அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஸ்ரீலீலா, ராவ் ரமேஷ், சுனில், அனுசுயா பரத்வாஜ் நடித்துள்ளனர். இயக்கம் சுகுமார், இசை தேவி ஸ்ரீ பிரசாத், தயாரிப்பு மைத்ரி மூவி மேக்கர்ஸ்.
புஷ்பா முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் வெளிவந்துள்ளது.
கதையின் நாயகர்கள் நல்லவர்களாக நியாயவான்களாக சரித்திர நாயகர்களாக இருந்ததெல்லாம் அந்தக் காலம்.’புரியாத புதிர்’ திரைப்படம் வந்த போது அதில் நாயகன் சரத்குமாரை விட வில்லனாக நடித்திருந்த ரகுவரனுக்கு அதிகமான கைத்தட்டல் கிடைத்தன.அதிலிருந்து ரசிகர்கள் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களுக்குத் தீனி போட ஆரம்பித்து விட்டன திரைப்படங்கள். அதன் விளைவாகத்தான் ஒரு செம்மரக் கடத்தல் செய்பவனை நாயகனாக புஷ்பா படத்தில் கொண்டாடுகிறார்கள்.
புஷ்பா முதல் பாகத்தில் ஒரு முரட்டுத்தனமான யாருக்கும் அடங்காத கிராமத்து இளைஞனாக வந்த அல்லு அர்ஜுன் அதன் தொடர்ச்சியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்து இந்தப் படம் தொடங்குகிறது.
செம்மரக்கடத்தலில் கேட்க ஆள் இல்லாத தனிக்காட்டு ராஜாவாக புஷ்பா இருக்கிறார் . புஷ்பா ‘தி ரூல்’ என்பதையே புஷ்பா வைத்தது தான் சட்டம் என்று புரிந்து கொள்ளலாம்.மாஃபியாவாக மாறிய புஷ்பா, ஜப்பான் வரை தனது வியாபாரத்தை விரிவு செய்கிறார்.அவரது கொட்டத்தை அடக்குவதற்கு எஸ்பி ஆன ஷெகாவத் நினைக்கிறார். இதற்கிடையே தனது காதல் மனைவியின் ஆசைப் படி ஆந்திர முதல்வரைச் சந்திக்கச் செல்லும் புஷ்பாவுக்குப் பெரிய அவமானம் நிகழ்கிறது.
இதனால் ஆவேசமடையும் புஷ்பா அடிபட்ட புலியாக மாறிச் சீறி ஆடும் ஆட்டம் தான் படத்தின் மீதிக்கதை.
புஷ்பாவாக அல்லு அர்ஜுன் இப்படத்தில் ஆவேச தாண்டவம் ஆடியுள்ளார். தோற்றம், உடல் மொழி, வசனம் ,நடனம், சண்டைகள் என்று முழுப்படத்தையும் தன் தோளில் ஏற்றி உள்ளார்.அவர் தோன்றும் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார்.
அதே போல் பகத் பாசிலுக்கான அறிமுகமும் மிரட்டல். புஷ்பராஜை பழிவாங்க துடிப்பதில் அவர் ஆவேசம் காட்டுகிறார்.
இவர்களுக்கு அடுத்தப்படியாக ராஷ்மிகா மந்தனாவும் படம் முழுக்க ஆட்டம் பாட்டம் என்று அமர்க்களம் செய்கிறார்.
அல்லு அர்ஜுனுக்காக அவர் ஒரு காட்சியில் பேசும் நீளமான வசனம் கைதட்டல்களை அள்ளுகிறது. ரொமான்ஸ் மற்றும் நடனம் என இரண்டிலுமே ராஷ்மிகா அசத்தியுள்ளார். பீலிங்ஸ் பாடல் இமைக்காமல் பார்க்க வைக்க அவர் ஆட்டமே காரணம்.
மூன்று மணிநேரம் 20 நிமிடங்கள் கொண்ட இப் படம் இப்போது வருகின்ற படங்களை ஒப்பிட்டால் நீளமானது தான். ஆனாலும் இப்படத்தை எங்கும் தொய்வில்லாத வகையில் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் சுகுமார். படம் முழுக்க விழிகளை விரிய வைத்து மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் இருந்தாலும், சென்ட்டிமென்ட் காட்சிகள் மனதைத் தொடும் வகையில் எடுக்கப்பட்டுள்ளன.
கிஸ்க் பாடலுக்கு வரும் ஸ்ரீலீலா நடனத்தில் அசர வைக்கிறார்.
படத்தின் பிரம்மாண்டம் காட்சிக்கு காட்சி தெரிகிறது.ஒரு வணிக ரீதியான ,திரையரங்குகளில் மட்டுமே பார்க்கும் படியான அனுபவத்தைக் கொடுக்கக் கூடிய படமாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.அதற்கான அனைத்து கலவைகளையும் இயக்குநர் கலந்து கொடுத்துள்ளார்.
படத்தில் தர்க்கரீதியாகத் தோன்றும் லாஜிக் மிரல்கள் அனைத்தையும் புறக்கணித்துக் கொண்டு படத்தின் விறுவிறுப்பு கடந்து போக வைக்கிறது.மதிப்பு ஒளிப்பதிவாளரின் கேமரா சுழன்று சுழன்று படம் எடுத்துள்ளது.
இசை தேவி ஸ்ரீ பிரசாத் வழக்கம் போல கலக்கல்.கூடுதல் பின்னணி இசையில் சாம் சிஎஸ் கலக்கியிருக்கிறார். ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் படத்தின் தரத்தை உயர்த்திக்காட்டுகிறது. பீட்டர் ஹெய்ன், டிராகன் பிரகாஷ், நவகாந்த் ஆகியோர் அமைத்துள்ள சண்டைக் காட்சிகள் இந்த படத்தின் தனித்துவம் எனலாம்.
அல்லு அர்ஜுன் தனி மனிதராக இந்த படத்தை உயர்த்தி பிடிக்கிறார், தனது நடிப்பால் தூக்கி நிறுத்தி உள்ளார் என்றால் அதேபோல் படத்தின் திரைக்கதையும் விறுவிறுப்பு மாறாமல் இருப்பதால் பெரிய பலமாக மாறி உள்ளது.படத்தில் இடம்பெறும் சென்டிமென்ட் வசனங்களும் குடும்பத்தினரைக் கவரும்.
மொத்தத்தில் புஷ்பா பிரம்மாண்டமான, முழு நீளமான, நட்சத்திர ஒளி மிகுந்த கேளிக்கைப் படம்.வணிகப் பட ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் அனுபவம்.