‘வெப்பன்’ திரைப்பட விமர்சனம்

சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தான்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன் ,வேலுபிரபாகரன், வினோதினி வைத்தியநாதன், பெனிடோ பிராங்க்ளின், மாயா கிருஷ்ணன், ரகு இசக்கி,மேக்னா சுமேஷ் நடித்துள்ளனர். குகன் சென்னியப்பன் இயக்கி உள்ளார். ஒளிப்பதிவு பிரபு ராகவ்,இசை ஜிப்ரான் ,எடிட்டிங் கோபி கிருஷ்ணா,தயாரிப்பு மில்லியன் ஸ்டுடியோ.

ஆக்சன் படங்கள் மத்தியில் சூப்பர் ஹியூமன் என்கிற கதைத் தளத்தில் உருவாகியிருக்கிற படம்.அதிகாலை 3 மணிக்குக் கதை தேனியில் உள்ள காட்டுப் பகுதியில் தொடங்குகிறது.பிறகு கதை சென்னை, மும்பை என்று பயணிக்கிறது.

வசந்த் ரவி ஒரு யுடியூபர்.சுற்றுச்சூழல் ஆர்வலர் அது மட்டுமல்லாமல் தனது தன் சேனலுக்காகப் புதிதாக பொருளடக்கம் தேடி அலைபவர் .இந்த உலகில் மனித சக்தியைத் தாண்டி சூப்பர் பவர் உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நம்புகிறார்.ராஜீவ் மேனன் பிளாக் சொசைட்டி என்ற பெயரில் ரகசியக்குழு ஒன்றை நடத்துகிறார் .அபாயகரமான உயிரியல் ஆய்வை நிகழ்த்துகிறார்.அதற்குப் பல மனிதர்கள் பலிகடா ஆகிறார்கள்.

தேனியில் அசாதாரணமான சம்பவம் ஒன்று நடக்கிறது.தன் சேனலுக்காக பொருளடக்கம் தேடி அங்கு வசந்த் ரவி வருகிறார்.அடுத்தடுத்து உயிரிழக்கும் தங்கள் பிளாக் சொசைட்டி நபர்களுக்கு ஆபத்தாக ஒரு சூப்பர் ஹியூமன் தான் இருக்கிறார் என்று மோப்பம் பிடித்த ராஜீவ் மேனன், தனது ஆட்களை அங்கே அனுப்புகிறார்.
வசந்த் ரவியும் அந்த ஆட்களும் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள்.இருவரும் தேடி வந்த அசாதாரண சக்தி கொண்ட மனிதரைக் கண்டுபிடித்தார்களா? இல்லையா ?வசந்த் ரவிக்கும் அந்தக் குழுவுக்கும் என்ன தொடர்பு ?தேனியில் அமைதியான சூழ்நிலையில் பிராணிகள் நேசராக காட்டுக்குள் வாழ்க்கை நடத்தி வரும் சத்யராஜ் யார்? என்ற பல கேள்விகளுக்குப் பதில் சொல்வதுதான் இந்த 120.07 நிமிடப் படத்தின் மீதிக்கதை.

முதல் பாதிப் படத்தில் சாதாரண யூ டியூபராக சூழலியல் ஆர்வலராக வருகிற வசந்த் ரவி, இரண்டாம் பாதியில் தனது இடத்தை விரிவாக ஆக்கிரமித்துக் கொள்கிறார்.அந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்ற உடல் வாகுடன் அலட்டாத நடிப்பில் பொருந்திப் போகிறார்.

சூப்பர் ஹியூமன் என்று விளம்பரங்களின் மூலம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ள சத்யராஜ் கதாபாத்திரம் எங்கே என்று முதல் பாதியில் நாம் தேடினால் இடைவேளையின் போது சர்ப்ரைஸ் முகம் காட்டுகிறார். இரண்டாம் பாதியில் ஆட்டத்தை ஆரம்பிக்கிறார்.ஒரு பக்கம் யானைக் குட்டி உடன் கொஞ்சி விளையாடுவது என்று மறுபக்கம் வில்லன்களை அடித்து அதகளம் செய்வது என்று அந்தக் கதாபாத்திரத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறார்.

நாயகியாக வரும் தான்யா ஹோப் இட நிரப்பியாக வந்து செல்கிறார். மேல் தட்டு வர்க்கத்து இரக்கமில்லாத வில்லத்தனம் காட்டும் பாத்திரத்தில் ராஜீவ் மேனன் அழுத்தமாகப் பதிகிறார்.ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன் ,வேலுபிரபாகரன், வினோதினி வைத்தியநாதன், பெனிடோ பிராங்க்ளின், மாயா கிருஷ்ணன் என்று படத்தில் பிரபலமான பல முகங்கள் வருகின்றன. அவர்களுக்குப் பெரிதாக இடமில்லை.திரையை நிறைக்கப் பயன்பட்டுள்ளனர்.

1942ல் ஹிட்லர் காலக்கட்டத்தில் சிப்பாய்களுக்கு கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சூப்பர் ஹியூமன் சீரம் என்று ஒரு கதை சொல்கிறார்கள். அதை இந்தியாவுக்குக் கொண்டு வந்து, பல ஆண்டுகள் கழித்து அதனை உயிருக்குப் போராடும் தன் மகனுக்குச் செலுத்தி பிழைக்க வைக்கும் அப்பா என ஒரு கற்பனை.
மற்றொருபுறம் ஆரா, குண்டலினி யோகம் மூலம் சூப்பர் பவரை எழுப்புவது, புராணக் கதைகள் என்றெல்லாம் பேசுகிறார்கள்.

பிரபு ராகவ்வின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் பின்னணி இசையும் படத்துக்கு பக்கபலம்.பாடல்களில் குறிப்பாக ஜிப்ரான் இசையில் நானாக நானுமில்லை ஈர்க்கிறது.
காடு ,இருள் என்று பல காட்சிகள் வருகின்றன.அவற்றைப் படமாக்கி இருக்கும் இடம் பரபரப்பூட்டும் ரகம்.

மொத்தத்தில் வெப்பன் மேலும் கூர்தீட்டப்பட்டு இருக்கலாம் என்ற உணர்வைத் தருகிறது.

சத்யராஜின் இன்னொரு பரிமாணத்தைக் காட்ட முயன்று இருக்கும் முயற்சி என்ற வகையில் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.