‘சாமானியன்’திரைப்பட விமர்சனம்

ராமராஜன், ராதாரவி, எம்எஸ் பாஸ்கர்,போஸ் வெங்கட்.  கேஎஸ் ரவிக்குமார்,, நக்ஷா சரண்,  லியோ சிவக்குமார் நடித்துள்ளனர்.இயக்கியுள்ளார் ராகேஷ். இளையராஜா இசையமைத்துள்ளார்.தயாரிப்பு – எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்.

ஒரு காலத்தில் ராமராஜன் ,இளையராஜா, கவுண்டமணி ,செந்தில் கூட்டணியின் சேர்மானம் பெரிய அளவில் வரவேற்பு பெற்று பல படங்களை வெற்றிப் படங்களாக்கியது.

ராமராஜன் படங்களுக்கென்று ஒரு நிறம் உண்டு .அதேபோல படங்களின் பாடல்களுக்கும். ராமராஜன் அணியும் உடைகளுக்கும் கூட ஒரு தனித்தன்மை உண்டு. பெரும்பாலும் கிராமிய படங்களிலேயே அவர் நடித்தார். அதனால் கிராமராஜன் என்று கூட அவர் அழைக்கப்படுவார்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடிப்பில் வெளிவந்துள்ள படம்தான் ‘சாமானியன்’.

இதுவரை கிராமிய வேடங்களில் நடித்துள்ள அவர், இதில் ஒரு ஆக்சன் பாத்திரத்தில் நடித்துள்ளார்.அப்படி ஒரு ஆக்ஷன் கதையை அவருக்காக எழுதியிருக்கிறார் இயக்குநர் ராகேஷ். இருந்தாலும் ஒரு சாமானியன் சந்திக்கும் பிரச்சினைகளில் சென்டிமென்டையும் இணைத்து எளிமையான ரசிகர்களுக்குமான கதையாக இதைத் தொடபு படுத்தி விட்டார் இயக்குநர்.(ஆமாம் இது பொதுவாகச் சொல்லப்படுகிற கதை தானே?.ஒரு பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களும் பாதிக்கப்படுபவர்கள் பிரச்சினைக்குரியவர்களைப் பழிவாங்குவதும் பொதுவான சாதாரண ஃபார்முலா தானே? இதற்குத்தான் கதை உரிமை கோரி ஒரு கலாட்டாவா ?)

சாமானியன் படத்தின் கதை என்ன?

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள் .ஒரு சாமானியன் எழுந்தால் தாங்க முடியாது என்பதுதான் படத்தின் கதை. ராமராஜன் மதுரை மண்ணைச் சேர்ந்தவர். அவர் மதுரை அருகே ஒரு கிராமத்திலிருந்து, நண்பர் எம்எஸ் பாஸ்கருடன் சென்னைக்கு வருகிறார். அவர்கள் சென்னையில் உள்ள முஸ்லிம் நண்பர் ராதாரவி வீட்டில் தங்குகிறார்கள்.

சாதாரணமாகத் தோன்றும் ராமராஜன் அடுத்த நாள் யாரும் எதிர்பாராத காரியத்தைச் செய்கிறார்.சூட்கேஸில் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுடன் ஒரு தனியார் வங்கிக்குள் நுழைந்து அதைக் கைப்பற்றி, தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார். அந்த வங்கியின் மேனேஜர் வீட்டில்  எம்எஸ் பாஸ்கரும், உதவி மேனேஜர் வீட்டில்  ராதாரவியும் சென்று துப்பாக்கி முனையில் அந்தக்   குடும்பத்தினரைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.மூன்று பேருக்கும் உள்ள தொடர்பு என்ன? அவர்கள் மூன்று பேரும் இப்படிச் செய்ய வேண்டிய காரணம் என்ன? அதன் பின்னணியில் உள்ள உண்மை என்ன?அப்படி சிக்கிக் கொண்ட வங்கியில் உள்ளவர்கள் -வீட்டில் உள்ளவர்களை போலீஸ் மீட்டதா ?இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இடைவேளை வரை கடத்தல் கதையையும் இடைவேளைக்குப் பின்பு அதற்கான காரணத்தின் கதையையும் கூறுகிறார்கள்

இந்த கதையில் கடன் கொடுக்கும் வங்கிகள் கடன் வாங்கிய எளியவர்களைக் கொடுமைப்படுத்துவதையும் வீடு வாங்க ஆசைப்படுபவர்களை பில்டர்கள் நசுக்குவதையும்
ஒரு சாமானியனின் நிலையில் நின்று உணர வைத்தும் கேள்விகள் கேட்டும் காட்சிகள் ஆக்கி காட்டுகிறார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பின் நடிக்க வந்துள்ள ராமராஜன் முதுமை தன் தோற்றத்தில் தென்பட்டாலும் கூட சமாளித்து நடித்திருக்கிறார். அவர் தன்
மகள் மீது அளவற்ற பாசம் கொண்டுள்ள அப்பாவாக வந்து கண் கலங்க வைக்கிறார். கிளைமாக்சில் அவர் பேசும் வசனங்கள் கடன் கொடுப்பவர்களுக்கும், கடன் வாங்குபவர்களுக்குமான எச்சரிக்கை சங்கு.0

ராமராஜனின் நண்பர்களாக ராதாரவி, எம்எஸ் பாஸ்கர் வருகிறார்கள். நட்புக்குத் துணை போகும் உற்ற நட்பாக இருக்கிறார்கள். வங்கி மேனேஜராக போஸ் வெங்கட். போலீஸ் அதிகாரியாக கேஎஸ் ரவிக்குமார், ராமராஜன் மகளாக நக்ஷா சரண், எம்எஸ் பாஸ்கர் மகனாக லியோ சிவக்குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்காக இளையராஜா இசையமைத்துள்ள பாடல்களை விட, ஆங்காங்கே ஒலிக்கும் அவரது பழைய பாடல்கள் இனிமை.
ஆரம்ப கால ரஜினி ரசிகர்களுக்கே இன்று வயது ஐம்பதைத் தாண்டி விட்டது. அதேபோல் ராமராஜனின் பழைய ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்த்தாலே போதும்.படம் வெற்றி அடைந்துவிடும்.

படத்தில் பேசப்பட்டுள்ள பிரச்சினை சமகாலப் பிரச்சினையாக இருப்பதால் இக்கால ரசிகர்களும் இந்தப் படத்தை பார்க்கலாம் இது ராமராஜனுக்குப் பக்கபலம்.

எளிய மக்களின் குரலை எதிரொலிக்கிறான் இந்த ‘சாமானியன்’.