அருண் விஜய், ரோஷினி பிரகாஷ் ,சமுத்திரக்கனி, மிஷ்கின், ரிதா , டாக்டர் யோ ஹன் சாக்கோ, சண்முகராஜா, அருள்தாஸ், தருண் மாஸ்டர், தயா செந்தில், பாண்டி ரவி, சேரன்ராஜ் ,சாயாதேவி, கவிதா கோபி, பாலசிவாஜி, முனீஸ் குமரன்,மை. பா. நாராயணன், பிருந்தா சாரதி, தீபிகா, ஸ்ரேயா சாஜர்,
ஷானு, அனுரி ,அஞ்சானா அஞ்சு, பிரியா நாயர், ஐஸ்வர்யா, சக்தி மாரியப்பன், எம் வின்சென்ட், கார்த்திகேயன், ஸ்ரீராம் சந்திரசேகர், ஆனந்தி கே, சரண்யா ஸ்ரீ எஸ், அனீஷா, ஜானகி சுரேஷ், அம்ச ரேகா என், எஸ் அஸ்வின் சங்கர், கார்த்திகா சுரேஷ், ஆர். சுப்பிரமணியம், பாபி பஜாஜ், ஜிபின் ஜான்சன், மணி, ரமேஷ் ,லோகேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுதி இயக்கியிருக்கிறார் பாலா. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இசை ஜி.வி. பிரகாஷ் குமார் ,பின்னணி இசை சாம் சி எஸ் , ஒளிப்பதிவு ஆர்பி குருதேவ், எடிட்டிங் சதீஷ் சூர்யா, சண்டை இயக்குநர் சில்வா, கலை இயக்கம் ஆர் கே நாகு.
செவித் திறனும் பேச்சுத்திறனும் இழந்த முரட்டுக்கதாநாயகன் யாருடைய குரலையும் கேட்க முடியாவிட்டாலும் தனது மனதின் குரலைக் கேட்டு அதன்படி நடப்பவன் .அப்படி அவன் நெஞ்சுக்கு நீதியாக,தனது மனசாட்சியின் படி அநீதிக்கு எதிராகப் பொங்கி எழுகிறான்.அது என்ன அநீதி? அதன் விளைவுகள் என்ன?அதற்காக எதையெல்லாம் எதிர்கொள்கிறான்? என்பதுதான் 112.43 நிமிடங்கள் கொண்ட ‘வணங்கான்’ திரைப்படத்தின் கதை.
கன்னியாகுமரி பகுதியில் சுனாமியின் பேரழிவுக்குப் பிறகு தப்பிப் பிழைத்த இரு ஜீவன்கள் கோட்டியும் தேவியும், பேச முடியாத அண்ணன், பாசமுள்ள தங்கையாக வளர்கிறார்கள்.முறைப்பும் விரைப்பும் கொண்ட முரடனான கோட்டி எடுப்பார் கைப்பிள்ளையாக கிடைத்த வேலையைச் செய்து வருகிறான் .
டூரிஸ்ட் கைடாக துறுதுறு பெண்ணாக இருக்கிறாள் ரீனா.அவளுக்கு முரடன் கோட்டி மீது ஒரு பிரேமை.
தங்கை மீது அளவற்ற பாசம் வைத்திருக்கும் கோட்டிக்கு அநீதிகள் கண்டு பொங்கி எழும்பும் குணம் உண்டு.கண்ணெதிரே திருநங்கைகள் மீது நடந்த கொடூர தாக்குதலைக் கண்டு காரணமானவர்களைத் துவம்சம் செய்கிறான்.மதுபானக் கடையில் ஸ்பீக்கரை அலற விட்டு வழிபாட்டுத்தலங்களுக்கு இடையூறாக இருப்பவர்களை அடித்து நொறுக்குகிறான்.அவனைத் திருத்தி நல்வழி படுத்த வேண்டுமே என்று அவனை ஆதரிக்கும் தேவாலயத் தந்தை கவலை கொள்கிறார் ,அவனை ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் பணிக்குச் சேர்த்து விடுகிறார்.இப்படிப்பட்ட சூழலில் அந்த இல்லத்தில் நடக்கும் ஒரு அநியாயத்தை கண்டு அவன் ஆவேசமடைந்து வன்முறையைக் கையில் எடுக்கிறான் ,எனக்கு நானே நீதிபதி என்று தண்டனையை நிறைவேற்றுகிறான்.அநீதியும் கொடூரம், தண்டனையும் குரூரம்.அது என்ன அநீதி ? அவன் கொடுத்த தண்டனை எப்படிப்பட்டது? அதனால் அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் என்ன நேர்கிறது ?என்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி இருப்பது தான் பாலா இயக்கியிருக்கும் வணங்கான் திரைப்படம்.
படம் தொடங்கியதும் வள்ளுவர் சிலை, கன்னியாகுமரி கடற்கரை, அதையொட்டிய குடியிருப்பு பகுதிகள் போன்றவற்றைக் கண்ணெதிரே பெரிய கேன்வாஸில் வரைந்து நமக்கு கலர்புல் கலகலப்பு காட்டுகிறார் பாலா. கலகலப்பாகத் தொடங்குகிற கதை பிறகு பரபரப்பாக நகர்கிறது.மூன்று கொடியவர்களில் இருவருக்கான தண்டனையு டன் இடைவேளை வருகிறது.
படத்தின் நாயகன் கோட்டியாக அருண் விஜய் நடித்திருக்கிறார் .பேச்சு, செவித்திறன் சவால் கொண்ட மாற்றுத்திறனாளி பாத்திரம்.வெறித்த விழிகள் செம்பட்டைத் தலை, விரைத்த உடம்பு என்று தோற்றத்திலும் எதற்கும் பதில் வினையாற்றாத முறைத்த குணத்துடன் ஆழ்ந்த மௌனம் என்று உடல் மொழியிலும் எப்போதாவது வெளிப்படும் குரல் என்று மொழியிலும் அவர் அந்த பாத்திரத்தில் சரியாகவே பொருந்தி உள்ளார். கொஞ்சம் கூட மீட்டர் பிசகாமல் அந்த மீட்டர் கேஜ் பாதையில் பயணித்துள்ளார் அருண் விஜய். பாலா மூலமாக அவருக்கு இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியுள்ளது என்றே கூறலாம்.
லைலாவைப் போல் ஊசி கண்கள்,சுமாரான தோற்றம் கொண்டவராகத் தெரிந்தாலும் துறுதுறு பார்வையிலும் கலகல பேச்சிலும் என்று அந்தப் பாத்திரத்துக்குள் நம்மை ஈர்த்துக் கவனம் பெற்று விடுகிறார் ரீனாவாக நடித்திருக்கும் ரோஷினி பிரகாஷ்.
அருண் விஜயின் தங்கையாக வரும் ரிதா , அந்தப் பாத்திரத்தில் உரிய நடிப்பின் மூலம் ஒத்திசைவை வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பாக இரண்டாம் பாதியில் அவரது நடிப்புக் கொடி பறக்கிறது.கொலை குற்றம் சாட்டப்பட்ட தனது அண்ணனுக்கு மரண தண்டனை கிடைத்து விடுமோ என்கிற அவரது தவிப்பும் துடிப்பும் அவரது நடிப்புக்குச் சாட்சியாகும் ஒரு சிறு உதாரணக் காட்சி.
கண்டிப்பான காவல்துறை அதிகாரி பாத்திரத்தில் சமுத்திரக்கனியும்,வித்தியாசமான தடாலடி நீதிபதியாக மிஷ்கினும் பளீர் கவனம் பெறுகிறார்கள்.குறிப்பாக போக்ஸோ சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக வரும் வழக்கை மிஷ்கின் எதிர்கொள்ளும் காட்சி சரியான சரவெடி.
சண்முகராஜா, அருள் தாஸ், சாயாதேவி தொடங்கி பல்வேறு துணைப் பாத்திரங்களில் வருகிற பிற நடிப்புக் கலைஞர்களுக்கும் உரிய மனப்பதிவை உருவாக்கிக் கொடுத்துள்ளார் இயக்குநர் பாலா.பார்வையாளர்களுக்குப் பலரது பெயர்கள் தெரியாவிட்டாலும் முகங்கள் தெரிகிற அளவிற்கு இடத்தை வழங்கி உள்ளார்.
ஒரே ஒரு நெருடல்பார்வை சவால் நிறைந்த இல்லத்து பெண்கள் சார்ந்த காட்சிகளின் தீவிரத்தைச் சற்றுக் கட்டுப்படுத்திருக்கலாம்.
கதை நிகழ்விடத்தை, அதன் தளத்தை ஆழமாகப் பதிவு செய்த ஆர்.பி குருதேவ் வின் கேமரா சுழன்று சுழன்று உழைத்துள்ளது.பரபரப்பு மிக்க இக்கதையில் பாடல்களே தேவையில்லை என்கிற போதும்,இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் இசையில் ‘யாரோ நீ யாரோ’ பாடல் மனதை உருக்கும் ரகம்.சாம் சி.எஸ்-ஸின் பின்னணி இசை, அனைத்து தருணங்களிலும் தனது உரிய பங்களிப்பை அளிக்கத் தவறவில்லை.
படத்தில் நகைச்சுவை காட்சிகள் இல்லை என்கிற குறையை கதாபாத்திரங்கள் பேசும் இயல்பான வசனங்களே பகடிகளாக மாறி சிரிப்பு மூட்டுகின்றன. அப்படிப்பட்ட வசனங்களில் அரசியல், மதம் போன்றவையும் விடுபடவில்லை.
நீதிபதி மிஷ்கின் ஆய்வாளர் சேரன்ராஜிடம் கேட்கும் ‘ஆய்வாளர் ஒன்றும் ஆய வில்லை ? ‘வசனமும், பாதிரியாரைப் பார்த்து ‘சிவாஜி மாதிரி இருக்கிறார் அதனால் நடிக்கிறார் என்று நினைத்தேன்’ என்கிற போலீஸ் வசனமும் ,குற்றவாளி விசாரணையில் வரும் டாக்டர் பாடும் ‘உள்ளம் என்பது ஆமை’ பாடலும் சிறுசாம்பிள்கள்.
முதல் பாதி ஆக்சன் காட்சிகளுடன் விறுவிறுப்பாகச் சென்றாலும் இரண்டாம் பாதியில் பாசத்தைப் பொழியும் உணர்வு பூர்வமான காட்சிகளை அடுக்கியிருக்கிறார் பாலா.
படத்தில் பிரதானமாக நான்கு சண்டைக் காட்சிகள் வருகின்றன. அவற்றைச் சண்டை இயக்குநர் செல்வா இயக்கினாரா? பாலா இயக்கினாரா?அப்படி ஒரு பாலாத்தனம்.சபாஷ் சில்வா.
இதுவரை படங்களில் அதிர்ச்சி காட்டி வந்த பாலா, திரையரங்கில் அமர்ந்து ரசிக்கும்படியாக ஒரு சமூகக் கருத்தையும்,சமூக விழிப்புணர்வையும் உணர்ச்சிகரமாகக் கூறியுள்ளார் .படத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குரல் ஓங்கி ஒலித்துள்ளது அதற்காகப் பாலாவை முதுகு வலிக்கும் வரை தட்டிக் கொடுக்கலாம்.