‘மெய்யழகன்’ திரைப்பட விமர்சனம்

கார்த்தி, அரவிந்த்சாமி,ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ், ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி, , ஸ்ரீரஞ்சனி, இளவரசு, கருணாகரன் நடித்து உள்ளனர்.’96 ‘படத்தை இயக்கிய சி. பிரேம்குமார் இயக்கி உள்ளார்.ஒளிப்பதிவு மகேந்திரன் ஜெயராஜு, இசை கோவிந்த் வசந்தா, எடிட்டிங் ஆர் கோவிந்தராஜ்.2D என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சூர்யா – ஜோதிகா தயாரித்துள்ளனர்.

அரவிந்த் சாமி பெற்றோருடன் தஞ்சையில் வசிக்கிறார். குடும்பத்தில் நிலவிய சொத்துப் பிரச்சினை காரணமாக,சிலர் செய்த துரோகத்தால், பாரம்பரியமாக வாழ்ந்த வீட்டை இழக்க நேரிடுகிறது. இதனால் ஊரைவிட்டு குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்கிறது.

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று விட்ட தன் தங்கையின் திருமணத்திற்காகத் தஞ்சாவூர் வருகிறார் அரவிந்த்சாமி .
சென்னையில் இருந்து புறப்பட்டது முதல், மனதில் ஓர் ஒவ்வாமை நிலவுகிறது. அதே மனதுடன்தான் அங்கே செல்கிறார்.அங்கு, அவரை விழுந்து விழுந்து கவனிக்கிறார் கார்த்தி.“அத்தான் அத்தான்” என முறை வைத்து அழைத்து இழைந்து நெருக்கமாகி, பாசம் காட்டுகிறார்.ஆனாலும் ஊர் மீது உள்ள பழைய கசப்பினால்அவரைப் புரிந்து கொள்ளாமல், மனம் ஒட்ட மறுக்கின்றது.அதனால் கார்த்தியிடமிருந்து விலகி விலகிச் செல்கிறார்.

அரை மனதோடு சென்ற அரவிந்த்சாமியோ,கல்யாண வீட்டில் தலைக்காட்டி விட்டு உடனே திரும்ப வேண்டும் என்று நினைக்கிறார்.சென்னை செல்ல வேண்டிய பஸ்சை தவற விட்டுவிடுகிறார்.தன் விருப்பத்திற்கு எதிராக,எதிர்பாராத விதமாக, ஊரில் ஒரு நாள் தங்க வேண்டி வருகிறது.

கார்த்தி தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே தங்க வைத்து அன்பாக உபசரிக்கிறார். மனம் விட்டுப் பேசி, குடித்து அரட்டை அடிக்கிறார்கள் பலவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.தன்னிடம் இப்படி அன்பு காட்டும் கார்த்தியுடன் யாரென்று தெரியாமல் பழகுகிறோமே என்று, ஓர் உறுத்தல் வருகிறது அரவிந்த்சாமிக்கு . மறந்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில், யாரிடமும் சொல்லாமல் ஊருக்குத் திரும்புகிறார்.கார்த்தி அவருக்கு யார்? பெயர் தெரிய வந்ததா என்பதே உணர்ச்சிகரமான மெய்யழகன் கதை.

இந்த மெய்யழகன் திரைப்படம் தஞ்சை மண்ணின் பின்னணியில் உருவாகி உள்ளது. தஞ்சையின் அழகையும் மண்ணின் மொழியை படத்தில் இயல்பாகவும் அழகாகவும் காட்டியுள்ளார் இயக்குநர்.

அரவிந்த் சாமியைப் பார்த்தவுடனேயே, அவரது கண்களைப் பொத்தி, “யாருன்னு சொல்லுங்க பாப்போம்” என்று சொல்லி, “அத்தான் அத்தான்” என்று ஒட்டிக்கொள்ளும்போதே படம் பார்ப்பவர் மனதிலும் அமர்ந்து விடுகிறார் கார்த்தி .உணர்ச்சிகரமாக பழைய பள்ளிக்கால பால்ய கால நினைவுகளைப் பகிர்ந்துகொள்வது அழகு.முதல் பாதியில் நகைச்சுவைக்கான பகுதியையும் பிடித்துக் கொள்கிறார் கார்த்தி.இரண்டாவது பாதியில் அவரது கதாபாத்திரத்தின் மேல் அழுத்தம் கூடி பார்ப்பவரைக் கலங்க வைக்கிறார்.

முதல் பாதி படத்தில் அரவிந்த்சாமி பாத்திரம் ஆக்கிரமித்துக் கொள்கிறது.ஆர்ப்பாட்டம் இல்லாத அவரது இயல்பான நடிப்பு மிக அழகு.
அருள்மொழி வர்மன் என்கிற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் அவர்.முதலில் தவிர்க்க நினைத்த கார்த்தி மெல்ல மெல்ல அவருக்குள் ஆக்கிரமிப்பது அவரைப் பற்றி அறிந்து கொள்ளாமல் இருக்கிறோமே என்று சங்கடத்தில் நெளிவது, குற்ற உணர்ச்சியில் உருகுவது போன்ற காட்சிகளில் அரவிந்த்சாமி நன்றாகவே நடித்துள்ளார்.கார்த்தி அன்பைப் புரிந்து கொள்ளாமல் பெயரைக்கூட மறந்துவிட்டோமே என உடைந்து அழுவது சபாஷ் நடிப்பு.

ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ், ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி, , ஸ்ரீரஞ்சனி, இளவரசு, கருணாகரன் என அனைவருமே சிற்சில காட்சிகளில் வந்தாலும் அவரவர்களுக்கான காட்சி சித்தரிப்பு நன்று .அதில் சிறப்பாகவே நடித்து உள்ளனர்.

கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் அருமை. ஊரின் நேசத்தை, மனிதர்கள் மீதான பாசத்தை வெளிப்படுத்தும் இசை. கமல்ஹாசன் பாடிய “போய்வா..கலங்காதே” பாடல் மனதுக்குள் இறங்குகிறது. அதே போல உணர்ச்சியூட்டும்  வெறி பாடலும் அருமை. பின்னணி இசையும் சிறப்பு. படத்தின் ஒரு கதாபாத்திரமாகவே, இழைந்து வருகிறது இசை. 

மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவு சிறப்பு. தஞ்சை மண்ணை கண் முன் நிறுத்துகிறது. பச்சைப் பசேல் வயல் வெளிகள், தெருக்கள் என நாமும் தஞ்சை சென்று வந்த உணர்வைத் தருகிறது.ஆர். கோவிந்தராஜின் எடிட்டிங் படத்துக்குப் பலம்.

மரம் உயர்ந்தாலும் வேர் மண்ணுக்கடியில் இருப்பது போல் ,நாம் எங்கே சென்றாலும் நமது சொந்த  ஊர் நினைவுகள் நமது ஆழ்மனதில் தங்கி இருப்பதை,பிறந்த ஊர் நினைவுகள் அழியாதவை என்பதைக் காட்சிகளாக்கியுள்ளார் இயக்குநர் பிரேம் குமார்.குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதையும் சொல்லாமல் கூறியுள்ளார்.

மனம் விட்டு அரவிந்த்சாமியிடம் கார்த்தி பேசுகிற அந்த இரவு நேரக்காட்சியில் கோயில் வெண்ணி ,வாகைப் பரந்தலை சோழன் ,சேரன் போர்கள்,தமிழர்களின் வரலாறு, வீரம், ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, ஈழத்தமிழர்கள் படுகொலை என்று பேசுவது நன்றாக இருந்தாலும் கதை ஓட்டத்தை விட்டு விலகிய உணர்வைக் கொண்டு வருகிறது.அவற்றையும் கடந்து படத்தில் நெகிழ வைக்க, உருக வைக்க மனம் கலங்க வைக்கும் காட்சிகள் பல உள்ளன.

செயற்கையான திருப்பங்கள் வலிந்து திணிக்கப்பட்ட முடிச்சுகள் என்று எதுவும் இல்லாமல் இயல்பான நீரோட்டம் போலச் செல்கிறது கதை.

மொத்தத்தில் அன்பைப் பேசுகிற இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும்.