வைரமுத்து ஏன் விமர்சிக்கப்படுகிறார்?

மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு மொழி. அந்த மொழியின் உச்சம் தான் கவிதை.கவிதை எழுதும் கவிஞன் இந்த மனிதர்களோடு, மண்ணோடு மட்டும் தொடர்புள்ளவன் அல்ல. இந்தப் பிரபஞ்சத்தோடு தன்னை இணைத்துக் கொள்கிறான்.அவனது பார்வை ‘உலகம் யாவையும்’ தாண்டியது.அதன் விசாலம் அளவிட முடியாதது; ஆழம் அறிய முடியாதது.

அந்தக் கவிஞன் என்கிற வர்க்கத்தைச் சேர்ந்த கவிஞர் வைரமுத்து இதுவரை திரைக்காக 8000க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியவர். கவிதை, நாவல், சிறுகதைகள்,கட்டுரைகள் என்று பல்வேறு வகைமைகளில் தமிழில் 40க்கு மேற்பட்ட படைப்பு நூல்கள்,ஏழு தேசிய விருதுகள், 3 மாநில விருதுகள், ஐந்து ஃபிலிம் பேர் விருதுகள்,பத்மபூஷன், சாகித்ய அகாடமி, கலைமாமணி, பாவேந்தர் விருதுகள்,மலேசியத் தமிழ் இலக்கியக் காப்பகம் வழங்கிய மகாகவிதை நூலுக்கான பெருந்தமிழ் விருது போன்று இன்னும் ஏகப்பட்ட விருதுகள், பட்டங்கள், பரிசுகள், பாராட்டுகள் பெற்றவர். , பிரதமராக இருந்த வாஜ்பாயால் கவிசாம்ராட் , குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமால் காப்பியக் கவிஞர்,கலைஞரால் கவிப்பேரரசு என்று பட்டங்கள் வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டவர்.கவிதை சுவைஞர்களுக்கும் திரைப்பாடல் ரசிகர்களுக்கும் வியக்கத்தக்க படைப்பாளியாகத் திகழ்பவர். தனது படைப்புகளால் மட்டுமல்ல தோற்றத்தாலும் நடை உடை பாவனைகளாலும் செயல்பாடுகளாலும் இளைஞர்களைக் கவர்ந்த ஆளுமையாக அறியப்படுபவர் .

ஒரு காலத்தில் சாஸ்திரிய சங்கீத சாயலில் இருந்த திரைப்பாடல்கள், பிறகு மெட்டுக்குப்பாட்டு என்றாகி இசையின் இடநிரப்பிகளான வரிகளைக் கொண்டு பாடல்கள் வந்தன. அச்சூழலில் கண்ணதாசன் வந்து அதை இலக்கியமாக மாற்றினார். அவருக்குப் பிறகு ஒரு வெற்றிடம் நிலவியது.திரைப்பாடல் மொழியிலும் ஒரு வறட்சி பரவியது. மிகக் கொச்சையான மலிவான பாடல்கள் காளான்கள் போல் முளைத்து எழுந்தன. இப்படிப்பட்ட காலத்தில், தன் புது கவிமொழியோடு கூர்மையான சொல் வீச்சோடு வந்து நுழைந்து,வளர்ந்து கிளர்ந்து படர்ந்து பரவியவர் தான் கவிஞர் வைரமுத்து . அப்படி எழுதத் தொடங்கிய காலம் முதல் இன்று வரை உயிர்ப்புடன் எழுதி வருகிறவர் .திரை உலகில் காகிதக் காலம் வரை கணினிக் காலம் வரையிலும் சிவாஜி கணேசன் காலம் முதல் சிவகார்த்திகேயன் காலம் வரை நின்று நிலைத்திருப்பவர்.

நாட்டார் இலக்கியக் கூறுகளை சீரணத்துக்குரிய வரிகளாகத் தனது பாடல்களில் ஒளித்து வைத்தவர் . மெட்டுக்கு வரிகள் என்ற நிபந்தனைகளினூடே கவித்துவத்தைக் கலந்து ஒளிர வைத்தவர். எண்ணிக்கை அதிகமாக எழுதிய காலத்திலும் தன் தரவரிசையைத் தக்க வைத்தவர்.

அதனால்தான் தரைக்களத்தில் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் இருந்ததைப் போன்று,திரைக்களத்தில் வைரமுத்து வீழ்த்த முடியாமல் நின்று ஆடிக் கொண்டிருக்கிறார். .

பொதுவாகப் படைப்பாளிகளுக்கு முதுமையால் படைப்பூக்கம் நலிவுற்று மெலிந்து ஒரு கட்டத்தில் நீர்த்துப் போவதுண்டு. ஈரம் உலர்ந்து ஆவியாகி விடுவதுண்டு.இது பலருக்கும் இயல்பு. ஆனால் இவர் தனது படைப்பூக்க நெருப்பை அணைய விடாமல் பெரு நெருப்பாக மாற்றிக் கொண்டு நீறுபூக்க விடாமல் வைத்துள்ளார். அதனால்தான்
அகவை அறுபதைக் கடந்த போதும் தமது கவிதையை இளமையாக உள்ளீடு குறையாமல் வைத்திருக்க முடிகிறது.அதற்கான அண்மை சாட்சிதான் ‘மகாகவிதை’ நூல்.

இவரது மொழி கனிந்து பழமாகி இருக்கிறதே தவிர பழையதாகி விடவில்லை. ‘வைகறை மேகங்கள்’ முதல் ‘மகாகவிதை வரை’ இவரது வாழ்க்கை மட்டுமல்ல மொழியும் வளர்ந்து நிமிர்ந்து உயர்ந்தே வருகிறது.

இத்தனைப் பெருமைகளோடு பேருரு கொண்டு நிற்கும் அவரைக் கண்டம் கடந்தும், பிரதேச எல்லைகள் கடந்தும் வாசிக்கிறார்கள்; சுவாசிக்கிறார்கள்; நேசிக்கிறார்கள். அவரை ஒரு பட்டாளமே பின்தொடர்கிறது.
ஆனால்,அவரை ஒரு கூட்டம் விமர்சிக்கிறது; பரிகசிக்கிறது; அவதூறு செய்கிறது; கேலி பேசுகிறது;  சர்ச்சைகள் செய்கிறது. இதுவும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஏன் இது நடக்கிறது?

காரணங்கள் பலவேறாக இருந்தாலும் ‘வைரமுத்து வசதியாக இருக்கிறார்’ என்பது மிக முக்கிய காரணம். கவிஞர்களை இரவலர் போலவும் பொருளுக்காக அலைபவர் போலவும் ஒரு கேலிச்சித்திரம் உருவாக்கப்பட்டு காலம் காலமாக வண்ணம் பூசப்பட்டுக் கொண்டே வருகிறது. ‘சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்’ என்கிற உளப்பதிவை ஆழப் பதித்துள்ளார்கள். தமிழ்ச் சமூகம் இதைச் சங்க காலம் தொடங்கித் தொடரவும் செய்கிறது. இந்தச் சூழலில் தமிழை எழுதி ஒருவன் கம்பீரமாக உயர்ந்து நிற்க முடியும் என்று அவர் நிரூபித்திருக்கிறார். கவிஞர்களுக்கான தரித்திரப் பிம்பத்தை உடைத்துச் சுக்கு நூறாக்கி சரித்திரம் படைத்திருக்கிறார்.

தமிழால் ஒருவன் உயரம் வளர்ந்து சிகரம் தொட முடியும் என்பதற்கு அவர் ராட்சச உதாரணமாய் நிற்கிறார். இது பலரது கண்களை உறுத்தத்தான் செய்கிறது.

அவர் பொலிவிழந்து ஒளி குறைந்து நோய்வாய்ப்பட்டு போதைப் பழக்கத்துக்கு அடிமையாக இருந்தால் , ‘இந்தக் கவிஞன் நோபல் பரிசு வாங்க வேண்டியவனல்லவா ?’ என்று நாக்கூசாமல் சொல்வார்கள்.

அவர் செல்வாக்காக இருக்கிறார் என்றொரு எரிச்சல்.

அதிகாரபலம் மிக்கவர்களிடம் எல்லாம் அவர் அணுக்கமாக இருக்கிறார், அவர்களைத் தன் படைப்பால் தன்பால் ஈர்த்து நட்பாக இருக்கிறார்.அனைத்துத்துறையின் உயரங்களில் இருப்பவர்களையும் தனது படைப்புகளால் அவர் வியப்பூட்டி உள்ளிழுத்து தனது நட்பு மண்டலத்தில் வைத்திருக்கிறார்.

இதுவே படைப்பாளிகளை, கவிஞர்களை ஏளனம் பேசும் கூட்டத்திற்கு பெரிய பேசுபொருளாகி, ஏசு பொருளாக மாறுகிறது. பொறாமை கொண்டு தங்கள் தாழ்வுணர்ச்சியால் தூற்றுகிறார்கள். பொதுவாகப் படைப்பதில் ஈரம் வற்றியவர்கள்,படைப்பூக்க வறுமை கொண்டவர்கள் போதைப் பழக்கத்துக்கு ஆளானவர்கள் நீர்த்துப் போய்
முடங்கிப் போய் சுருங்கி விழுந்து விடுவதுண்டு. ஆனால் அவர் அன்று முதல் இன்று வரை வளர்ந்து வருகிறாரே தவிர தளர்ந்து விடவில்லை.

ஆண்டுகளும் வயதும் அவருக்கு வெறும் எண்ணாகவே இருக்கின்றன.தனது படைப்பூக்கத்தை இன்றளவும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.தன்னுள் எரியும் நெருப்பை,அது உமிழும் தகிப்பை எந்த மழை வந்தாலும் அணைந்துவிடாமல் உக்கிரதோடு காத்து வருகிறார்.அவரைச் சுற்றி எப்போதும் ஒரு பரிவாரம் உண்டு.’மனிதர்களால் ஆனது வாழ்வு’ என்பதை அவர் அறிவார்.

அவரைப் பற்றிச் சமூக ஊடகங்களில் சர்ச்சை எழுப்புபவர்கள்,முகநூலில் விமர்சனம் செய்பவர்கள் யார்? முகநூல் என்று பெயர்தான் .பெரும்பாலும் அவர்கள் முகமற்றவர்கள் .முகமிலிகளாக இருந்து கொண்டுதான் இப்படிப்பட்ட அவதூறுகளைப் பரப்புகிறார்கள்.அவர்களில் பெரும்பான்மையினர் முகமூடி அணிந்த போலிக் கணக்கு கொண்டவர்கள் .தங்களை அடையாளம் காட்டாத அசட்டு தைரியத்தில் இதைச் செய்கிறார்கள்.சமூக ஊடகங்களில் இப்படிப்பட்ட முகமிலிகளாகப் போலிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு,திட்டமிட்டு அவதூறு செய்பவர்களுக்குக் கூலி கொடுக்கப்படும் போக்கும் இன்று உள்ளது.அதன்படி அவதூறு செய்யப்படாத தலைவர்கள் என்று யாரும் இல்லை இன்று. இதன் பின்னணியில் பல்வேறு சார்புப் போக்குகள் உண்டு.

வைரமுத்து செருக்குடன் இருக்கிறார் ;திமிருடன் இருக்கிறார் என்பார்கள். அது வித்தை கர்வம் . அது தமிழ் தந்த நிமிர்வு,அதுகம்பீரம். அந்தக் கம்பீரத்தைக் கர்வம் என்று கருதக்கூடாது,அந்த தன்னம்பிக்கையைத் தலைக்கனம் என்று எடுக்கக் கூடாது, அந்த ஆளுமையை ஆணவம் என்று கருதக்கூடாது.பணிந்து செல்வதாக நினைத்து குனிந்து செல்பவனை இந்த உலகம் மதிப்பதில்லை.ஆணவம் என்பது அவருக்கான உள்விசை .அதன் உந்துதலில் இருந்துதான் அவர் மேலே செல்ல முடியும்.எனவேதான் அவரது கர்வத்தில்தான் ஒரு கம்பீரம் உள்ளது எனலாம்.

கவிஞர்கள், கலைஞர்கள் சராசரி மனிதர்களைவிட ஒரு படி மேலானவர்கள்தான்.தங்களது இடையறாத முயற்சியாலும் பயிற்சியாலும் உள்ளொளி பெருக்கி ஒரு தகுதி நிலையை அடைந்தவர்கள் அவர்கள் .

இவர் மலையைப் போல வலிமையானவர் என்பது தெரியும்; ஆனால் நெருங்கிப் பார்த்தால் அவர் இலையை போல எளிமையானவர் என்பது புரியும். ஆனால் அவரை நெருங்குவதற்கு நாம் ஒரு தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.குறைந்தபட்சம் ஒரு வாசகனாகவேனும் இருக்க வேண்டும்.அல்லது நல்ல ரசிகனாக .எதுவுமற்ற பாமரன் படைப்பாளியை அணுக முடியாதுதான்.

ஒரு துறையில்,அதுவும் கலைத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் சாதிப்பதை ,அடைவதை பிறர் அடைய முடியாது. அவர்கள் தன்னை முன் வைப்பதைத் தவிர்க்க முடியாது.அது தானாகவே நிகழும். அதுதான் ஆற்றலின் ஆணிவேர்.அவர் அடைந்துள்ள உயரத்திற்கு அவர் செலவிட்ட காலம், அர்ப்பணிப்பு பிறர் அறியாதது.அதன் பலன் தான் அவரது உயரம்.அதனால்தான் அதிகாரமிக்க அரசர்கள் அத்தனை பேரும் வரலாற்றில் இடம் பெறுவதில்லை. ஆனால் படைப்பாளிகளுக்கு இடம் உண்டு. காலம் கடந்து அவர்கள் நிற்கிறார்கள்.ராஜராஜனுக்குப் பிறகு ஆண்ட மன்னர்கள் யார் யார்? யாருக்காவது தெரிகிறதா? ஆனால் கம்பன் இளங்கோ பாரதியைத் தெரிகிறது அல்லவா? காலத்தைக் கடந்து நிற்பவர்கள்தான் கலைஞர்கள், கவிஞர்கள் .

அப்படித்தான் கவிஞர் வைரமுத்து தனது படைப்பாற்றலை மொழியின் நுண்ணுணர்வாலும் தனது உள்ளுணர்வாலும் அடைந்திருக்கிறார்.அதை அடைய பல ஆண்டுகால உழைப்பை அதற்காக அளித்திருக்கிறார்.மொழியின் அந்த நிலையை அடைய தன்னை முழுதாக ஒப்பளித்துள்ளார். அதன் விளைவாகவே இந்த நிலையை அடைந்திருக்கிறார்.

படைப்பாளிகள் எப்போதும் சராசரி மனநிலையில் இருப்பதில்லை.அதை அன்றாடர்களால், சராசரிகளால் புரிந்து கொள்ள முடியாது.அவரது வேகமும் தாகமும் எளிய மனிதர்களைச் சீண்டுகிறது. எனவே அவர்கள் சீற்றம் கொள்கிறார்கள்.
அவரது விசையின் வேகம் தாங்காமல்,அவரது உயரத்தை அண்ணாந்து பார்க்க முடியாமல் ஏளனம் செய்பவர்கள், இவற்றை விளைவிக்க அவர் பட்டபாடு தெரியாமல் அறுவடை செய்யும் போது மட்டும் ஒவ்வாமை கொள்வது ஏன்?இதைத் தங்கள் அறியாமையால் அறியாமல் இருக்கிறார்கள்.
அவரை வசை பாடுவதை விட்டுவிட்டு அவரது கவிதைகளை வாசித்தால் அதுவே அவர்களை ஆற்றுப்படுத்தும்.

படைப்புகளில் ஈடுபட்டு முட்டி மோதி மூக்குடைந்து அடிபட்டு சரிந்து விழுந்தவர்கள் இவரைப் பார்த்து எரிச்சல் படுகிறார்கள்.
முதிராத முயற்சிகளுக்குத் தோல்வி கிடைக்கும் போது குமுறுகிறார்கள்.அதனால் பொறாமையும் எரிச்சலும் புகைச்சலைத் தோற்றுவிக்கிறது. புழுதி அள்ளித் தூற்றவைக்கிறது.

வைரமுத்து எந்தப் படைப்பாளியையும் பற்றி விமர்சிப்பதில்லை .கருத்து சொல்வதில்லை; ஏளனம் பேசியதில்லை. வெறுப்புகளையும் கசப்புகளையும் அவர் எழுதுவதில்லை.நம்பிக்கையைத்தான் நாள்தோறும் எழுதுகிறார்.ஏராளமானவர்களுக்கு அவர் எழுதியவை நம்பிக்கை ஊட்டி உள்ளன. அவரது நன்னம்பிக்கை வார்த்தைகளால் வாழ்க்கை மாறியவர்கள் நிறைய பேர்.இருந்தாலும் நாலா பக்கம் இருந்தும் இப்படிப்பட்ட பொறாமை பிடித்தவர்களின் புழுதிக் காற்று அடித்துக் கொண்டே இருக்கிறது.காரணம் இவரது படைப் பூக்கம் தரும் எரிச்சல்தான்.வைரமுத்து எது பேசினாலும் அதை அனர்த்தப் படுத்த ஒரு கூட்டம் அலைகிறது .காரணம் அந்த எரிச்சலின் விளைவுதான்.
இப்படிப்பட்ட வசைகள் அவரை மனரீதியாகத் தொந்தரவு செய்வதாக நினைக்கப்படுகின்றன.அதைக் கண்டு கொள்ளாமல் அவர் பயணம் செய்கிறார்.இருந்தாலும் அவதூறுகள் தொடர்கின்றன.கொசுக்கள் அளவில் சிறியவைதான்.அதை வீழ்த்த, துப்பாக்கி தூக்கக்கூடாது; போர்வாள் ஏந்தக்கூடாது.அவற்றுக்கு ஆயுள் குறைவு, தானே அழிந்து விடும்.ஆனால் அவை அழியும் வரை ரத்தம் குடிக்கும். இந்த யதார்த்தம் அறிந்ததால் அவற்றோடு அவர் பேசுவதில்லை.

வேகமாகச் செல்லும் காரை நோக்கி தெருநாய் குரைத்துக் கொண்டே துரத்தி ஓடும். சிறிதூரம் ஓடி களைப்புடன் நின்று விடும் .ஒரு நாளும் தெரு நாய் ஓடி, காரைப் பிடித்ததுமில்லை; கடித்ததுமில்லை. அப்படித்தான் இவரைத் துரத்தும் அவதூறுகள் எண்ண வைக்கின்றன.

வைரமுத்து என்பவரைத் தனி மனிதராகக் கருதாமல் ஓர் இயக்கமாகக் கருதுகிறார்கள்.இந்தக் கருத்தில் அவரது நண்பர்களை விட அவரது எதிர்க்கூட்டத்திற்கு நம்பிக்கை உண்டு. எனவே தான் திராவிட இயக்க விரோதிகள் , சித்தாந்தத்தோடு மோதாமல் இயக்கம் சார்ந்தவர்களையும் இயக்கமாக நினைத்து வார்த்தைகளில் வன்முறை செய்கிறார்கள். இவர் போன்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நற்பிம்பத்தைக் கல்வீசி உடைக்கிறார்கள்.

இவரைப் பற்றி இன்னொன்று சொல்வார்கள்.வைரமுத்து லாபி செய்கிறார்.

முகநூலில் நான்கு வரி எழுதுவோர் கூட தனக்கான ஆதரவைத் திரட்டுவார்கள். பதிவுகளைப் பார்த்தால் மட்டும் போதுமா? விருப்பக் குறியிட வேண்டும், கருத்து சொல்ல வேண்டும் என்று கேட்கிறார்கள். இப்படி அவரவர், அவரவர் அளவிற்கு லாபி செய்யத்தான் செய்கிறார்கள் .அது போல் தான் அவர் உயரத்திற்கு அவர் லாபி செய்கிறார்.

இதில் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும் இவரது கவிதைகளை ஒன்றும் செய்ய முடியவில்லை. அது தன்னளவில் செறிவோடு நிலைபெற்று நிலைத்து இருக்கிறது .கருத்தோடும் கவிதையோடு மோத முடியாதவர்கள், தனி மனிதத் தாக்குதலில் ஈடுபட்டு தங்கள் பொறாமையைத் தீர்த்துக் கொள்கிறார்கள். அதன் மூலம் அருவியைப் பார்த்து எச்சில் துப்புவது போல் அற்ப திருப்தி அடைகிறார்கள். அப்படித் தங்கள் ஏக்கத்திற்கு வடிகால் தேடிக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்ட களைகளை பதர்களைக் கண்டுகொள்ளாமல் கடந்து கொண்டே அவரது கவிதைப் பயணம் தொடர்கிறது.

ஒரு நதியைப் போல் கொள்ள வேண்டியன கொண்டு , தள்ள வேண்டியன தள்ளி சகல அழுக்குகளையும் கரைத்தும் பதர்களை நனைத்து ஈரமாக்கியும் தன்னோடு அடித்துச்சென்று தன் போக்கில் செல்லும் நதியைப் போல அவரது கவிதைப் பயணம் தொடர்கிறது.

நாளை கவிஞருக்குப் பிறந்தநாள்!

.கவிஞருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
– சோழன்