‘எமக்குத் தொழில் ரொமான்ஸ் ‘திரைப்பட விமர்சனம்

அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா,ஊர்வசி,அழகம்பெருமாள், எம் எஸ் பாஸ்கர், பகவதி பெருமாள், படவா கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பாலாஜி கேசவன் எழுதி இயக்கியுள்ளார் .நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.டி கிரியேஷன்ஸ் சார்பில் திருமலை எம் தயாரித்துள்ளார்.

இது ஒரு காதல் கதை.காதலில் எழும் சந்தேகம் அதன் விளைவுகளைப் பற்றி பேசுகிறது இந்தப் படம்.

சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு என்கிற உணர்வைச் சொல்கிற கதை இது.

அசோக் செல்வன் ஓர் உதவி இயக்குநர். திரையுலகில் இயக்குநராக வேண்டும் என்று கனவோடு இருப்பவர். அதற்கான வாய்ப்புகளுக்காகப் பல படிகள் ஏறி வருகிறார்.
அவர் அவந்திகா மிஸ்ராவைக் காதலித்து வருகிறார். அவந்திகா ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்க்கிறார். அசோக் செல்வனுக்கு நெருங்கிய தோழி திடீரென்று கருவுறுகிறார். அந்தக் கருவைக் கலைப்பதற்காக அசோக் செல்வனிடம் உதவி கேட்கிறார்.
தோழியைக் காப்பாற்றுவதற்காக, தான் அந்தத் தோழியின் கணவன் என்று பொய் கூறி அந்தக் கருவைக் கலைப்பதற்கு உதவுகிறார் அசோக். இந்தத் தகவல் காதலி அவந்திகாவுக்குத் தெரிய வருகிறது. இதனால் அவர்களுக்குள் பிரச்சினை எழுகிறது .அடுத்து என்ன ஆனது? ஆபத்தில் உதவுவது தவறா? என்று அசோக் செல்வன் சொல்ல நினைக்கிறார். இது மாபெரும் துரோகம் என்று அவந்திகா சந்தேகப்படுகிறார். அபிப்பிராய பேதம் மன விரிசலாக மாறுகிறது.உடைந்த காதல் மீண்டும் ஒட்டியதா? என்பதுதான் எமக்குத் தொழில் ரொமான்ஸ் படத்தின் மீதிக் கதை.

அசோக் செல்வனின் காதல் வளர்வதையும் அவர் காதலியிடம் பொய் சொல்லி மாட்டிக் கொள்வதையும் இயல்பாகவும் வேடிக்கையாகவும் காட்சிகளாக்கி உள்ளார்கள்.
ஏற்றுக்கொண்ட பாத்திரத்தில் அசோக் செல்வன் இயல்பாக நடித்துள்ளார். அவந்திகா மிஸ்ராவும் தனக்குக் கொடுத்த வேலையைக் குறை இல்லாமல் செய்துள்ளார். மேலும் ஊர்வசி, எம் எஸ் பாஸ்கர், பகவதி பெருமாள், பட வா கோபி ஆகியோர் தத்தமது பாத்திரங்களில் பளிச்சிட்டு உள்ளனர்.

காதலையும் காதலர்களிடையே நடக்கும் பிணக்கையும் மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கி உள்ளார். படத்தில் முதல் பாதி சற்றுத் தொய்வாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் வேகம் எடுத்துச் செல்லும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர். முதல் பாதியிலும் காட்சிகளில் மேலும் அழுத்தம் காண்பித்திருக்கலாம். இரண்டாம் பாதியில் நகைச்சுவைக் காட்சிகள் அதிகம் உள்ளது, படத்தில் அதுவரை நிலவிய சோர்வையும் தொய்வையும் விலக்கி விடுகிறது.

காதலின் முக்கிய அம்சமே ஒருவரை ஒருவர் நம்புவது தான்.
நம்பிக்கையின் அடித்தளத்தில் தான் காதல் கோட்டையே கட்டப்படுகிறது,சந்தேக விரிசல் அந்தக் கோட்டையையே தகர்த்து விடலாம்
என்பதைக் கூறி இப்படம் எச்சரித்து காதலர்களிடம் பரஸ்பரப் புரிதலை, நம்புதலை வலியுறுத்துகிறது.

நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். பாடல்கள், பின்னணி இசையில் இளமைக் கொடி பறக்கிறது.

கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு படம் முழுக்க வண்ணமயமாகத் தோன்ற வைக்கிறது.

மொத்தத்தில் இந்தப் படம் இளமை மயமான ஒரு காதல் கதை.