‘மெட்ராஸ்காரன்’ திரைப்பட விமர்சனம்

ஷான் நிகம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வரியா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன், சூப்பர் சுப்பராயன், சரண், கீதா கைலாசம் நடித்துள்ளனர்.
வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார்.எஸ் ஆர் ப்ரோடுக்ஷன் சார்பில் ஜெகதீஸ் தயாரித்துள்ளார்.

திருமணம் நிச்சயமான மணமகன் அல்லது மணமகள் வீட்டை விட்டு வெளியில் நீண்ட தூரம் செல்லக்கூடாது என்றும் கிராமத்தில் இன்றும் ஒரு நம்பிக்கை உள்ளது. அவர்களுக்கு ஏதாவது அபாயம் இருந்தால் இரு குடும்பத்தினருக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்த நம்பிக்கை உள்ளது. அந்த செண்டிமெண்ட்டை வைத்து உருவாகி இருக்கும் படம்.

தலைப்பைப் பார்த்தால் வடசென்னை, தென்சென்னை போல சென்னையின் பின்னணியில் சென்னை மனிதர்களைப் பற்றிக் கூறும் படமும் என்று நினைக்கக் கூடும். ஆனால் இது ஒரு முழு நீளக் குடும்பப் படமாக உருவாகியுள்ளது.

திருமணம் திருமண வீடு அது சார்ந்த வைபவங்கள் பின்னணியில் இந்தக் கதை உருவாகி இருக்கிறது.பொழுது விடிந்தால் திருமணம் ஆகப்போகிற மாப்பிளை ஒரு கொலைக் குற்றத்தில் மாட்டிக் கொண்டால் எப்படி இருக்கும் என்பதுதான் கதை.

புதுக்கோட்டையில் இருந்து சென்னை போய் சம்பாதித்து அங்கே தனக்குரிய காதலியையும் சம்பாதித்து ஒரு வழியாக திருமணம் நிச்சயமாகி ஷான் நிகமிற்கு திருமணம் நடக்க இருக்கிறது.அதற்காக சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வருகிறார்.மணப்பெண் நிஹாரிகாவும் அங்கே வந்து ஒரு விடுதியில் தங்குகிறார். பலர் சொல்லியும் சொல் பேச்சு கேட்காமல் வருங்கால மனைவியாகப் போகும் மணப்பெண் நிஹாரிகாவைப் பார்க்க அவரது விடுதிக்குக் காரில் செல்கிறார் நிகம் .செல்லும் வழியில் துரதிர்ஷ்டவசமாக ஒரு விபத்து நிகழ்கிறது. அதில் ஐஸ்வர்யா தத்தா மீது கார் மோதி விடுகிறது.அவர் ஒரு நிறைமாத கர்ப்பிணி, கலையரசனின் மனைவி.இந்த விபத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தை இறந்து விடுகிறது. அந்த இறப்புக்குத் தான் தான் காரணம் என்று நிகாம் நீதிமன்றத்தில் கூறுகிறார்.அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கிறது.தண்டனை முடிந்து வெளியே வருகிறார் ஆனால் அந்த குழந்தை இறப்புக்கு அவர் காரணம் அல்ல என்று பிறகு தெரிகிறது.
அப்படியானால் யார் காரணம்? நின்று போன திருமணம் என்ன ஆனது?அவர் அனுபவித்த தண்டனைக்கு என்ன பரிகாரம்? என்பதுதான் கதை.

படம் தொடங்கியதும் காட்டப்படும் திருமண வீடு, களை கட்டிய மகிழ்ச்சி, உறவினர்கள், குடும்பங்கள், மனிதர்கள்,உரையாடல்கள், குதூகலம் ,விழாக்கோலம் என்று வண்ணமயமான கலகலப்பு உணர்வை ஊட்டி விடுகிறார் இயக்குநர்.திருமணம் எந்த தடங்கலும் இன்றி நடைபெற வேண்டும் என்கிற இரு குடும்பத்தினரின் கவலைகள், பதற்றங்கள் காட்டப்படுகின்றன.படத்தில் சத்யாவாக  ஷான் நிகம், துரைசிங்கமாக கலையரசன், மீரா வாக நிஹாரிகா, கல்யாணியாக ஐஸ்வர்யா தத்தா என பிரதான பாத்திரங்களில் வருகிறார்கள்.

மலையாளத்தில் அறிமுகமான ஷான் நிகம் இதில் நாயகனாக நடித்துள்ளார். மனசாட்சியுடனும் மனிதாபிமானத்துடனும் நடந்து கொள்ளும் பாத்திரத்தில் அதற்காகப் போராடும் காட்சிகளில் பளிச்சிடுகிறார். நாயகியாக வரும் நிஹாரிகாவுக்கு காட்சிகள் குறைவு என்றாலும் வந்த காட்சிகளில் நிறைவைக் காட்டுகிறார்.
ஐஸ்வர்யா தத்தா இதுவரை வந்துள்ள படங்களை விட இதில் பளிச்சிடும் பாத்திரத்தில் வருகிறார்.

ஒரு தந்தையாக அந்தக் கவலையை பாண்டியராஜன் நடிப்பில் காணமுடிகிறது.அத்தனை இயல்பாக நடித்துள்ளார்.நாயகனின் பாசமுள்ள தாயாக கீதா கைலாசம் வருகிறார். கருணாஸ் தாய் மாமனாக வருகிறார் அவரது முகத்திலும் அந்த சந்தோசமான தவிப்பும் பொறுப்பும் தென்படுகின்றன.கருணாஸ் நல்ல குணசித்திர நடிகராக மாறி வருகிறார் அதற்கு இப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் ஒரு பாத்திரம் சாட்சி .இறுகிய கொண்ட பாத்திரத்தில் வரும் கலையரசன் கல்லுக்குள் ஈரம் போன்றது அவரது பாத்திரம் என்பதை விளங்க வைக்கிறார்.

சண்டை இயக்குநர் தினேஷ் சுப்பராயன் இயல்பான சண்டைக்காட்சிகளை உருவாக்கியுள்ளார்.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ், நேர்த்தியான பின்னணி இசை மூலம் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார்.ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார் திருமண வீட்டின் நிகழ்வுகளை அதன் குதூகலத்தை கலர்புல் காட்சிகள் ஆக்கி காட்டியுள்ளார்.

மனித உணர்வுகளில் பழிவாங்கலை விட மன்னிப்பு உயர்ந்தது என்கிற கருத்து இந்தப் படத்தின் மூலம் விதைக்கப்பட்டுள்ளது எனலாம்.

மெட்ராஸ் காரன் என்பது சென்னையைப் பற்றியும் அதன் தன்மையைப் பற்றியும் பேசும் படமோ என்று நினைத்துக் கொண்டு சென்றால் ஓர் அழகான குடும்பச் சித்திரமாக உருவாக்கிக் கொடுத்துள்ளார் வாலி மோகன் தாஸ். கலகலப்பாக ஆரம்பித்து பரபரப்பாக மாறி உள்ளது திரைக்கதை.அதனால் இப்படம் குடும்பத்தினருடன் பார்க்கும் படியான படமாகி உள்ளது.