’யுஐ’ (UI) திரைப்பட விமர்சனம்

உபேந்திரா , ரீஷ்மா நானய்யா, அச்யுத் குமார், ரவிசங்கர், சாது கோகிலா நடித்துள்ளனர். உபேந்திரா இயக்கியுள்ளார். லகரி பிலிம்ஸ் மற்றும் வீனஸ் எண்டர்டெய்னர் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

 

கதைப்படி உபேந்திரா ஒரு திரைப்பட இயக்குநர் மிகவும் புகழ் பெற்ற நிலையில் உள்ளார். அவரது படத்தைப் பார்க்க பைத்தியம் பிடித்து அலைகிறது ரசிகர் கூட்டம்.இன்னொரு தரப்பு அதற்கு நேர் மாறாக இருக்கிறது.அதற்குத் தடை கோரிப் போராடுகின்றனர்.விமர்சகர் அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாமல் திணறுகிறார்.படத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்காக படத்தை இயக்கிய உபேந்திராவைத் தேடிச் செல்கிறார்.அவரது பயணம் எப்படி? அவரது தேடலுக்கான விடை கிடைத்ததா என்பது தான் ’யுஐ’ படத்தின் கதை.

 

UI என்பதை யுனிவர்சல் இன்டெலிஜென்ஸைக் குறிக்கிறது.அதன் மூலம் அரசியலைப் பகடி செய்கிறது படம்.அது மட்டுமல்ல அதீத கற்பனை கலந்து இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் உபேந்திரா.அவரது கற்பனை உலகத்தின் மூலம் ஜாதி மத வேறுபாடுகள் ,பிரிவினைகள், துண்டாடுதல், இயற்கை வளம் சுரண்டல் ,அதன் எதிர்கால ப அபாயங்கள் போன்ற பல சமகாலக் கருத்துகளைப் பேசி உள்ளார்.

இப்படத்தில் உபேந்திராவுக்கு இரு வேடங்கள்.சத்யா, கல்கி பகவான் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் .

சத்யாவாக மென்மையாக இருப்பவர்.கல்கி அதற்கு எதிர் மாறான பாத்திரம்.இரண்டிலும் நடித்து அசத்தியுள்ளார்.படத்தின் ஆரம்பக் காட்சியில் ரத்தம் தெறிக்கிறது.நாம் எதிர்பாராத
மாஸ் காட்டி அசத்தியிருக்கிறார்.

வழக்கம் போல் ஆக்சன் பட நாயகியாக வருகிறார் ரீஷ்மா. பாடல் காட்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அவர் வணிகப்படத்துக்கு உதவும் ஒரு நடிகையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளார்.

முரளி சர்மா திரைப்பட விமர்சகராக வருகிறார். உபேந்திராவின் தந்தையாக நடித்திருக்கும் அச்யுத் குமார், ஓம் சாய் பிரகாஷ், சாது கோகிலா என வரும் பிற நடிப்புக் கலைஞர்கள் தங்கள் கடமையை ஆற்றி உள்ளனர்.

இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் பாடல்களிலும் பின்னணி இசையிலும் வணிக மணம் கமழ்கிறது.

ஒளிப்பதிவாளர் எச்.சி.வேணுகோபால் ஒரு வணிகப் படத்திற்கு ஏற்ற வகையில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வி.எஃப்.எக்ஸ் கலைஞரும், கலை இயக்குநரும் அதிகம் உழைத்துள்ளனர்.

எழுதி இயக்கியிருக்கும் நடிகர் உபேந்திரா, படத்தில் உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை பேசி இருந்தாலும் பலவற்றைப் பூடகமாக, குறியீடாகப் பேசி உள்ளார்.இதனால் இப்படத்தின் மூலம் அவர் சொல்ல வந்த கருத்து புரியாமல் போகக்கூடும் அபாயமும் உள்ளது.

சற்று வித்தியாசமான பாதையில் இந்தக் கதையைக் கூறி புதுமை தேடும் ரசிகர்களைக் கவர முயன்றுள்ளார் இயக்குநர் உபேந்திரா.