‘இங்க நான் தான் கிங்கு’ விமர்சனம்

சந்தானம், பிரியா லயா,தம்பி ராமையா, பால சரவணன், மனோபாலா, விவேக் பிரசன்னா, முனீஸ் காந்த், சாமிநாதன், மாறன், சேஷு மற்றும் பலர் நடித்துள்ளனர்.ஆனந்த் நாராயணன் இயக்கியுள்ளார்.ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்கியுள்ளார் இமான் இசையமைத்துள்ளார்.கோபுரம் பிலிம்ஸ் சார்பில் சுஷ்மிதா அன்புச்செழியன் தயாரித்துள்ளார்.

படத்தின் கதை என்ன?

சொந்த பந்தம் யாரும் இல்லை .மேட்ரிமோனி கம்பெனியில் ஒரு வேலை மட்டும் உண்டு .25 லட்சம் கடன் வாங்கி கட்டிய ஒரு வீடு உண்டு .இப்படிப்பட்ட வெற்றி என்கிற சந்தானம் தனக்கு பெண் தேடிக் கொண்டிருக்கிறார்.அவருக்கு புரோக்கர் மனோபாலா மூலம் பெரிய ஜமீன் தம்பி ராமையா வீட்டுச் சம்பந்தம் பேசி முடிவெடுத்து, தடபுடலாகக் கல்யாணம் நடக்கிறது .பிறகு பார்த்தால் தான் தெரியுது. அது ஒரு நாடகத் திருமணம் என்று. எல்லாமே செட்டப் ,ஏமாற்று வேலை என்று புரிந்து கொள்கிறார் சந்தானம்.
புது மனைவி தன் மேல் தவறில்லை என்று மன்றாடுகிறார். பிறகு புதுமணத் தம்பதிகள் ஒரு பார்ட்டிக்குச் செல்கிறார்கள். அங்கே மாமனார் தம்பி ராமையாவும் மைத்துனர் பால சரவணனும் குடித்துவிட்டு உளறுவதால் சந்தானத்தின் முதலாளிக்கும் சந்தானத்திற்கும் பிரச்சினை வருகிறது .இதெல்லாம் ஒரு புறம் இருக்க, குண்டுவெடிப்பு தீவிரவாதிகள் பிரச்சனையிலும் இவர்கள் சிக்குகிறார்கள் .முடிவு என்ன என்பதுதான் கதை.

இதை முழுக்க முழுக்க சிரிப்பு மட்டும் நோக்கில் வணிகப் படமாகத்தான் உருவாகி இருக்கிறது. ஆரம்ப காட்சிகளில் எல்லாம் பிரம்மாண்டங்களைக் காட்டி நம்மை சிரிக்க வைக்கிறார்கள். போகப்போக சின்ன சின்ன சேட்டைகளின் மூலம் அனைத்துக் கதாபாத்திரங்களும் நம்மை சிரிக்க வைக்கின்றன.படம் முழுக்க அவர் வாங்கிய கடன் வாங்கிய வழியாக பயணிப்பதால் காட்சிக்கு காட்சி நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை ஒர்க் அவுட் ஆகியுள்ளது. குறிப்பாக தம்பி ராமையா, பால சரவணன், கூல் சுரேஷ், முனீஸ்காந்த் ஆகியோரிடம் மாட்டிக்கொண்டு சந்தானம் படும்பாடு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.கடன் பிரச்சினை, தீவிரவாதிகள், கொலைப்பழி, போஸ்ட்மார்ட்டம், மார்ச்சுவரியில் ஆள் மாறாட்டம், பிணம் கடத்தல் என்று கலந்து கட்டி காமெடி செய்துள்ளார்கள்.

சந்தானம் ஆரம்பத்தில் ஒரு பெரிய கதாநாயகனுக்குரிய பில்டப்போடு வருகிறார். கதாநாயகி பிரியாலயா அழகான தோற்றம் ,அளவான நடிப்பு என்று உள்ளார். தம்பி ராமையா தான் புகுந்து விளையாடுகிறார்.வழக்கமாக 500 ரூபாய்க்கு 5000 ரூபாய்க்கு நடிப்பவர். இதில் ஓவர் ஆக்சன் செய்யும் பாத்திரம் வேறு கேட்கவா வேண்டும்? புகுந்து விளையாடி இருக்கிறார். அவருக்கு பக்கபலமாக பாலா சரவணன் வருகிறார். கல்யாண புரோக்கராக மனோபாலா வருகிறார். சந்தானம் காமெடி என்கிற பெயரில் பல இடங்களில் உருவக்கேலி செய்கிறார். அதைத் தவிர்த்து விட்டு ஆரோக்கியமாக சிந்தித்து சிரிக்க வைக்கலாம்.
விவேக் பிரசன்னா வித்தியாச நடிப்பில் கவனிக்க வைக்கிறார். பிணமாக அவர் நடித்துள்ளது வெடிச் சிரிப்பு வரவைக்கும்.
சந்தானம் தம்பி ராமையா பால சரவணன் என்று அவர்கள் அடிக்கும் லூட்டியும் கலாட்டாவும் லாஜிக் எல்லாம் மருந்து சிரிக்க வைக்கும். முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும் நோக்கில் உருவாகி இருக்கும் இந்தப் படம் கோடைக்கு ஏற்ற தர்ப்பூசணி.

இமான் இசையில் ஒரு நகைச்சுவை படத்திலும் குலுக்கு குலுக்கு என்கிற கமர்சியல் குத்துப் பாடலும் மாயோனே என்கிற மெலோடி பாடலும் உள்ளது.

கதைக்கேற்ற வகையில் ஒளிப்பதிவாளர் ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வசனம் எழுதியுள்ள எழுத்தாளர் எழிச்சூர் அரவிந்தன் தன் இருப்பை வெளிப்படுத்தி உள்ளார்.மொத்தத்தில் சந்தானத்தை நம்பி வரும் நகைச்சுவை ரசிகர்களை இந்தப் படம் நிச்சயம் ஏமாற்றாது.