,தொலைக்காட்சியே என்ற அணியில் குஷ்பு பெயர் இருந்ததை அடித்து விட்டு திண்டுக்கல் லியோனி என்று எழுதி அச்சிடுவதற்குக் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்.அப்படி செம்மொழி மாநாட்டில் நான் பேசுவதற்கு காரணமாக இருந்தது அந்த தெக்கித்தி பொண்ணு தொடரின் ஆயிரமாவது வெற்றி விழா. அந்தத் தொடரில் நடித்திருந்தவர் தான் இந்த டப்பாங்குத்து நாயகன் சங்கர பாண்டியன்.

இந்தப் படத்தில் 15 பாடல்கள் அதுவும் தெருக்கூத்து நாட்டுப்புறப்பாடல்கள் இடம் பெற்றிருப்பது ஆச்சரியமான ஒன்று. இது போல் வேறு எந்த படத்திலும் இத்தனை நாட்டுப்புறப் பாடல்கள் இடம் பெறவில்லை.அந்தக் காலத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த  ‘சிவகவி’ படத்தில் 27 பாடல்கள் இருக்கும். நின்றால் பாட்டு உட்கார்ந்தால் பாட்டு இப்படி எதற்கடுத்தாலும் பாடல்கள் வரும். நாட்டுப்புற பாடலை முதன் முதலில் திரைப்படத்தில் கொண்டு வந்தவர் கலைவாணன் என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் தான்.அவர் பாடிய ‘நாட்டுக்கு சேவை செய்ய நாகரிக கோமாளி வந்தேன்’ பாடலிலும் ‘அந்தக் காலம் இந்தக் காலம், பாடலிலும் அறிவியல் சிந்தனைகள் எளிய மக்களைச் சென்றடையும் வகையில் திரைப்படங்களில் அவர் பாடினார்.

‘விஞ்ஞானத்தை வளர்க்க போறேண்டி ‘பாடலில் 1947 லேயே இன்றைய விஞ்ஞான வளர்ச்சியைப் பாடி இருந்தார்.இன்றைக்கு பேசப்படும் டெஸ்ட் டியூப் பேபி பற்றியும் கொரோனா காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆன்லைன் க்ளாஸ் பற்றியும் அவர் அப்போதே பாடிவிட்டார். 1957-ல் கே வி மகாதேவன் அவர்களின் ‘வண்ணக்கிளி’ படத்தில் வரும் ‘சித்தாடை கட்டிகிட்டு ‘பாடல் மிகப் புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடல் . ‘ஏறாத மலைதனிலே ஜோரான கவுதாரி ரெண்டு’ என்று தஞ்சை ராமதாஸ் எழுதிய பாடலில் வந்த ஆனந்த கோனாரே அறிவுகெட்டுத்தான் போனாரே என்ற வரிகள் சர்ச்சையானது .அதற்காக எழுதியவர் மன்னிப்பு கேட்டார்.

தெருக்கூத்து என்பது சாதாரணமான விஷயம் அல்ல .ஒரு 20 அடி மேடையில் இரு குழுவாக இருப்பார்கள் அங்குமிங்கும் நடந்து நடந்துகொண்டிருப்பார்கள். இப்படி விடிய விடிய அவர்கள் முன்னும் பின்னும் நடப்பதை கணக்கு எடுத்துக் கொண்டால் 25 கிலோமீட்டர் ஆக இருக்கும். 

அவர்கள் எல்லாவிதமான பாடல்களும் பாடுவார்கள். பக்திப் பாடல், இந்திப் பாடல் எல்லாமும் பாடுவார்கள். அதைத் தங்களது பாணியில் சற்று மாற்றிப் பாடுவார்கள். இப்படி எல்லா பாடல்களையும் பாடி எளிய மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள்.
இப்படி மேடையில் மாலை 6 மணி முதல் பொழுது விடியும் 6 மணி வரை மக்களை ரசிக்கவும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த தெருக்கூத்துக் கலைஞர்களின் உழைப்பும் தியாகமும் சாதாரணமானதல்ல. ஏனென்றால் வேடிக்கை பார்க்க வருபவர்களில் பலவிதமான மன நிலையில் வருவார்கள். அனைவரையும் கவர வேண்டும். இன்று ஒரு இரண்டு மணி நேரத் திரைப்படம் எடுக்கவே இயக்குநர் படாதபாடு படுகிறார். அதைப் பார்க்க வைக்க அவ்வளவு சிரமப்பட வேண்டி உள்ளது.

ஒரு மணி நேரக் குறும்படத்தைக் கூட பார்ப்பதற்குப் பொறுமை யாருக்கும் இல்லை.அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாட்டுப்புறக் கலைஞர்களின் உழைப்பிற்கும் தியாகத்திற்கும் அங்கீகாரம் தரும் வகையில் இந்த டப்பாங்குத்து திரைப்படம் உருவாகி உள்ளது..

தமிழ் மண்ணின் பாரம்பரியம் சிறந்தது என்று கீழடி ஆய்வுகள் மூலம் இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்படி அந்தக் காலத்திலேயே கற்றுக்  கொடுத்த இனம் தமிழினம்.கலைகளை வளர்த்த இனம் தமிழினம்.

இந்தப் படத்தை இயக்கி இருக்கும் முத்துவீரா, கதை எழுதிய எஸ். டி. குணசேகரன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.இந்தத் திரைப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்”என்று பேசினார்.

லியோனி தன் பேச்சின் நடுவே திரைப்படப் பாடல்களையும் நாட்டுப்புறப் பாடல்களையும் பாடி பார்வையாளர்களை மகிழ்ச்சியில் வாழ்த்தினார்.பார்வையாளர்களுக்கு ஒரு கச்சேரியினைக் கண்டு ரசித்த அனுபவம் கிடைத்தது.