உதய் கார்த்திக் விவேக் பிரசன்னா, சுபிக்ஷா , ஸ்ரீஜாரவி, பார்த்திபன் குமார்,மோகனசுந்தரம் ,அரவிந்த் ஜானகிராமன், ஆர் ஜே பிரியங்கா, சந்தோஷ் நடித்துள்ளனர்.
எழுதி இயக்கியிருக்கிறார் செல்வகுமார் திருமாறன் . ஒளிப்பதிவு மெய்யேந்திரன், இசை அனீவ், எடிட்டர் சுதர்சன், தயாரிப்பு கே .பாலாஜி.
பொதுவாக ‘ஃபேமிலி படம்’ என்றால் குடும்பத்தினர் பார்க்கும்படியான கதை என்று விளம்பரம் செய்யப்படுவதுண்டு .ஆனால் அப்படியான படங்கள் வருவது அரிதாக இருக்கிறது. ஆனால் இந்த ஃபேமிலி படம் குடும்பத்தினர் சேர்ந்து ஒரு திரைப்படம் எடுப்பதைக் கூறுகிறது.இது ஒரு வளரும் இயக்குநரின் கதை என்றும் கூறலாம்.
நாயகன் உதய் கார்த்திக்,ஒரு திரைப்படம் இயக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் அதற்காக தயாரிப்பாளர் தேடி அலைகிறார்.அரும்பாடு பட்டு ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது.தன் கனவு நினைவான மகிழ்ச்சியில் பட வேலைகளை தொடங்குகிறார் ஆனால் அதன் பிறகு பல பிரச்சினைகள் வருகின்றன .சிலரால் அந்த வாய்ப்பு பறிக்கப்படுகிறது .அந்தக் கதையும் திருடப்படுகிறது, ஒன்றும் புரியாமல் தவிக்கிற உதய் கார்த்திக் ,தன் கனவு கலைந்ததாக விரக்தி அடைகிறார் .ஆனால்
கெட்டதிலும் ஒரு நல்லது உண்டு என்று ஒரு தீர்வை நோக்கிச் செல்ல அவரது குடும்பத்தினர் யோசிக்கிறார்கள்.அவரது கனவை, இலட்சியத்தை நிறைவேற்ற அவரது குடும்பம் ஆதரவுக்கரம் நீட்டுகிறது . அதற்குப் பிறகு அந்தத் திரைப்பட முயற்சியில் உதய்கார்த்திக் வெற்றி பெற்றாரா இல்லையா என்று சொல்வதுதான் ஃபேமிலி படம்.
நாயகன் உதய் கார்த்திக்,ஏற்கெனவே ’டைனோசர்ஸ்’ படத்தின் மூலம் தனது நடிப்பால் கவனம் பெற்றவர்.இயக்குநராகும் கனவையும் லட்சியத்தையும் சுமந்து கொண்டிருக்கும் ஓர் இளைஞராக அந்தப் பாத்திரத்தில் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.இயக்குநராகும் கனவு மலரும் போது கிடைக்கும் மகிழ்ச்சியையும் அது பறிபோகும் போது அடையும் வருத்தத்தையும் நடிப்பில் நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.
நாயகனின் காதலியாக சுபிக்ஷா வருகிறார்.பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை என்றாலும் குறை சொல்ல ஒன்றும் இல்லை.நாயகனின் அண்ணனாக வரும் விவேக் பிரசன்னா, தம்பியின் கனவை நிறைவேற்ற அவரது முயற்சிகளுக்குத் துணை நிற்கிறார்.அவர் ஏற்ற அந்த அண்ணன் பாத்திரத்தில் சரியாக நடித்திருக்கிறார். மற்றொரு அண்ணனாக வரும் பார்த்திபன் குமாரின் நடிப்பும் பொருத்தம்.அஜித் ரசிகராக கதாநாயகனின் நண்பனாக வரும் சந்தோஷின் நடிப்பு அவரது நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தி உள்ளது. அவர் மேலும் முன்னேற அறிகுறிகள் தென்படுகின்றன.நாயகனின் அம்மாவாக ஸ்ரீஜா ரவி, காவல்துறை அதிகாரியாக காயத்ரி, நாயகனின் தாத்தாவாக பட்டிமன்றப் பேச்சாளர் மோகனசுந்தரம் என பிற வேடங்களில் நடித்திருக்கும் நடிப்புக் கலைஞர்கள் தங்கள் பாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்கள்.அதன் வழியே கதை ஓட்டத்திற்குப் பலம் சேர்த்துள்ளனர்.
மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு, அனீவியின் இசை, சுதர்சனின் படத்தொகுப்பு, அஜீஷின் பின்னணி இசை என அனைவருமே ஒரு புதிய முயற்சியிலான திரைப்படத்திற்கான தங்கள் பங்களிப்பை ஆற்றி உழைத்துள்ளார்கள்.
திரைப்பட உதவி இயக்குநர்கள் பற்றி ஆங்காங்கே தொட்டுச் சென்ற கதைகள் திரைப்படங்களில் நிறைய உண்டு.ஆனால் அதற்கான தீர்வு நமக்குள்ளே ஒளிந்திருக்கிறது அதைக் கண்டடைந்து வெற்றியைத் தொட வேண்டும் என்கிற கருத்தைச் சொல்லியிருக்கும் இயக்குநர் செல்வ குமார் திருமாறன், ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்.
ஒரு படைப்பாளி தனது வலிகளை அவமானங்களை புறக்கணிப்புகளை துயரங்களைக் கூட படைப்பாக மாற்ற முடியும் என்று நிரூபித்திருக்கிறார்.இந்தக் கதை ஒரு குடும்பக் கதையாக இருந்தாலும் தொலைக்காட்சித் தொடர்கள் போல் சலிப்பூட்டாமல் திரைப்பட அனுபவத்தைத் தருகிறது.அந்த வகையில் ஒரு ரசிக்கும்படியான எளிமையான படைப்பை வழங்கியுள்ளார் இயக்குநர் செல்வ குமார் திருமாறன்.
மொத்தத்தில், ‘ஃபேமிலி படம்’ அனைவருக்கும் உரிய படமாகப் பார்க்கலாம்.