ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வஸ்திகா, சஞ்சனா ,கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணன், கீதா கைலாசம், தேவதர்ஷினி, ஜென்சன் திவாகர், டி எஸ் கே நடித்துள்ளனர்.
தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார் . ஒளிப்பதிவு தினேஷ் புருஷோத்தமன், இசை ஷான் ரோல்டன், எடிட்டிங் மதன் , கலை வீரமணி கணேசன், பாடல்கள் மோகன் ராஜன்,.பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார்.
நடிகர் ஹரிஷ் கல்யாண்,அட்டகத்தி தினேஷ் , இருவருக்குமான ஈகோ மோதல்களுடன், கிரிக்கெட் போட்டியும் இணைந்து உருவாகியிருக்கும் படம் தான் ‘லப்பர் பந்து’.
பேட்ஸ்மேன் அட்டகத்தி தினேஷ்,உள்ளூரில் ஸ்டம்பர் பால் கிரிக்கெட்டில் தலை நிமிர்ந்து நிற்கிறார்.அவரது மனைவிக்கு கிரிக்கெட் பிடிக்காது.எனவே தெரியாமல் ஆடுகிறார். இருந்தாலும் வெறித்தனமாக அதில் பெயர் பெற்றவராக உள்ளார்.இவரை எப்படியாவது குறைந்த எண்ணிக்கை ரன்களில் ஆட்டம் இழக்க செய்ய வேண்டும் என்கிற வேகத்தோடு வளர்ந்து வருபவர் ஹரிஷ் கல்யாண் .இவர் ஒரு ஆல் ரவுண்டர். சூழல் அமைகிற அந்த ஒரு சந்தர்ப்பத்தில் அட்டகத்தி தினேஷை சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்கச் செய்து வெளியேற்றுகிறார். இதனால் இருவருக்குள்ளும் ஆணவ மோதல் வெடிக்கிறது.இது ஒரு பக்கம் இருக்க,அட்டகத்தி தினேஷின் மகள் சஞ்சனாவை ஹரிஷ் கல்யாண் காதலிக்கிறார். இருவரின் ஈகோ மோதல் இடையே அந்தக் காதல் என்னவானது? இறுதியில் இருவரும் இணைந்தார்களா, இல்லையா? என்பதே லப்பர் பந்து படத்தின் மீதிக் கதை.
பெருநகரம் தாண்டிய பகுதிகளிலும் கிராமங்களிலும் நடக்கும் ஸ்டம்பர் பால் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்தக் கதையை உருவாக்கி உள்ளார்கள். சாதிய,பாலினப் பாகுபாடுகள் போன்றவற்றை உறுத்தாத வகையில் கதைக்குள் நுழைத்து ஒரு ரசிக்கும் படியான விளையாட்டுப் பின்னணியிலான படத்தைக் கொடுத்து பெயர் வாங்கி இருக்கிறார் புதுமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.
சலிப்பூட்டாத காட்சிகளாலும் போர் அடிக்காத திரைக்கதையாலும் மீண்டும் ஒரு சென்னை 28 அனுபவத்தைத் தருகிறது இந்தப் படம்.இரு நாயகர்களுக்கும் கிரிக்கெட் மீதான காதலால் குடும்பத்திற்குள் நடக்கும் குழப்பங்களை மிகவும் ஜனரஞ்சகமாகவும், நகைச்சுவையாகவும் கூறியுள்ளார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.கிரிக்கெட்டுக்குள் திறமையை வைத்து வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமே தவிர அவர்களது சாதியைத் தகுதியாகப் பார்க்க கூடாது என்ற கருத்தை விதைத்துள்ளார் இயக்குநர்.
‘பார்க்கிங்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு ஆணவமோதல் கதையில் நடித்துள்ள ஹரிஷ் கல்யாண் ,நடிப்பில் பலபடிகள் மேலேறி உள்ளார்.முகபாவனைகள், வசன உச்சரிப்பு, உடல்மொழி என அனைத்திலும் முதிர் நடிப்பைக் காட்டியுள்ளார்.தனது வழக்கமான இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்
ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகியவர்களின் பிடிவாதமான மோதல்கள் படத்தில் மிகப் பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.கோரிப்பாளையம் படத்தில் நடித்த சுவாசிகா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் தினேஷின் மனைவியாக நடித்திருக்கிறார்.சக்தி வாய்ந்த இருவர்களது மோதல்களிடையே இவரும் தனித்து தெரிகிறார்.அந்த அளவிற்கு இவரது நடிப்பு மிக அழகாக வெளிப்பட்டிருக்கிறது.
ஹரிஷ் கல்யாணின் ஜோடியாக நடித்திருக்கும் சுழல் வெப் சீரிஸ் புகழ் சஞ்சனா, நேர்த்தியாக நடித்து கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து இருக்கிறார்.மூத்த கிரிக்கெட் வீரராக வரும் காளி வெங்கட், பழைய எண்பதுகளில் ஆடிய தெருமுனை கிரிக்கெட் ஆட்டக்காரர்களை நினைவூட்டுகிறார்.தினேஷின் மாமியாராக வரும் கீதா கைலாசம், அனுதாபத்தை அள்ளுகிறார்.
ஹரிஷ் கல்யாணின் நண்பராக வரும் பால சரவணன், படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறார். இவருடன் இணைந்து அட்டகத்தி தினேஷின் நண்பராக நடித்திருக்கும் ஜென்ஷன் திவாகரும், காமெடியில் பட்டையை கிளப்பியிருக்கிறார்.இதற்கு நடுவே வரும் கேப்டன் விஜயகாந்த் ரெஃபரன்ஸ், காட்சிகளும் படத்திற்கு மிகப்பெரிய பலம். உடன் நடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையைச் சிறப்பாக செய்துள்ளனர்.
கிரிக்கெட் போட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளை மிக சிறப்பாக கையாண்டு இருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ். எந்த ஒரு இடத்திலும் நாடகத்தனம் வந்து விடாமல் அந்தக் கிரிக்கெட் மைதானத்துக்குள்ளேயே நம்மை அழைத்துச் சென்று இருக்கிறார்.ஷான் ரோல்டன் இசையில் பாடல்களை விட பின்னணி இசை பிரமாதம்.
படத்தின் விறுவிறுப்பும் இயல்பான காட்சிகளும் சின்ன சின்ன குறைகளை மறந்து படத்தை ரசிக்க வைக்கின்றன.நண்பர்களுடன் சேர்ந்து பார்க்க தகுந்த கொண்டாட்டமான திரைப்படம் ‘லப்பர் பந்து’.