‘ரயில்’ திரைப்பட விமர்சனம்

குங்குமராஜ், வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரு , செந்தில் கோச்சடை, ரமேஷ் வைத்யா,  ஷமீரா, பிண்ட்டூ, வந்தனா, பேபி தனிஷா, சுபாஷ், தங்கமணி பிரபு, ரமேஷ் யந்த்ரா, சாம் டேனியல், ராஜேஷ், ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இவர்களில் பலர் அறிமுக நடிகர்கள்.

பாஸ்கர் சக்தி எழுதி இயக்கி உள்ளார்.டிஸ்கவரி சினிமாஸ்’ சார்பில், வேடியப்பன் தயாரித்திருக்கிறார்,ஒளிப்பதிவு தேனிஈஸ்வர், இசையமைப்பாளர்  S.J. ஜனனி, எடிட்டர் நாகூரான் இராமச்சந்திரன்.

தொலைக்காட்சித் தொடர் மற்றும் திரைப்படங்களுக்கு வசனம் எழுதி வந்த பாஸ்கர் சக்தி, இந்தப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார்.முதலில் ‘வடக்கன்’ என பெயரிடப்பட்ட இத்திரைப்படம், அதை தணிக்கைத்துறை ஏற்றுக் கொள்ளாததால் ரயில் என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

நாயகன் குங்குமராஜ். ஒரு எலக்ட்ரீஷியன். ஒரு குடிகாரர். இதன் காரணமாக, அவருடைய மனைவி வைரமாலாவுக்கும், அவருக்கும்  அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. இவர்களுடைய வீட்டிற்கு எதிரில் வசிக்கும் வடமாநில இளைஞர் பர்வேஸ் மெஹ்ரு. தமிழ்நாட்டிற்குப் பிழைப்பு தேடி வந்து வேலை பார்ப்பவர். எந்தவிதமான கெட்ட பழக்கமும் இல்லாதவர். வைரமாலா, பர்வேஸ் மெஹ்ருவை தம்பி போல் பாவித்து வருகிறார். இதன் காரணமாக பர்வேஸ் மெஹ்ருவின் மீது, குங்குமராஜுக்கு  வெறுப்பு ஏற்படுகிறது. ஏன் சந்தேக நெருப்பு கூட உண்டு. அதுவே பகை உணர்ச்சியாக மாறி ஒரு கட்டத்தில் தன்னுடைய குடிகார நண்பர் ரமேஷ் வைத்யாவுடன் சேர்ந்து, பர்வேஸ் மெஹ்ருவைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார், நாயகன் குங்குமராஜ். பிறகு என்ன நடந்தது? என்பதே ‘ரயில்’ படத்தின் க்ளைமாக்ஸ்!

குங்குமராஜ், வைரமாலா இருவரும் கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்தி கதை மாந்தர்களான அவர்கள் அசல் மாந்தர்களைப் போலவே வாழ்ந்திருக்கிறார்கள். தனது தோற்றத்தாலும் நடிப்பாலும் வைரமாலா ரசிகர்களை எளிதில் ஈர்த்து அதிக மதிப்பெண் பெறுகிறார்.குறிப்பாக பர்வேஸ் மெஹ்ரு இறப்பில் அவர் கதறி அழுவது கலங்க வைக்கும்.பர்வேஸின் பணப்பையைத் தொலைத்துவிட்டு, குற்ற உணர்ச்சியுடன் திரிவது கணவரைச் சந்தேகப்படுவது எதிர்த்து அடிப்பது என்று,பல்வேறு காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

வட இந்திய வாலிபராக நடித்திருக்கும் பர்வேஸ் மெஹ்ரூ, அதிகம் பேசாமலேயே அசல் பாத்திரமாக பார்ப்பவர் மனதில் அமர்ந்து விடுகிறார்.
குங்குமராஜின் நண்பராக நடித்திருக்கும் ரமேஷ் வைத்யா, நிஜக் குடிகாரனாகவே வாழ்ந்திருக்கிறார்.
வைரமாலாவின் தந்தையாக நடித்திருக்கும் செந்தில் கோச்சடை, ஷமீரா, பிண்ட்டூ, வந்தனா, பேபி தனிஷா, சுபாஷ், தங்கமணி பிரபு, ரமேஷ் யந்த்ரா, சாம் டேனியல், ராஜேஷ், ராமையா உள்ளிட்டவர்களின் நடிப்பும் குறை சொல்ல ஒன்றும் இல்லை.
இயக்குநரின் பார்வை, தயாரிப்பாளரின் பணம் இவற்றைக் கவனத்தில் கொண்டு தன்னால் முடிந்ததை நிறைவாகச் செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.

அறிமுக அறிமுக இசை அமைப்பாளர்ளர் ஜனனியின் இசையில் குறை சொல்ல ஒன்றுமில்லை.

தமிழ்நாட்டு ஆண்கள் உழைக்க மனம் இல்லாமல் குடித்து சீரழிவதைப் படத்தில் காட்டியுள்ளார் இயக்குநர். இது பலருக்கு மனதை புண்படுத்தலாம். கள்ளக்குறிச்சி சாராய சாவுகளைப் பார்க்கும்போது அவர் ஒரு கூறியதில் உள்ள உண்மை கசக்கவே செய்யும்.
வட இந்தியர்கள் மீதுள்ள வேறொரு நிழல் பக்கத்தையும் காட்டி இருந்தால் இந்தப் புகார் எழுந்திருக்காது.எனவே ஒரு சார்பு கருத்தாக இந்த படம் தெரிகிறது.

படத்தின் முதல் பாதியில் காட்சிகளில் போதாமை உணர வைக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் அதை ஈடு கட்டி உள்ளார் இயக்குநர்.இரண்டாம் பாதியில் வரும் செறிவான காட்சிகள் முதல் பாதியின் பலவீனத்தை மறக்க வைக்கின்றன.சக மனிதரை நேசிக்க வேண்டும், அன்பு காட்ட வேண்டும் என்று மனிதாபிமானம் வலியுறுத்தி அன்பைப் பேசுகிற இந்தப் படம் சின்னச் சின்ன குறைகளை மறந்து வரவேற்க வேண்டிய ஒரு படம் எனலாம்.