கிராமி விருது வென்ற சக்தி இசைக் குழுவினர் சென்னையில் சங்கமம்!

கிராமி விருது வென்ற சக்தி இசைக்குழுவின் கலைஞர்கள் ஒரு நல்ல நோக்கத்திற்காக‌ சென்னையில் சங்கமிக்கிறார்கள்.

எல். ஷங்கர், விக்கு விநாயக்ராம், செல்வகணேஷ் மற்றும் ஃபசல் குரேஷி ஆகியோருடன் முன்னணி இசைக் கலைஞர்கள் இணைந்து வழங்கும் மாபெரும் நிகழ்ச்சி

உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் கிராமி விருதை சமீபத்தில் வென்ற சக்தி இசைக்குழுவின் நிறுவன‌ உறுப்பினர்களான எல். ஷங்கர் மற்றும் விக்கு விநாயக்ராம், கிராமி விருது பெற்ற‌ வி.செல்வகணேஷ் மற்றும் பிற முன்னணி இசைக்கலைஞர்களுடன் இணைந்து சென்னையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளனர்.

விசார்ட்ஸ் லைவ் இன் கான்செர்ட் (Wizards Live in Concert) என்ற பெயரில், சமர்ப்பன் 2024 வருடாந்திர‌ இசை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சி பி ஒய் எம் எம் (BYMM) அறக்கட்டளைக்கு உதவும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் 1ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணி முதல் சென்னை தி. நகர் மகாராஜபுரம் சந்தானம் சாலை கிருஷ்ண கான சபாவில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோரமண்டல் ஃபியூச்சர் பாசிட்டிவ் மற்றும் WWE குளோபல் இந்தியா பிரைவேட் லிமிடெட் இந்நிகழ்ச்சியை வழங்குகின்றன.

எல். ஷ‌ங்கர், விக்கு விநாயக்ராம் மற்றும் செல்வகணேஷ் ஆகியோருடன் ஃபசல் குரேஷி, ஏ. கணேசன், கட‌ம் உமாசங்கர், மகேஷ் விநாயக்ராம் மற்றும் சுவாமிநாதன் செல்வகணேஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர். சக்தி இசைக்குழுவின் பாடல்கள் மேடையில் இசைக்கப்படுவதோடு, காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் (மகா பெரியவர்) பற்றி செல்வகணேஷ் இசையமைத்த ஆல்பம் ஒன்றும் வெளியிடப்படும்.

இது குறித்து செல்வகணேஷ் கூறுகையில், “சக்தி இசைக்குழு கிராமி விருதை வென்ற பிறகு, அதன் கடந்த கால மற்றும் தற்போதைய இசைக்கலைஞர்கள் முதன்முறையாக இணைந்து இந்த இசை நிகழ்ச்சியை வழங்க உள்ளனர். இந்த சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் நடப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு நல்ல நோக்கத்திற்காக நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் இசை ஆர்வலர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன்,” என்றார்.

இசை மேதைகளான ஜாகிர் ஹுசைன் மற்றும் ஜான் மெக்லாலின் தலைமையிலான சக்தி குழுவினரின் சமீபத்திய படைப்பான ‘திஸ் மொமென்ட்’, சிறந்த உலகளாவிய இசை ஆல்பத்திற்கான கிராமி விருதை வென்று அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றது.

பல்வேறு இடங்களில் இருந்த சக்தி இசைக்குழுவின் கலைஞர்களால் கோவிட் காலகட்டத்தின் போது கிராமி விருது பெற்ற ஆல்பமான ‘திஸ் மொமென்ட்’ உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.