‘நந்தன்’ திரைப்பட விமர்சனம்

சசிகுமார், பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி ,சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.இரா. சரவணன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார் .இரா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் வெளியிட்டுள்ளது.

வணங்கான்குடி ஊரில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிறது. வழக்கமாக, அந்த ஊரில் மேல்தட்டு சாதியைச் சேர்ந்த கோப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்) குடும்பம் தான் தலைமுறை தலைமுறையாக தலைவர் பதவியில் இருந்து வருகிறது.தன்னை எதிர்த்து யாரும் தலைவராக வந்து விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்.இந்த சமயத்தில் அந்த ஊரை ரிசர்வ் என்று அறிவிக்கிறார்கள். அதன்படி அந்த ஊரில் தாழ்த்தப்பட்ட மக்களில் இருந்து ஒருவர் தான் தலைவராக முடியும் .

இதனால், ஆத்திரமடைகிறார் பாலாஜி சக்திவேல். தன் சொல்பேச்சு கேட்டு அடிமையாக இருக்கும் கூழ்பானை என்கிற அம்பேத்குமாரை (சசிகுமார்) தலைவராக்க முடிவு செய்கிறார்.பல வகையிலும் சீண்டப்படுவதன் மூலம் தன்னைப் பதவியில் ஒரு பொம்மையாகதான் வைத்திருக்கிறார்கள் என்பது சசிகுமாருக்குப் புரிகிறது.அதை எதிர்க்கிறாரா இல்லையா முடிவு என்ன என்பதுதான் ‘நந்தன்’ கதை.

எந்த நேரமும் வெற்றிலை குதப்பும் வாய், தோள்பட்டை வரை வளர்ந்த முடி, அழுக்கு ஏறிய முகம் பழைய பழுப்பு நிற பனியன் இன்று எப்போதும் ஐயா விசுவாசியாக இருக்கிறார் கூழ்பானை பாத்திரத்தில் வரும் சசிகுமார்.எல்லைக்கோடு மாறாத நடிப்பு.

சாதி ஆணவக்காரராக அந்தப் பாத்திரத்தில் அசலாகப் பொருந்தி உள்ளார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். அவரது விழிகளும் உடல் மொழியும் பேசும் வார்த்தைகளும் அந்தப் பாத்திரத்தைக் கண் முன் நிறுத்துகின்றன.

சசிகுமார் மனைவியாக வரும் ஸ்ருதி பெரியசாமி தோற்றத்தில் நடிப்பில் குறை சொல்ல ஒன்றும் இல்லை.

பிடிஓ பாத்திரத்தில் வரும் சமுத்திரக்கனி கொஞ்ச நேரம் வந்தாலும் பதிகிறார்.

சாதீய ரீதியாக ஒடுக்கப்படுபவர்கள் அதிகாரத்துக்கு வர எதிர்கொள்ளும் அவமானங்கள், பதவிக்கு வந்த பிறகும் அவங்க நடத்தப்படும் விதம் போன்றவற்றை படத்தில் காட்ட நினைத்த இயக்குநர் சில மிகைப் படுத்தல்களால் மனதோடு நெருங்க விடாமல் செய்து விடுகிறார்.நாடகத்தனமான காட்சிகள்,வலிந்து திணிக்கப்பட்ட மிகை சம்பவங்கள் போன்றவற்றால் அழுத்தமாக பதிய வேண்டிய படம் திசை மாறிவிடுகிறது.

படம் பார்ப்பவர்களுக்கு இரக்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இழிவு படுத்துவதைச் சித்தரிப்பதற்காகப் பேசப்படும் மோசமான வசனங்கள், குமட்ட வைத்து படத்தின் தரத்தைக் குறைத்து விடுகின்றன.

அதிகாரமும் சாதியும் படுத்தும் பாட்டை , எளியவர்களைச் செய்யும் ஒடுக்குதல்களை பல காட்சிகளில் காட்டியிருந்தாலும் அது போதுமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
முன்னரே யூகிக்கும் படியான காட்சிகள் வருவது திரைக்கதையின் பலவீனம்.

தன்னுடைய தாய் இறப்புக்கு இடம் கொடுக்காமல் இருப்பது, ஊர் முன்னால் தன்னை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்துவது போன்றவை நடந்த பிறகும் கூட சசிகுமாரின் அமைதி மனநிலை பாத்திர அதர்மம். திடீரென சசிகுமார் தலைவர் பதவிக்குப் போட்டியிட மனம் மாறுவது நம்பும்படியாக இல்லை.

ஜிப்ரானுடைய இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ஓகே ரகம்.ஆர்.வி. சரனுடைய ஒளிப்பதிவு அந்த ஊரின் இயல்பை திரையில் காட்டியுள்ளது.
மொத்தத்தில், ‘நந்தன்’ பலவீனமான திரைக்கதையால் படம் தடம்மாறித் தடுமாறுகிறது.