‘பயமறியா பிரம்மை’ திரைப்பட விமர்சனம்

ஜேடி, குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், ஜான் விஜய், சாய் பிரியங்கா ரூத், வினோத் சாகர், விஷ்வந்த்,ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின், திவ்யா கணேஷ் நடித்துள்ளனர் .ராகுல் கபாலி இயக்கித் தயாரித்துள்ளார். கே இசையமைத்துள்ளார்.அகில் பிரகாஷ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

ஜெகதீஷ் பல கொலைகள் செய்த கொடூரமான ஒரு கொலைக்குற்றவாளி சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.அவரது வாழ்க்கையை ஒரு நூலாக எழுத வேண்டும் என்று எழுத்தாளர் கபிலன் விரும்புகிறார்.அதற்காக அவரைச் சிறையில் சந்திக்கிறார்.

இருவரும் உரையாடுகிறார்கள்.அப்போது ஜெகதீஷ் ஏகப்பட்ட தத்துவங்களை கவிதை போல உதிர்க்கிறார். இருவருக்குமான உரையாடலின் போது,புத்தகங்கள் மனிதர்களிடமிருந்து ஏற்படுத்தும் தாக்கம் பற்றி எழுத்தாளர் கபிலன் குறிப்பிடுகிறார்.அது எப்படி முழுக்க சாத்தியம் என்று ஜெகதீஷ் கேட்கிறார்.
ஜெகதீஷின் கேள்விக்கான பதிலாக, அவரது வாழ்க்கையையே வாசகன் படிப்பதற்கான வரிகளாக இல்லாமல் காட்சிகளாக படத்தில் விரிகின்றன. விதவிதமான திசையில் கதை பயணிக்கிறது. முடிவு என்ன என்பதுதான் ‘பயமறியா பிரம்மை’.

புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ளார்.படத்தின் முதன்மைக் கதாபாத்திரம் ஜெகதீஷ் தான்.அவர்தான் கதை மையம் கொள்ளும் முக்கிய பாத்திரம்.ஒரு திரைப்படத்தில் ஒரு நடிகர் பல பாத்திரங்கள் நேற்று நடிப்பது உண்டு.இதில் பல நடிகர்கள் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வித்தியாசம் காட்டியுள்ளார்கள்.

ஜேடி, குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் ஆகிய ஆறு பேர் ஜெகதீஷ் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்கள். இந்த ஆறு பேரும் ஜெகதீஷ் என்ற பாத்திரத்தின் வாழ்க்கையில் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடந்த சம்பவங்களைத் திரையில் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.ஒருவருக்கொருவர் யாரும் சோடை போகவில்லை.

மாறன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய் மற்றும் ஏ.கே, எழுத்தாளர் கபிலனாக நடித்திருக்கும் வினோத் சாகர், ஜெகதீஷின் மனைவியாக வரும் திவ்யா கணேஷ் என படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் படத்தின் முழுக் கதையைத் தெரிந்து கொள்ளாமல் தங்களுக்கான வேலைகளைச் செய்திருக்கக்கூடும். ஏனென்றால் அப்படிப்பட்ட கதை இது.

பிரவின் மற்றும் நந்தா ஆகியோரது ஒளிப்பதிவும், கே -வின் இசையும்  படத்திற்குத் துணை நின்று பலம் சேர்த்துள்ளன.

எழுதி இயக்கியிருக்கும் ராகுல் கபாலி, வித்தியாசமான முறையில் கதை சொல்கிறேன் என்ற பெயரில், கொலை, வன்முறை காட்சிகளை ஈவிரக்கமின்றி ரத்த வாடையுடன் காட்டியுள்ளார்.ஜெகதீஷ் என்பவரின் வாழ்க்கையை பல நட்சத்திரங்களைக் கொண்டு விவரிக்கிறார் இயக்குநர். ஆனால் அந்தக் கதாபாத்திரத்தை படம் பார்ப்பவர்கள் மனதிற்கு நெருக்கமாகக் கொண்டுசேர்க்கத் தவறியிருக்கிறார்.

நிழல், இருட்டு என்று மனிதர்களின் கறுப்புப் பக்கத்தை ,மனதின் கோர முகத்தைக்காட்டிட கதை சொல்ல முயன்றுள்ளார் இயக்குநர்.புத்தகங்கள் மனிதர்களிடம் ஏற்படுத்தும் தாக்கங்கள் ஏராளம். அதைத்தான் இயக்குநர் சொல்ல முயன்றுள்ளார். ஆனால் குழப்பமான கதையால் சரியாகச் சொல்லாமல் தவறிவிட்டார் .எனவே ஏதோ ஒரு அதிருப்தி எண்ணம் நமக்குள் வந்துவிடுகிறது. கலையின் வழி சென்றால் மனித எண்ணங்கள் செம்மை பெறும். அங்கே வன்முறைக்கும் வன்மத்திற்கும் இடமில்லை என்று கருத்தை உணர வைக்கிறார்கள் ரத்தமும் சதையுமாகக் கதை சொல்லி.

இது வித்தியாசமான கதைக்களம் தான். ஆனால் திரை முயற்சியில் ,மாறுபட்டு சொல்ல முயன்ற இயக்குநர் நினைத்த மாதிரி சொல்ல மறந்த கதை என்று ‘பயமறியா பிரம்மை’ படத்தைக் கூறலாம்.