‘ P.T சார்’ விமர்சனம்

ஹிப் ஹாப் தமிழா ஆதி ,காஷ்மீரா பர்தேசி, பிரபு,தியாகராஜன், கே. பாக்யராஜ், பாண்டியராஜன், இளவரசு, முனிஷ்காந்த், பட்டிமன்றம் ராஜா, அனிக்கா சுரேந்திரன், தேவதர்ஷினி, வினோதினி வைத்தியநாதன், மதுவந்தி ,ஆர் ஜே விக்கி ,சுட்டி அரவிந்த், பிரசன்னா பாலச்சந்தர், அபி நட்சத்திரா, பிரணிகா , த்ரிஷ்வ்சாய் நடித்துள்ளனர்.

கார்த்திக் வேணுகோபாலன் இயக்கி உள்ளார். நாயகன் ஹிப் ஹாப் தமிழா இசை அமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பிரசன்னா ஜிகே . வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார்.

தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக ஒரு சாமானியனாக இருக்கும் ஆசிரியர் ஒருவர், சமுதாயத்தில் நிகழும் அவலங்களைத் தட்டிக் கேட்கும் நாயகனாக மாறுவது தான் படத்தின் கதை.

ஏதோ ஒரு ஜாதக காரணத்திற்காகத் தன் கல்யாணம் தள்ளிப் போய்க் கொண்டிருப்பதை எண்ணி வருத்தத்தில் இருக்கும் உடற்கல்வி ஆசிரியர் கனகவேல்தான் ஹிப் ஹாப் தமிழா ஆதி.அவரது பெற்றோர் பட்டிமன்றம் ராஜாவும் தேவதர்சினியும். ஜாதகம் சரி இல்லை ,தங்கள் பிள்ளை எந்த வம்பு தும்புக்கும் போகக்கூடாது தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கட்டுப்படுத்துகிறார்கள். அப்படியே வளர்கிறார் ஆதி.அவருக்குத் தன்னுடன் பணியாற்றும் சக ஆசிரியர் வானதி மீது காதல்.பிரபுதான் ஆசிரியையின் தந்தை.ஒரு வழியாகப் பேசி முடிவெடுக்கிறார்கள்.சந்தோஷ சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடக்கிறது. ஆனால் அந்த நாளில்
ஆதியின் வீட்டருகில் குடியிருக்கும் இளவரசுவின் மகள் அனிக்கா சுரேந்திரன் அதாவது நந்தினிக்கு ஒரு அக்கிரமம் நிகழ்கிறது. காணாமல் போகிறார் .தேடிய போது கிடைத்த தகவல் அதிர்ச்சியாக இருக்கிறது.அதைக் கேள்விப்பட்ட ஆதி வெகுண்டெழுகிறார். விளைவு? தான் பணியாற்றும் நிறுவனத்தில் நிறுவனரையே எதிர்க்க வேண்டிய சூழல்.அதன் விளைவு என்ன? இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் என்ன? என்பதுதான் படத்தின் கதை.

பள்ளிக்கூடப் பின்புலத்தில் கலகலப்பாக ஆரம்பிக்கும் கதை போகப்போக வேகம் எடுக்கிறது. ஒரு வணிக சினிமாவுக்கான காதல் அன்பு பாசம் நட்பு கலகலப்பு என அனைத்து ருசிகரமான மசாலாக்களையும் இணைத்து இந்தத் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்.அதன்படி காட்சிகள் உருவாக்கிப் படத்தை எடுத்து  பொழுதுபோக்குத் தளத்தில் அம்முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளார்.ஒன்றுமே இல்லாதது போல் தோன்றினாலும் பல இடங்கள் ரசிக்க வைக்கின்றன. அப்படி ஒரு திரைக்கதை அமைத்திருப்பது இயக்குநரின் பலம்.சினிமாவின் மொழியே அதுதான்.

இப்படத்தில் கனகவேல் என்கிற இளம் வயது உடற்கல்வி ஆசிரியரின் பாத்திரத்திற்கு ஆதி பொருத்தமாக இருக்கிறார்.பெற்றோரிடம் காட்டும் பவ்யம், அநியாயங்களைக் கண்டு பொங்கும் கோபம்,காதலியிடம் மயக்கம், கேள்வி கேட்கும் சாமானிய குணம், வலிய வம்பு இழுப்பவர்களை அடித்து துவம்சம் செய்யும் ஆவேசம் எனப்பல்வேறு நடிப்புத் தருணங்களை காட்டுவதற்கு வாய்ப்புகள் கிடைத்து அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி உள்ளார்.ஓர் இசையமைப்பாளராக அறிமுகமாகி மெல்ல மெல்ல ஒரு நாயகனாக தனது இடத்தைப் பிடித்திருக்கிறார் ஆதி .இந்தப் படத்தில் அவருக்கான திரைத் தோற்றம் அதை உறுதி செய்கிறது.

இங்கிலீஷ் டீச்சர் வானதியாக வரும் காஷ்மீரா பர்தேசி வசீகரமான முகம் அளவான நடிப்பு என்று வருகிறார். அவரது தந்தையாக இளைய திலகம் பிரபு நடித்துள்ளார். அதிக காட்சிகள் இல்லை என்றாலும் அந்தப் பாத்திரத்தை தனது இருப்பால் நிறைய வைத்திருக்கிறார். கல்லூரி பிரின்ஸ்பால் ஆக பாண்டியராஜன் சில காட்சிகள் வந்தாலும் தனது திருட்டு முழியால் சிரிக்க வைக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையாக வந்து தன் உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார் இளவரசு.

படத்தில் சின்ன சின்ன பாத்திரங்களில் நடித்த முனிஷ்காந்த், வினோதினி வைத்தியநாதன், மதுவந்தி ,ஆர் ஜே விக்கி ,சுட்டி அரவிந்த், பிரசன்னா பாலச்சந்தர், அபி நட்சத்திரா, பிரணிகா , த்ரிஷ்வ்சாய் நடிகர்கள் கூட பங்கேற்பு குறைவாக இருந்தாலும் மனதில் பதிய வைக்கும் படியான வேடங்களை ஏற்றுள்ளார்கள்.

ஆதிக்கு இசையமைப்பில் இது 25வது படம். வணிக ரீதியான பாடல்களைக் கொடுத்துள்ளார்.எல்லாமே கமர்சியல் வரிகள்.கதைக்கேற்ற கலர்ஃபுல்லான ஒளிப்பதிவு செய்துள்ளார் மாதேஷ் மாணிக்கம். ஒரு உடல் கல்வி ஆசிரியராக பள்ளியில் கைவிடப்பட்ட விளையாட்டு விழாவைக் கொண்டு வருவது என்கிற விஷயத்தைத் தவிர உடல் கல்வி ஆசிரியராகத் தன்னை வெளிப்படுத்தும் அழுத்தமான காட்சிகள் இல்லாதது ஒரு குறை.

எதையும் கண்டுகொள்ளாமல் போவது ,கடந்து போவது என்கிற பொதுச் சமூகத்தின் போக்குக்கு எதிராகப் பாடம் எடுத்துள்ளார் இந்த P.T. சார்.