‘சிங்கப்பூர் சலூன்’ விமர்சனம்

ஆர்ஜே பாலாஜி, லால்,சத்யராஜ், மீனாக்‌ஷி சௌத்ரி, கிஷன் தாஸ், தலைவாசல் விஜய், சுரேஷ் மேனன்,ஜான் விஜய், ரோபோ ஷங்கர், ஒய்ஜி மகேந்திரன் நடித்துள்ளனர்.கோகுல் இயக்கியுள்ளார்.
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில்,ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

சாச்சா என்று அழைக்கப்படும் லால் ஒரு சலூன் வைத்துள்ளார்.அது மட்டுமல்ல அப்பகுதி முஸ்லிம் சிறுவர்களுக்கு சுன்னத் செய்யும் வேலையையும் செய்கிறார்.இதனால் சிறுவர்களுக்கு அவரைக் கண்டால் பயம் பீதி வெறுப்பு.தன் பள்ளித் தோழனான முஸ்லிம் நண்பனுக்கு சுன்னத் செய்ததாலும் தனக்கு மொட்டை அடித்ததாலும் லாலை எதிரியாகப் பார்க்கிறார் ஆர் ஜே. பாலாஜி.அருகில் நெருங்கி பார்க்கும் போது லால் முடிதிருத்தும் தொழிலை ஒரு கலையாகச் செய்வதும் பலரது தோற்றத்தை மாற்றுவதையும் கண்டு அவர் மீது ஈர்ப்பு உண்டாகிறது.தானும் அவரைப் போல் ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார்.தூங்கும் போது கூட கையில் கத்திரியுடன் தூங்குகிறார். இதற்கு ஆர்ஜே பாலாஜியின் அப்பா தலைவாசல் விஜய் மறுப்பு தெரிவிக்கிறார்.பொறியியல் படிக்க வேண்டும் என்கிறார். அதன்படியே படிக்கிறார். இருந்தாலும் தனது உறுதியை விடவில்லை.
மகனின் பிடிவாதமும் உறுதியும் தொடரவே ஒரு கட்டத்தில் அவரது அப்பா தலைவாசல் விஜய் சம்மதிக்கிறார்.

தனது மாமனார் சத்யராஜ் தயவினால் பல கோடிகள் செலவு செய்து, பிரம்மான்டமான சிங்கப்பூர் சலூன் என்ற பெயரில் சலூன் ஒன்றினைத் தொடங்குகிறார் பாலாஜி.அப்பகுதி ஸ்திரமற்ற நிலப்பகுதியாக இருந்ததால் அருகிலுள்ள கட்டடங்கள் இடிந்து விழுகின்றன.அரசு சிங்கப்பூர் சலூனை இடிக்க முயற்சிக்கிறது. இதன் பிறகு என்ன நடந்தது? என்பதே சிங்கப்பூர் சலூன் படத்தின் கதை.

ஆர் ஜே பாலாஜி தன் கதையை சொல்வது போல் படம் ஆரம்பிக்கிறது.ஆர் ஜே பாலாஜியின் நண்பனை சுன்னத் செய்வதற்கு உறவினர் துரத்த சிறுவனோ பயந்து ஓட என்ற களேபரத்தில் படம் கலகலப்பாகவே தொடங்குகிறது .இப்படி இடைவேளை வரை, ஜாலியாகச் செல்கிறது.இடைவேளைக்குப் பிறகு, திரைக்கதை எதை நோக்கிச் செல்வது, எனத் தெரியாமல், திணறுகிறது.

கதிர் என்கிற பாத்திரத்தில் வரும் ஆர்ஜே பாலாஜியின் ஹேர் ஸ்டைலும் சுமாராகவே உள்ளது.அதேபோல அவருக்குப் பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை.
நாயகி மீனாக்‌ஷி சௌத்ரியின் தந்தையாக வரும் சத்யராஜ் பாத்திரம் அறிமுகமாகும் வரை குறைந்த கலகலப்பு ,அவர் பிரவேசமானவுடன் அந்த ஏரியாவைக் கைப்பற்றி கொண்டு கலக்குகிறார்.சத்யராஜ் குடித்துவிட்டு கும்மாளம் போடும் காட்சி கலகலப்பு.

நாயகியாக நடித்திருக்கும் மீனாக்‌ஷி சௌத்ரி வழக்கம் போல ஒரு கதாநாயகியாக தோற்றம் தருகிறார்.ஆர்ஜே பாலாஜியின் நண்பராக நடித்திருக்கும் கிஷன் தாஸ், லால், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர், ஒய்.ஜி.மகேந்திரன் எனத் தெரிந்த முகங்கள் வந்து மனதில் பதிகிறார்கள்.சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் அரவிந்த்சாமி , ஜீவா போன்றோரை மேலும் அழுத்தமான காட்சிகளின் மூலம் பதிய வைத்திருக்கலாம்.

ஒருவர், ஒரு கலையால் ஈர்க்கப்படும் போது, அதற்கான அழுத்தமான காரணம் சொல்லப்படவேண்டும். அதற்குரிய காட்சிகள் அமைக்கப்பட வேண்டும் அப்படி ஒன்றும் இதில் உருவாக்கப்படவில்லை.அதனால் படத்தில் மீதான ஈர்ப்பு சதவீதம் குறைந்து விடுகிறது.

மனிதர்களின் தொழிலுக்கும் ஜாதிக்கும் சம்பந்தமில்லை என்பதையும் இயற்கைச் சூழலை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதையும் இயக்குநர் சொல்ல விரும்பி இருக்கிறார்.இந்த இரண்டு குதிரைச் சவாரியில் எதையும் அழுத்தமாகச் சொல்லவில்லை.

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு, விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள்,ஜாவேத் ரியாஸின் பின்னணி இசை குறை சொல்ல ஒன்றும் இல்லை.

மொத்தத்தில், ‘சிங்கப்பூர் சலூன்’ தயாரிப்பாளர் கொடுத்திருந்த பிரம்மாண்டமான கேன்வாஸில் சுமாரான படத்தை வரைந்து காட்சிப்படுத்திய அனுபவத்தைத் தருகிறது.