‘பிளாக்’ திரைப்பட விமர்சனம்

ஜீவா,பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, யோகி ஜேபி, ஷாரா, ஸ்வயம் சித்தா, சிந்தூரி நடித்துள்ளனர்.கே .ஜி . பாலசுப்பிரமணி எழுதி இயக்கியுள்ளார் .இசை – சாம் சி.எஸ்,ஒளிப்பதிவு – கோகுல் பினோய்,படத்தொகுப்பு –பிலோமின் ராஜ்,கலை இயக்குநர் – சதீஷ் குமார்,சண்டைப் பயிற்சி – மெட்ரோ மகேஷ்.தயாரிப்பு நிறுவனம் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ்.தயாரிப்பாளர்கள் – SR பிரகாஷ் பாபு, SR பிரபு, P கோபிநாத், தங்க பிரபாகரன் R.

ஜீவாவும் பிரியா பவானி சங்கரும் இளம் தம்பதிகள். இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் .ஜீவாவிற்கு ஒரு வாரம் விடுமுறை கிடைக்கிறது .அந்த விடுமுறையில் வேறு எங்காவது வெளியில் செல்லலாம் என்றால் எங்கே செல்வது என்று விவாதம் நடக்கிறது. வெளியில் தூரமாகச் செல்வதில் முடிவு எட்டவில்லை. எனவே ஒரு கெஸ்ட் ஹவுஸில் தங்குவது, விடுமுறையைக் கழிப்பது என்று முடிவு எடுக்கிறார்கள். ஆனால்  , யாரும் குடியேறாத வில்லாக்களாக இருக்கும் பகுதியில் உள்ள அந்த கெஸ்ட் ஹவுஸ் சென்ற பிறகு அங்கே சில அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கின்றன . அந்த வீட்டுக்குள் நுழைந்த சில நிமிடங்களில் அங்கிருந்த ஒரே ஒரு காவலாளி திடீரென்று காணாமல் போகிறார்.மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

ஜீவாவும், பிரியாவும் வெளியே வந்து மீண்டும் வீட்டுக்குள் நுழையும் போது, அவர்கள் எதிர் வீட்டில் விளக்கு எரிகிறது. யாரும் இல்லாத வீட்டில் எப்படி விளக்கு எரிகிறது என அந்த வீட்டின் அருகே சென்று பார்க்கிறார்கள். போய்ப் பார்த்தால் இவர்களது வீட்டுக்குள் இருக்கும் பொருட்கள் போலவே அந்த வீட்டுக்குள் இருப்பதோடு, அந்த வீட்டுக்குள் இவர்களைப் போல உருவம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். இதைப் பார்த்ததும் இருவரும் அதிர்ச்சியடைகிறார்கள் , நடப்பது கனவா? அல்லது நிஜமா? மாயையா மணக்கோளாறா? தங்களுக்கு இருப்பது மனப்பிறழ்வா என்று குழப்பமடைகிறார்கள்.அசாதாரணமான அமானுஷ்யமான ஏதோ ஒன்று நிகழப்போகிறது என்று மட்டும் அவர்களுக்குள் உள்ளுணர்வு கூறுகிறது.உயிர் பயத்தால் உந்தப்பட்ட அவர்கள் அங்கிருந்து வெளியேற முயற்சி செய்கிறார்கள். ஆனால், அவர்களால் அது முடியவில்லை.காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றால் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு வந்து நிற்கிறார்கள்.தொடர்ந்து அவர்களைச் சுற்றிப் பல மர்மமான சம்பவங்கள் நிகழ்கின்றன. எதனால் அப்படி நடக்கின்றன ?அதன் பின்னணியில் இருப்பது என்ன? என்பதை மர்மமும் திகிலும் கலந்து சொல்லும் 117 நிமிடத் திரைப்படம்தான் ‘பிளாக்’.

இந்த பிளாக் படம் ஓர் ஆங்கிலப் பட ரீமேக் என்று படக்குழுவினர் அறிவித்து விட்டார்கள். எனவே அது பற்றிய ஆராய்ச்சிகள் தேவையில்லை.தமிழில் உருவாகி இருக்கும் இந்தப் படம் எப்படி இருக்கிறது, என்றால் உண்மையிலேயே ‘பிளாக்’ படம் வித்தியாசமான முயற்சி தான்.

இது இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே சுற்றி நடக்கும் கதைதான். ஆனாலும், அதையெல்லாம் நம்மை மறக்கச் செய்துவிட்டு சுவாரசியமான விறுவிறுப்பான திரைக்கதை மூலம் படத்தை நகர்த்திச் செல்கிறார் இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி.

ஜீவா – பிரியா பவானி சங்கர் தம்பதி போலவே மற்றொரு ஜோடி எப்படி? , இரண்டு ஜோடிகளில் யார் நிஜம்? என்ற கேள்விகள் தான் படத்தின் மையம் மட்டுமல்ல மர்மமும் கூட. அந்த ஒரு சஸ்பென்ஸை மட்டும் வைத்துக் கொண்டு, அவர்கள் வெவ்வேறு நேரங்களில் பயணிப்பது போன்ற காட்சிகள் மூலம் அடுத்து என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் படம் பார்ப்பவர்களைப் பதற்றத்தில் அழைத்துச் செல்கிறார் இயக்குநர்.

இந்தப் படத்தில் டைம் லூப் என்ற ஒரு அம்சத்தையும் இணைத்து பரபரப்பு காட்டி இயக்குநர் கண்ணாமூச்சி விளையாடுகிறார் .அது ரசிகர்களை சற்றே குழப்பினாலும் அந்த பரபரப்பைக் குறைக்காமல் கொண்டு சென்று உள்ளார்.யோசிக்க விடாமல் பார்வையாளர்களைக் கட்டுக்குள் வைத்திருப்பது இயக்குநரின் பலம்.

பிளாக் ஹோல், ஃபுல் மூன், பர்முடாஸ் ட்ரையாங்கிள்.பேரல் ரியாலிட்டி ,மல்டிபிள் ரியாலிட்டி என்று புவியியல் அதிசயங்களையும் அறிவியல் அசாதாரணங்களையும் உளவியல் உதாரணங்களையும் படத்தில் தொட்டுக் காட்டியுள்ளார் இயக்குநர்.

இதில் வசந்தாக ஜீவா நடித்துள்ளார் .அந்தக் கதாபாத்திரமாகவே மாறி பதற்றமும் கோபமும் குழப்பமும் கலந்த மனநிலையோடு அந்தப் பாத்திரத்தை நமக்குள் கடத்தி விடுகிறார் .அதே போல ஆரண்யா பாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் வருகிறார். அவர் நடப்பது என்ன என்றே புரியாத சூழலில், உறை மன நிலையில் அந்தக் கதாபாத்திரத்தில் நன்றாக வே நடித்துள்ளார்.இருவர் மட்டுமே படம் முழுவதும் ஆக்கிரமித்தாலும் எந்த இடத்திலும் பார்வையாளர்களுக்கு அலுப்பும் சலிப்பும் ஏற்படுத்தவில்லை. அந்தளவுக்கு அவர்கள் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள்.மேலும் விவேக் பிரசன்னா, யோகி ஜேபி, ஷாரா, ஸ்வயம் சித்தா, சிந்தூரி ஆகியோரும் நடித்துள்ளனர். அவரவர் பாத்திரத்தில் பதிகின்றனர்.

இரண்டு கதாபாத்திரங்கள், குறிப்பிட்ட ஒரே ஒரு களம், திரும்ப திரும்ப நடக்கும் குறிப்பிட்ட சம்பவங்கள் என்று இருந்தாலும் அதை வெவ்வேறு கோணங்களில் காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய், இரவு நேரக் காட்சிகளில் கோணங்கள் மூலம் பார்வையாளர்களை ஈர்க்கிறார்.

சாம்.சி.எஸ் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.மிக குழப்பமான கதைக்கரு, திருகலான திரைக்கதை என்றிருப்பதை படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், மிக நேர்த்தியாகத் தொகுத்து பார்வையாளர்களுக்குப் புரிய வைத்திருக்கிறார். 

இப்படிப்பட் கதையை எடுத்துக் கொண்டு படமாக்கத் தீர்மானித்த துணிச்சலுக்காக இயக்குநரைப் பாராட்டலாம் அதை புரிந்து கொண்டு தயாரித்திருக்கும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தையும் நிச்சயம் பாராட்டவே வேண்டும். ஏனென்றால் இது வழக்கமான கதையல்ல.

மொத்தத்தில், இந்த ‘பிளாக்’ தமிழ் திரையுலகின் புதிய கோணத்தில் உருவாகியுள்ள திரில்லர் எனலாம்.