குழந்தைகள் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் திரைப்படம் ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’

ஹாலிவுட்டில் குழந்தைகளின் திரைப்பட உலகம் மாபெரும் வணிகப் பரப்பாக உள்ளது. ஆனால் இந்தியத் திரையுலகில் உள்ள மாபெரும் குறை குழந்தைகள் இடம்பெறும் வகையில் படங்கள் உருவாகின்றன. ஆனால் அவை குழந்தைகளுக்கான படங்களாக இருப்பதில்லை. இந்நிலையில் குழந்தைகளுக்கான ஒரு திரைப்படமாக உருவாகி இருப்பதுதான் புஜ்ஜி அட் அனுப்பட்டி.இப்படத்தை ராம் கந்தசாமி எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார்.

இப்படத்தில் கமல்குமார்,நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி,கார்த்திக் விஜய் ,குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன்,லாவண்யா கண்மணி,நக்கலைட்ஸ் ராம்குமார் , நக்கலைட்ஸ் மீனா ,வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் கதை என்ன?

அண்ணன் சரவணன், தங்கை துர்கா இருவரும் ஊத்துக்குளி கிராமத்தில் பெற்றோர்களுடன் ஒரு பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்கள். பண்ணையின் உரிமையாளர் சிவா குழந்தைகள் மேல் பிரியம் கொண்டவர். சரவணன் ஓர் அசைவப் பிரியன். ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பும் பொழுது இருவருக்கும் வழியில் ஓர் ஆட்டுக்குட்டி கிடைக்கிறது..
துர்கா அதைத் தன்னுடன் வீட்டுக்கு எடுத்து வந்து,அதற்கு புஜ்ஜி என்று பெயர் வைத்து பிரியமுடன் வளர்க்கிறாள். ஆனால் சரவணனோ அதை உணவாகப் பார்க்கிறான். நிலைமை இப்படி இருக்க சில நாட்கள் கழித்து ஆட்டின் உரிமையாளர் அதைத் தேடி வந்து எடுத்துச் செல்கிறார். இதனால் மனமுடைந்து போகிறாள் துர்கா. ஆட்டுக்குட்டியைப் பிரிந்து துர்கா மனம் வருந்துவதைப் பார்த்து சிவா புஜ்ஜியைத் தேடிக் கண்டுபிடித்து மீட்டுக் கொண்டு வந்து துர்காவிடம் சேர்க்கிறான். சில மாதங்களில் புஜ்ஜி வளர்ந்து பெரிய கிடா ஆகிறது. இந்நிலையில் குழந்தைகளின் குடிகார அப்பா முருகேசன் குடிப்பதற்குப் பணம் இல்லாமல் தவிக்கும் பொழுது புஜ்ஜியை விற்றுக் குடித்து விடுகிறார். ஆட்டுக்குட்டியைக் காணாமல் தவிக்கும் துர்காவைச் சமாதானம் செய்ய இம்முறை ஆட்டுக்குட்டியைத் தேடிப் புறப்படுகிறான் அண்ணன்.
தன் தங்கையையும் உடன் கூட்டிச் செல்கிறான். புஜ்ஜியைத் தேடிப் புறப்படும் இருவரின் பயணமே மீதிக்கதை.

குழந்தைகளின் மனஉலகத்தைக் காட்சிகளாகக் கண்முன் விரித்துக் காட்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ராம் கந்தசாமி எழுதி இயக்கி தனது கவிலா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.அருண்மொழி சோழன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சரவணன் மாதேஸ்வரன் படத்தொகுப்பு செய்துள்ளார். கு. கார்த்திக் பாடல்களை எழுதியுள்ளார். 

புஜ்ஜி படத்தைப் பற்றி இயக்குநர் ராம் கந்தசாமி பேசும்போது,

” குழந்தைகளின் உலகம் அன்பானது . அந்த உலகத்துக்குள் நாம் நுழைந்து விட்டால் இந்த உலகமே நமக்கு அழகானதாக மாறிவிடும். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு நமது உணர்வில் மாற்றம் ஏற்படும்.

ஓர் உயிரைத் தேடிப் பயணம் செய்யும் இரு உயிர்களின் கதையாக இப்படக்கதை அமைக்கப்பட்டுள்ளது.இது பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுப் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. படம் பார்த்த பிறகு அனைவரும் கூறியது இதுதான் ‘இது குழந்தைகள் மட்டுமல்ல அனைவருக்குமான படம்’ என்பது தான். புஜ்ஜி விரைவில் திரைக்கு வருகிறது ” என்றார்.

‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’ திரைப்படத்தை 9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.குழந்தைகள் உலகத்தைத் திரையில் காட்டும் அனுபவமாக விரைவில் இப்படம் வெளியாக உள்ளது..