ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், சரண்யா, வி டிவி கணேஷ், பூமிகா சாவ்லா, நட்டி, ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சீதா , பேபி விர்த்தி, மாஸ்டர் அஸ்வின், சதீஷ் கிருஷ்ணன் நடித்துள்ளனர்.ராஜேஷ் எம் இயக்கியுள்ளார்.இசை -ஹாரிஸ் ,ஒளிப்பதிவு -பேபி விர்த்தி, மாஸ்டர் அஸ்வின்.சுந்தர் ஆறுமுகம் தயாரித்துள்ளார்.
இதில் ஜெயம் ரவி கார்த்திக் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார்.கார்த்திக் எந்தவித பிடிமானத்திற்குள் அடங்காதவர் ,முரட்டுத்தனம் கொண்டவர்.சட்டக் கல்லூரியில் மாணவர் என்றாலும் ஒழுங்காகப் படிப்பதில்லை .ஆனால் தெரிகிற சட்ட விதிகளை வைத்துக்கொண்டு கண்ணில் கண்டவர்களிடமெல்லாம் பேசி வம்பு இழுத்துக் கொண்டு வருகிறார்.ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரான அவரது அப்பா இதனால் மகன் மீது வெறுப்பாக இருக்கிறார். ஜெயம் ரவியின் அக்கா தான் பூமிகா.இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.தம்பிமீது பாசம் உள்ளவர்.ஊரிலிருந்து வரும் அக்கா பூமிகா, தனது தம்பி கார்த்திக்கைத் தன்னுடன் ஊட்டிககு என் வீட்டுக்கு அழைத்துச் சென்று பேசித் திருத்தி நல்லவனாக மாற்றுகிறேன் என்று கூட்டிச் செல்கிறார்.ஊட்டியில் அக்கா வீட்டுக்கு சென்று தங்கும் ரவி அங்கேயும் தனது பேச்சுகளாலும் செயல்களாலும் குடும்பத்தினரின்வெறுப்பையும் விரோதத்தையும் பெறுகிறார்.அதன் விளைவாக அக்கா குடும்பத்தினரை விட்டு வெளியேற வேண்டியநிலை வருகிறது.
ஒன்றாக இருந்த அக்கா குடும்பத்தைப் பிரித்த பழி ஜெயம் ரவி மீது விழுகிறது. இதனால் அனைவரும் அவரை வெறுக்கிறார்கள். இந்நிலையில் ஜெயம் ரவி யார் என்கிற முன்கதை அதிர்ச்சி தரும் கிளைக்கதையாக வருகிறது.தான் யார் என்று அறிந்து மிகவும் கூனி குறுகி குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் ஜெயம் ரவி, அக்காகுடும்பத்தைச் சேர்த்து வைக்க செய்யும் முயற்சிகள், அதன் பின்விளைவுகள் தான் ‘பிரதர் ‘ திரைப்படத்தின் மீதிக் கதை.
ஒரு நடுத்தர வர்க்கத்துக் குடும்ப மோதலையும் அவர்களது ஆணவம் சார்ந்த சிக்கல்களையும் வைத்து எளிமையான கதையாக உருவாகி உள்ளது.
ஏற்கெனவே ஜெயம் ரவி இது போன்ற குடும்ப படங்களில் நடித்தவர்தான்.இதில் அக்கா தம்பி பாசத்தை முன்னெடுத்து இக்தையைச் அமைத்துள்ளார் இயக்குநர்.
தொடக்கத்தில் வரும் காட்சியிலேயே தந்தை சொல்லைத் தட்டும் மகனாக தந்தையைப் புறக்கணித்து புறந்தள்ளிவிட்டு விளையாடப் போகும் காட்சியில் இந்த குமார் பாத்திரத்தின் பொறுப்பின்மையை வெளிப்படுத்தி விடுகிறார் ரவி.
எந்த வேலைக்கும் செல்லாமல் குடும்பப் பொறுப்பும் இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் ஜெயம் ரவியைத் திருத்துவதாகக் கூறி அக்கா பூமிகா அவரை ஊட்டிக்கு அழைத்துச்சென்ற பிறகு அங்கே நிகழும் காட்சிகள் பட்டிமன்ற விவாதம் போல் நீயா நானா சண்டையில் முடிகிறது.
அக்கா , காதலி ,அக்கா மாமனார் என யார் வாங்கிக் கொடுத்த வேலையிலும் அவர் நிலைக்கவில்லை.ரொம்ப பேசி வேலைக்குப் பரிந்துரை செய்தவர்களுக்குக் கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கிறார். அந்த வெறுப்பேற்றும் காட்சிகளில் ரசிகர்களை கோபப்படுத்துகிறார்.அதாவது அந்த பாத்திரத்திற்கான தன்மையை வெளிப்படுத்தி உள்ளார்.
அக்காவின் பிரிவுக்குப் பிறகு தான், தான் செய்தது தவறு என்பது புரிகிறது.சமுதாயத்தில் பெரும்பான்மையாகத் திரியும் பொறுப்பில்லாத இளைஞர்களின் பிரதிநிதியாகத் தன்னைச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்.
பிரியங்கா மோகன் பொம்மை போல் வருகிறார் கண்மை கலையாமல் நடித்து விட்டுச் செல்கிறார்.
கிராமத்து அம்மாவாக நடுத்தர வர்க்கத்து தாயாக இதுவரை படங்களில் நடித்து வந்த சரண்யா இந்தப் படத்தில் ஆங்கிலம் பேசி நவநாகரிக அம்மாவாக நடித்து வியப்பூட்டுகிறார். நல்லவரா கெட்டவரா என்று யூகிக்க முடியாத முகத்தோற்றம் கொண்ட நட்டி, இதில் பூமிகாவின் கணவராக நடித்துள்ளார்.படத்தில் எதிர்மறை நிழல் படிந்த பாத்திரத்தில் நடித்துள்ளார் ராவ் ரமேஷ்.
விடிவி கணேஷ் கொஞ்சமாக வந்து கிச்சு கிச்சு மூட்டுகிறார்.
இயக்குநர் எம் ராஜேஷ் குடும்பங்களுக்கு இடையே நடக்கும் ஈகோ மோதலின் விளைவுகளால் குடும்பம் எப்படிப் பிரிந்து போகிறது என்பதைச் சொல்ல முயன்று இருக்கிறார். மேலும் சுவாரசியமான காட்சிகளைச் சிந்தித்து உருவாக்கி இருக்கலாம்.மனதில் யூகிக்க வைக்கும் காட்சிகளாக வருவது படத்தின் பலவீனம்.நடிப்பாற்றல் கொண்ட பல நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு யானைப்பசிக்குச் சோளப்பொரி போட்டுள்ளார். அவர்களை மேலும் பயன்படுத்தி இருக்கலாம்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசை முணுமுணுக்கும் பாடல்களை தந்துள்ளது. .ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷத்தின் ஒளிப்பதிவு இயக்குநர் நினைத்த திசையில் சென்றுள்ளது.
மொத்தத்தில் ‘ பிரதர்’ அக்கா தம்பி பாசத்தைச் சொல்ல முயன்றுள்ள வணிகரீதியிலான பொழுதுபோக்குப் படம்