‘ஆரகன்’ திரைப்பட விமர்சனம்

மைக்கேல் தங்கதுரை, கவிப்பிரியா, ஸ்ரீரஞ்சனி, கலைராணி, யாசர் நடித்துள்ளனர்.ஒளிப்பதிவு சூரியா வைத்தி,இசை விவேக் – ஜஸ்வந்த், எடிட்டிங் சசி தக்ஷா, கலை கல்கி ஜெயசீலன்.எழுதி இயக்கி உள்ளார் அருண் கே ஆர். ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்துள்ளார்.

‘ஆரகன்’ படத்தின் கதை என்ன? சரவணன் -மகிழ்நிலா இருவரும் காதலிக்கிறார்கள்.இருவர்களுக்கும் குடும்பக் குறுக்கீடுகள் இல்லை. தடைகள் இல்லை. ஆனால் பொருளாதாரத்தில் இருவரும் நிலையான இடத்தை நோக்கிச் செல்ல நினைக்கிறார்கள். சரவணன் ஒரு தொழில் தொடங்கப் பணம் தேவைப்படுகிறது. அவனுக்கு உதவி செய்ய மகிழ்நிலா ஒரு வேலைக்குச் செல்கிறாள். தொடர்புகளற்ற ஓர் ஊரில் இதய நோயாளியாகத் தன்னந்தனியாக இருக்கும் பெரிய பணக்கார வீட்டுப் பெண்மணியைப், பார்த்துக்கொள்வதுதான் வேலை . கை நிறைய சம்பளம் தருகிறார்கள் என்று அங்கே செல்கிறாள்.வேலை பிடித்து விட்டது. இருவருக்குள்ளும் நல்ல அன்புப்பிணைப்பு ஏற்படுகிறது.ஆனால் சில நாட்களில் அவளுக்குக் கெட்ட கனவுகள் வருகின்றன.யாரை நம்புவது என்று தெரியவில்லை. நம்பிச் சென்ற அந்த இடத்தில் அவள் எதிர்பாராத போராட்டங்களும் சிக்கல்களும் மர்மங்களும் வருகின்றன. அவற்றை எதிர்கொள்கிறாள்.சோதனைகளை அவள் எப்படிக் கடக்கிறாள் என்பதுதான்  மீதிக் கதை.

இந்தக் கதையைக் கூறும்போது ராஜா காலத்திலிருந்து கதையைத் தொடங்கி திரைக்கதையில் தொன்மம், வரலாறு, மாந்திரீகம், அமானுஷ்யம் , சித்தர் கதை, திகில் கலந்து ஒரு புதிய அனுபவத்துக்கு நம்மை இட்டுச் செல்கிறார்கள்.

அங்காரகன் என்றால் இந்துத் தொன்மவியலில் கூறப்படும் நவக்கிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் அதிபதி என்பர். சரி ஆரகன் என்றால் யார்? அழிப்போன், கள்வன், கபடன் என்று பொருள் கூறப்படுகிறது. ஆரகன் என்ற பெயர் அழிக்கும் தொழிலைச் செய்யும் சிவனைக் குறிப்பதாகவும் கூறுவர்.

படத்தில் எதிர்மறை உணர்வு கொண்ட பாத்திரமாக கதாநாயகன் வருவது புரிகிறது. அவனைத்தான் ஆரகன் என்பது குறிக்கும் எனலாம்.

படத்தின் கதாநாயகனாக சரவணன் கதாபாத்திரத்தில்  மைக்கேல் தங்கராஜ் நடித்துள்ளார். .அந்தப் பாத்திரம் நேர்நிலையானதா எதிர்மறையானதா என்று யூகிக்க முடியாத அளவிற்கு மர்மம் இருந்ததாக உள்ளது. மகிழ்நிலா பாத்திரத்தில் வரும் கவிப்பிரியா பாந்தமான முகம், உயிர்ப்பான நடிப்பு என்று வருகிறார். காதலர்கள் இருவருக்குள்ளும் நல்ல நெருக்கமும் இறுக்கமும்  காதலர்கள் போல நம்பும் படியாக உள்ளது.தனிமை நாடும் பணக்கார வீட்டுப் பெண்மணியாக வளர்மதி பாத்திரத்தில் ஸ்ரீரஞ்சனி வருகிறார். அவரது பாத்திரத்தின் தன்மையும் கணிக்க முடியாத அளவிற்குப் புதிராக உள்ளது.

இன்னொரு பக்கம் சங்கிலியால் பிணைக்கப்பட்டு தனிமையில் சிறை போல வைக்கப்பட்டுள்ள கலைராணி புதிரான பாத்திரத்தில் அறிமுகமாகிஅவருக்கு என்ன ஆயிற்று என்று யோசிக்க வைக்கிறார்.’
‘காட்டுல கூட்டமா காட்டெருமை இருந்தா கூட ஒரே ஒரு காட்டெருமையை மட்டும் சிங்கம் கரெக்ட்டா அடிச்சி தூக்கும்.அந்த மாதிரி வீக்கா இருக்கிறவங்கள ஈஸியா கண்ட்ரோல் பண்ணலாம்.அவங்க மனசுக்குள்ள நாம இருக்கறவரைக்கும் நம்ம கண்ட்ரோல்ல தான் இருப்பாங்க.’ என்று கதாநாயகன் சரவணன் பேசும் வசனம் கதையின் போக்கை நிர்ணயிப்பதில் முக்கிய இடம் வைக்கிறது.

படத்தில் முதல் பாதியில் வரும் அத்தனை பாத்திரங்கள் மீதும் மர்மமுடிச்சுகள் விழுகின்றன. இரண்டாம் பாதியில் தான் அந்த முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன.இந்த முடிச்சுகள் அவிழ்ப்புகள் விளையாட்டு பார்ப்பவர்களுக்கு சுவாரசியமான அனுபவத்தைத் தரும்.

படத்திற்கு ஒளிப்பதிவு சூரியா வைத்தி,இசை விவேக் – ஜஸ்வந்த் இருவரும் படத்தை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.படத்தின் ஒளிப்பதிவும் இசையும் இயக்குநர் சொல்ல வந்த கதைக்கு பக்கபலமாக கரம்கொத்துள்ளன.

மொத்தத்தில் இந்த ஆரகன் நல்லதொரு ஹாரர்  திரில்லராக உருவாகியுள்ளது.திகில் பட ரசிகர்களுக்குப் பிடிக்கும்.