அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’. சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரித்திருக்கும் இப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், படத்தின் விளம்பர பணிகளில் தீவிரம் காட்டி வரும் படக்குழுவினர் நேற்று சென்னை, பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் பற்றிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.
படம் குறித்து இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் பேசுகையில், “நான் பத்திரிகையாளராக இருந்து தான் சினிமாவுக்குள் வந்துள்ளேன், நீங்கள் எனக்குத் தந்து வரும் ஆதரவு மிகப்பெரியது நன்றி. தருணம் படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. புகழ் & ஈடன் இருவருக்கும் இது முதல் திரைப்படம். என்னை நம்பி இந்தப்படத்தை தயாரித்ததற்கு நன்றி. முதல் படத்தில் எல்லோரும் புது முகம் என்றால் தயங்குவார்கள், ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து, நீங்கள் தான் இயக்குநர் நீங்கள் என்ன சொன்னாலும் சரிதான், என்று சொல்லி இந்த படத்தைத் தயாரித்தார்கள் அவர்களுக்கு என் நன்றிகள்.
என் முதல் படத்தை முடித்த சமயத்தில் தான், கிஷன் நடித்த படத்தைப் பார்த்தேன். அவர் இந்தப் படத்திற்கு மிகச் சரியாக இருப்பார் என்று என் நண்பரிடம் சொன்னேன். அவரிடம் கதை சொன்னேன் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. வழக்கமாக நாம் ஒரு படத்தை முடித்த பிறகு, ஹீரோவே இல்லை, பெரிய ஹீரோ கால்ஷீட் இல்லை என்பார்கள். ஏன் ஒரு படத்தை முடித்துவிட்டு, பெரிய ஹீரோவைத் தேட வேண்டும், இங்கு இருக்கும் ஹீரோக்களை வைத்து படம் எடுக்கலாமே? புதிய ஹீரோக்களைக் கூட்டி வரலாமே? என்பேன். நீ ஒரு படம் செய்தால், நீயும் பெரிய ஹீரோவைத்தான் தேடிச் செல்வாய் என்றார்கள். அதற்காகவே நான் புது முகங்களை வைத்து, படம் இயக்க வேண்டும் என்று நினைத்தேன். தனஞ்செயன் சார் படம் பார்த்துவிட்டு கிஷன் நம்பர் வாங்கி பாராட்டினர். அப்போது நான் என்ன செய்ய நினைத்தேனோ அதைச் செய்து விட்டேன் என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. ஸ்ம்ருதி வெங்கட் என்னுடைய தேஜாவு படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரம் செய்தார், அப்போதே அவரிடம் சொல்லியிருந்தேன், உங்களது நடிப்பு நன்றாக இருக்கிறது, ஒரு நல்ல படத்தில் உங்களைக் கதாநாயகியாகப் போடுவேன் என்றேன். அவர் நம்பவில்லை, இந்தப் படம் ஆரம்பித்த பொழுது, அவர்தான் சரியாக இருப்பார் என்று சொன்னேன். எல்லோரும் தயங்கினார்கள், ஆனால் நான் அவர்தான் சரியாக இருப்பார், இதுவரை செய்யாதவர் இந்தக்கதாபாத்திரம் செய்தால் தான் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கதை சொன்னேன். சில விசயங்கள் படத்தில் இருக்கும் யோசித்துச் சொல்லுங்கள் என்றேன். அவருக்குக் கதை பிடித்து இருந்தது. இப்படத்தில் மிக நன்றாக நடித்துள்ளார். ராஜ் ஐயப்பா என்னிடம் வாய்ப்பு கேட்டிருந்தார், அவர் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுகிறார் எனத் தயங்கினேன், பின்னர் ஒரு நாள் அவரை அழைத்துக் கதை சொன்னேன், அவருக்குப் பிடித்திருந்தது, மிக சிறப்பாக நடித்திருக்கிறார். எல்லோரும் கிஷன் சொல்லித் தான் தர்புகா சிவா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்று நினைக்கிறார்கள், ஆனால் இந்த படத்திற்கு ஆரம்பத்திலேயே முடிவு செய்தது அவரைத்தான். அவரிடம் கதை சொன்னேன் அவர் எளிதாக எந்த படத்தையும் ஒப்புக் கொள்வதில்லை, முழு பவுண்டேட் ஸ்கிரிப்ட் கேட்டார், படித்துவிட்டு அவரே அழைத்து, படத்தின் கதை நன்றாக இருக்கிறது நான் செய்கிறேன் என்றார். மிக அட்டகாசமான பாடல்கள் தந்துள்ளார் அவருக்கு நன்றி. என் முதல் படத்தின் எடிட்டர் அருள் தான் இந்தப்படத்திற்கும் எடிட்டர். அவருக்கும் எனக்கும் நிறையச் சண்டை வந்தாலும் அவர் எடிட்டிங் மிகச் சிறப்பாக இருக்கும். பலரும் டிரெய்லர் பார்த்து, எடிட் கட் நன்றாக இருப்பதாகப் பாராட்டினார்கள். அஸ்வின் இந்த படத்திற்காக நான்கு மாதங்கள், பின்னணி இசை அமைத்திருக்கிறார். கார்கி சார் ரசிகன், அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கிட்டத்தட்ட ஒவ்வொரு ஃபிரேமாக செதுக்கி இருக்கிறார். ஒரு தரமான படைப்பு வரும் போது நீங்கள் கைவிட்டதில்லை, அந்த நம்பிக்கையில் தான் படத்தை, பொங்கலுக்குக் கொண்டு வருகிறோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “இந்த தைப் பொங்கல் அனைவருக்கும் நல்லதாக அமைய வேண்டும். தருணம் படத்திற்கும் நல்லதாக அமைய வேண்டும். புதிய தயாரிப்பாளர் புகழுக்கு வாழ்த்துகள். முதல் படத்திலேயே, ஒரு கார்பரேட் கம்பெனி போல் சினிமாவைத் திட்டமிட்டு உருவாக்கியது ஆச்சரியமாக இருந்தது. தயாரிப்பாளர் இன்வால்வ்மெண்ட் கம்மியாக இருக்கும் என்று தான் கேள்விப்பட்டிருக்கேன், ஆனால் இந்தப்படத்தில் புகழ் மற்றும் ஈடன் இருவரின் இன்வால்வ்மெண்ட் மிகப்பெரியது. அரவிந்த் எனக்கு நெருங்கிய நண்பர். படம் எனக்குக் காட்டினார், படம் பார்த்து கிஷனை எனக்கு ரொம்பப் பிடித்து விட்டது. ஸ்ம்ருதி மிக அழகாக நடித்துள்ளார். கீதா மேடம் மிக நன்றாக நடித்துள்ளார். ராஜ் ஐயப்பா நல்ல நடிப்பைத் தந்துள்ளார். ஒரு குவாலடியான படத்தை இந்தப்படக்குழு தந்துள்ளனர். இந்த பொங்கலுக்கு ஏழு படங்கள் திரைக்கு வருகிறது. எப்போதும் பொங்கல் பண்டிகையில், நல்ல படம் என்றால் மக்கள் திரையரங்கு வந்து பார்ப்பார்கள். அதனால் திரைக்குக் கொண்டு வாருங்கள் என்று சொன்னேன். அதேபோல் பொங்கலுக்கு இந்த திரைப்படத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். அரவிந்த்துக்கு இந்தப்படம் பெரிய வெற்றியைத் தரட்டும். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள். நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் புகழ் பேசுகையில், “எங்கள் படத்தை வாழ்த்த இங்கு வந்துள்ள பிரபலங்களுக்கு நன்றி. ஒரு நல்ல படம் தந்துள்ளோம். நீங்கள் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். உங்கள் முழு ஆதரவைத் தர வேண்டும், நன்றி” என்றார்.
எடிட்டர் அருள் இ.சித்தார்த் பேசுகையில், “தேஜாவு தான் என் முதல்ப்படம். அந்தப் படத்தில் தான் அரவிந்த் அறிமுகம். இந்தப்படத்துக்கும் நீங்கள் தான் எடிட்டர் என்றார். தேஜாவு படத்தில் பாட்டு, ஃபைட் இல்லை ஆனால் இந்தப்படத்தில் அதற்கும் சேர்த்து, எல்லாம் வைத்துள்ளார். தேஜாவு படம் போல, இந்தப்படத்திலும் இடைவேளையிலிருந்து வேறு மாதிரி இருக்கும். ஸ்ம்ருதி வெங்கட் அருமையாக நடித்துள்ளார். கிஷன் அவரும் சிறப்பாகச் செய்துள்ளார். இசை அருமையாக வந்துள்ளது. படம் நன்றாக வந்துள்ளது. அரவிந்த் ப்ரோ அடுத்த படத்திற்கும் எனக்கு வாய்ப்பு தாருங்கள், இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.
டான்ஸ் மாஸ்டர் பாபி பேசுகையில், “எல்லோரும் நல்ல தருணத்துக்காகத்தான் உழைக்கிறோம். தருணத்துக்கும் அது அமைய வேண்டும். தயாரிப்பாளர் இப்படத்திற்கு முழு ஆதரவாக இருந்தார். அவர்களுக்கு இது நல்ல வெற்றிப்படமாக அமைய வேண்டும். அரவிந்த் ப்ரோ குறுகிய காலத்தில் பெரும் உழைப்பைத் தந்துள்ளார். தேஜாவு படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும், இந்தப்படத்தில் எனக்கும் ஒரு வாய்ப்பைத் தந்ததற்கு நன்றி.” என்றார்.
நடிகர் விமல் ராஜா பேசுகையில், “இந்தப்படத்தில் எல்லா நடிகர்களுடன் நானும் ஒரு சின்ன கதாப்பாத்திரம் செய்துள்ளேன். தேஜாவு இயக்குநர் படம் செய்கிறார் என்று தெரிந்து, அவரிடம் வாய்ப்பு கேட்டு, ஆடிஷனில் கலந்து கொண்டு தான் இந்தப் படத்தில் நடித்தேன். இந்த படத்திற்கு ஆடிஷன் வைத்துத் தேர்ந்தெடுத்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் பெஸ்ட்டைத் தந்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். உங்கள் எல்லோருக்கும் இந்த திரைப்படம் பிடிக்கும் அனைவரும் நன்றி.” என்றார்.
இசையமைப்பாளர் அஸ்வின் பேசுகையில், “இப்படத்திற்கு நான் பின்னணி இசை அமைத்துள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பைத் தந்ததற்கு இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. நிறைய புதிய முயற்சிகள் செய்துள்ளோம். படம் மிக நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். தர்புகா சிவா நல்ல பாடல்கள் தந்துள்ளார். கார்கிக்கு நான் ரசிகன், இந்தப்படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. நன்றி.” என்றார்.
நடிகர் ராஜ் ஐயப்பா பேசுகையில், “நான் வாழ்க்கையில் மிகவும் சோர்வாக இருந்த காலகட்டத்தில் எனக்கு இந்த படத்தின் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்குப் பிறகு, எனக்கு நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. இந்தப் படம் எனக்கு லக்கி ஜாம். இந்த படத்தில் நான் மிக முக்கியமான கேரக்டர் செய்து இருக்கிறேன். கிஷன், ஸ்ம்ருதி வெங்கட், நான் மூவரும் ஒரு தருணத்தில் சந்திப்போம், பிறகு என்ன நடக்கிறது ? என்பதுதான் இந்தப் படத்தின் கதை. இப்படி ஒரு முக்கியமான கதாப்பாத்திரம் தந்ததற்கு இயக்குநர் அரவிந்த்திற்கு நன்றி. இந்தப்படத்தை ஏற்கனவே மிகப்பெரிய படமாக உருவாக்கிய, தயாரிப்பாளருக்கு நன்றி படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு நன்றி. படம் மிக நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.” என்றார்.
நடிகை கீதா கைலாசம் பேசுகையில், “நான் வழக்கமாகச் செய்யும் அம்மா பாத்திரத்திலிருந்து இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இந்தக்கதையை அரவிந்த் சொன்னபோதே, எனக்குப் பிடித்திருந்தது. ஒரு திரில்லர் படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன், அந்த நேரத்தில் இந்த வாய்ப்பு வந்தது மகிழ்ச்சி. கிஷன், ஸ்ம்ருதி, ராஜ் ஐயப்பா உடன் நடித்தது நல்ல அனுபவம். இந்தப்படம் நடிக்கும் போதே நன்றாக வருகிறது, என்ற நம்பிக்கை இருந்தது. பட டிரெய்லர் பார்த்து, எல்லோரும் பாராட்டினார்கள். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும், நன்றி.” என்றார்.
நடிகை ஸ்முருதி வெங்கட் பேசுகையில், “எங்கள் தருணம் படத்திற்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி. அரவிந்தின் தேஜாவு படத்தில் நான் நடித்திருந்தேன், அதில் எனக்குச் சின்ன கேரக்டர், ஆனால் அவர் என்னை கன்வின்ஸ் செய்து நடிக்க வைத்தார். அப்போது அடுத்த படத்தில் நீங்க தான் ஹீரோயின் என்றார் நான் நம்பவில்லை, ஆனால் இந்தப்படத்தில் நான் தான் ஹீரோயின் என்றார் ஆச்சரியமாக இருந்தது. இந்தக்கதை சொன்னார் மிகவும் பிடித்திருந்தது. எனக்கு மிகவும் வித்தியாசமான மாடர்ன் கேரக்டர், இதுவரை செய்ததிலிருந்து மாறுபட்ட கேரக்டராக இருக்கும். எனக்கு முக்கியமான நேரத்தில் கிடைத்த வாய்ப்பு அரவிந்த் சாருக்கு நன்றி. கீதா மேடமுடன் நடித்தது மகிழ்ச்சி. தயாரிப்பாளருக்கு நன்றி. ராஜா பட்டாசார்ஜி மிகச்சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார், அனைத்து கலைஞர்களும் கடின உழைப்பைத் தந்துள்ளனர். படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.
நடிகர் கிஷன் தாஸ் பேசுகையில், “பொங்கலுக்கு வெளியாகும் பல படங்களில் எங்கள் படமும் ஒன்று. உங்கள் முழு ஆதரவைத் தந்து, நீங்கள் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்தப்படத்திற்காக அரவிந்த் என்னை அழைத்தார். தேஜாவு இயக்குநர் என்ற உடனே, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு வெற்றிப் படம் தந்த, இயக்குநர் என்னைத் தேடி வந்தது எனக்கு ஆச்சரியம் தான். நானும் பயங்கரமாக திரில்லர் கதை சொல்வார் என்று நினைத்தேன். ஆனால் முழுக்க முழுக்க ரொமான்ஸ் உடன் ஒரு கதை சொன்னார். இடைவேளைக்குப் பிறகு அவர் சொன்ன கதை, முழு திரில்லராக அவர் பாணியிலிருந்தது. கதை கேட்டவுடன் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது, கதையில் ஒரு ஆபீஸர் கேரக்டர், படத்தில் பாட்டு, ஃபைட் எல்லாமே இருக்கிறது. இந்த கதைக்கு நான் தாங்குவேனா? என்று கேட்டேன், ஆனால் அரவிந்த் கண்டிப்பாக நீங்கள் சரியாக இருப்பீர்கள் என்று ஊக்கம் தந்தார். என் மீது முழு நம்பிக்கை வைத்தார். அந்த கேரக்டர் எப்படி இருக்க வேண்டும் என, எனக்கு நிறையச் சொல்லித் தந்தார். புகழ் & ஈடன் இருவருக்கும் இது முதல் திரைப்படம். இப்போதுள்ள திரைத் துறையில் முதல் படம் செய்வது எத்தனை கடினம் என்பது தெரியும். அதைத் தாண்டி மிகச் சிறப்பாக இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்கள், இப்படம் அவர்களுக்காகப் பெரிய வெற்றி பெறும் வாழ்த்துகள். ஸ்ம்ருதி வெங்கட் மிகச்சிறந்த கோ ஸ்டார், இந்தபடம் ஆரம்பித்ததிலிருந்து, இப்போது வரை எங்களுக்கு நிறையத் தருணம் இருந்தது அவருக்கு நன்றி. கீதா கைலாசம் மேடம் பார்த்தால், என் அம்மா ஞாபகம் தான் வரும் அவருடன் நடித்தது மகிழ்ச்சி. பாலசரவணன் ஒரு அருமையான ரோல் செய்துள்ளார். என்னை நம்பி டான்ஸ் ஆட வைத்த, பாபி மாஸ்டருக்கு நன்றி. அருள் மிகச்சிறப்பாக எடிட் செய்துள்ளார் நன்றி. கார்கி சாருக்கு நான் மிகப்பெரிய ஃபேன், அவர் இந்தப்படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி. என்னை நம்பி இந்தப்படம் தந்த அரவிந்துக்கு நன்றி. எல்லாச் சின்ன படத்திற்கும் ஆதரவு தரும் தனஞ்செயன் சாருக்கு நன்றி. என் முதல் படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆதரவு தந்தது பத்திரிக்கையாளர்கள் தான், இந்தப்படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.
பாடலாசிரியர் மதன் கார்கி பேசுகையில், “இந்தப்படத்தின் கதையை அரவிந்த் சொன்னபோதே எனக்குப் பிடித்திருந்தது. ஒரு அழகான ரொமான்ஸ் கதையில், திரில்லரை நுழைத்து, மிக அழகாகத் திரைக்கதை அமைத்துள்ளார். தர்புகா சிவாவுடன் நிறையப் படம் செய்துள்ளேன், அவரது இசை எனக்கு மிகவும் பிடிக்கும், இப்படத்திலும் இரண்டு அழகான பாடல்கள் எழுதியுள்ளேன். ஒவ்வொன்றிற்கும் இரண்டு வேலை இருந்தால் எப்படி இருக்கும் எனும் மையத்தில் ஒரு அழகான பாடல் எழுதியுள்ளேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல். கிஷன் எனக்கு மிகப் பிடித்த நடிகர், அவருக்குத் தொடர்ந்து வெற்றிப்படங்கள் அமைய வாழ்த்துக்கள். எடிட்டர் டிரெய்லரை மிக அழகாகக் கதை தெரியாமல், எடிட் செய்திருந்தார். இந்த படம் நல்ல திரில்லராக வந்துள்ளது. படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.
‘தருணம்’ படம் வரும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக ஜனவரி 14 அன்று உலகமெங்கும் வெளியாகிறது.