‘லேபில்’ இணைய தொடர் விமர்சனம்

முத்தமிழ் படைப்பகம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள லேபில் இணைய தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. அருண் ராஜா காமராஜ் இயக்கி உள்ளார்.

ஜெய் மற்றும் தான்யா ஹோப் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகிய முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து  நடித்துளார்கள்.

யாரையும் தோற்றத்தை வைத்து எடை போடுவது, இந்த ஊர்க்காரர்கள் இப்படிப்பட்டவர்கள் என்று முத்திரை குத்துவது போன்ற கருத்தோட்டத்திற்கு எதிராக லேபில் என்கிற இந்த இணையத் தொடரை உருவாக்கி இருக்கிறார்கள்.

கதை என்று எடுத்துக் கொண்டால் ஏற்கெனவே பல படங்களில் சொல்லப்பட்ட வட சென்னையைப் பின்னணியாகக் கொண்ட ஒரு கேங்ஸ்டர் கதைதான். வட சென்னையில் வாலிநகர் பகுதியின் ஓர் அடையாளமாக இரு இளைஞர்கள் மாற விரும்புகிறார்கள்.சூழலின் காணத்தால் ஒரு கொலை செய்து விடுகிறார்கள்.

வட சென்னை மக்கள் படித்து கல்வியில் உயர வேண்டும் என்பது வழக்கறிஞர் ஜெய்யின் கொள்கை.அவர் அந்தக் கொலை செய்த இளைஞர்களைப் பிணையில் எடுத்து வெளியே கொண்டு வருகிறார்.வெளியே வரும் இந்த இருவரும் சும்மா இருக்கிறார்களா? வட சென்னையின் மிகப் பெரிய தாதாவையே போட்டுத் தள்ளி விடுகிறார்கள்.அப்புறம் என்ன? தாதாவின் ஆட்கள் துரத்த, இவர்கள் தப்பித்து ஓட, முடிவு என்ன என்பதுதான் கதை செல்லும் பாதை.

தொலைக்காட்சித் தொடர் போலத்தான் வெப்சீரிஸ் என்று சிலர் கருதுவர். ஆனால் ஒரு திரைப்படத்தின் தரத்தோடு இணையத் தொடர்கள் எடுக்கப்படுகின்றன. இது தொலைக்காட்சித் தொடர் அல்ல என்று காட்சிகளின் மூலம் உணர வைக்கிறார் இயக்குநர்.வேகமாக செல்கிறது திரைக்கதை.
இத்தொடரில் ஜெய், தான்யா ஹோப் தவிர மற்ற அனைத்து பாத்திரங்களுமே அளவின்றி கெட்ட வார்த்தை பேசுகிறார்கள்.
இப்போதெல்லாம் இணைய தொடரின் சுதந்திரத்தை இப்படித்தான் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு விடலை பருவ தாதாவாக மகேந்திரன் நடிப்பு சிறப்பு. வக்கீல் பாத்திரத்தில் ஜெய் இன்னும் திறமை காட்டி இருக்கலாம். தான்யா ஹோப்பிற்கு நடிக்க பெரிய வாய்ப்பு இல்லை. அளவுக்கு அதிகமாக வன்முறையைக் காட்டிவிட்டு வன்முறை தேவையில்லை என்று மேம்போக்காகக் கருத்து சொல்கிறார்கள்.

சாம் சி.எஸ் ஒரு திரைப்படத்திற்கான கவனத்தோடு இந்தத் தொடருக்கும் இசை அமைத்துள்ளார்.தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு சிறப்பு.

வட சென்னையின் மக்கள் வாழ்வைப் பற்றியும் சொல்லப்பட வேண்டிய பண்பாடு, சிக்கல்கள் என்று ஏராளம் பதிவாக வந்திருக்கவேண்டிய தொடர், வன்முறை என்ற அடையாளத்தையே அழுத்தமாக பதிவு செய்துள்ளதாகத் தோன்றுகிறது