சுந்தர் சி ,தான்யா ஹோப், ஹெபா பட்டேல், கமல் காமராஜ், அபிராமி வெங்கடாசலம் ,சாந்தினி தமிழரசன், தலைவாசல் விஜய், ஜெயக்குமார், டிஎஸ்கே நடித்துள்ளனர். எழுதி இயக்கி உள்ளார் வி ஆர் மணி சேயோன். ஒளிப்பதிவு மணி பெருமாள், இசை சந்தோஷ் தயாநிதி, எடிட்டர் தினேஷ் பொன்ராஜ். விஆர் டெல்லா ஃபிலிம் ஃபேக்டரி பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பு : டாக்டர் வி ஆர் மணிகண்டராமன் மற்றும் வி காயத்ரி .
கொலை வழக்கு விசாரணை சஸ்பென்ஸ் என்ற வகையிலான படம். சமுதாயத்தில் நல்ல நிலையில் உள்ள இளம் தொழிலதிபர் மர்மமான முறையில் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலை வழக்கை காவல்துறை விசாரிக்கிறது.ஆதாரங்களோ துப்புகளோ குறிப்புகளோ கிடைக்காமல் திணறுகிறது.இதனால், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை ஆய்வாளர் சுந்தர்.சி-யிடம் உயர் அதிகாரி வழக்கை ஒப்படைக்கிறார். பணியில் இல்லை என்றாலும், தொழிலதிபர் கொலை வழக்கின் பின்னணியில், தனது தனிப்பட்ட பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கலாம் என்ற நோக்கத்தில் விசாரணை மேற்கொள்ளும் சுந்தர்.சி, பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறார். அடுத்தடுத்த கொலைகளால் மேலும் குழப்பம் சூழ்கிறது. இதற்கிடையே, கொலை செய்யப்பட்டவரிடம் இருக்கும் ஏதோ ஒன்றுக்காக அரசியல்வாதியும், சில காவல்துறை அதிகாரிகளும் அவருக்கு எதிராக சதி செய்ய, அவற்றை முறியடித்து கொலையாளியை அவர் எப்படி கண்டுபிடிக்கிறார் ?, கொலைக்கான பின்னணி ? மற்றும் இந்த வழக்குடன் தொடர்புடைய அவரது பிரச்சினை என்ன? ஆகிய கேள்விகளுக்கான விடையை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சொல்வதே ‘வல்லான்’.பரபர வேகத்தில் படம் பயணிக்கிறது.
சுந்தர்.சி, கதாநாயகனாகவும் கவனம் ஈர்க்கிறார். பணியில் இல்லாத போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சுந்தர்.சி, ஆக்ஷன் காட்சிகளிலும், கொலை வழக்கை விசாரிக்கும் காட்சிகளிலும் நேர்த்தியாக நடித்துள்ளார்.நாயகியாக நடித்திருக்கும் தன்யா ஹோப் அழகாக இருக்கிறார். நிறைவாக நடித்துப் பார்வையாளர்களை ஈர்க்கிறார்.
ஹெபா பட்டேல், திரைக்கதை ஓட்டத்திற்கு மட்டும் இன்றி கவர்ச்சிக்கும் பயன்பட்டிருக்கிறார். இளம் தொழிலதிபராக வரும் கமல் காமராஜ், அவரது மனைவியாக வரும் அபிராமி வெங்கடாச்சலம், சாந்தினி தமிழரசன், அருள் டி.சங்கர், தலைவாசல் விஜய், ஜெயக்குமார், டி.எஸ்.கே எனத் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளவர்கள் திரைக்கதையில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மணி பெருமாளின் கேமரா ஊட்டி காட்சிகளையும் ஆக்ஷன் காட்சிகளையும் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறது.
இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் வி.ஆர்.மணி சேயோன், ஒரு கொலையையும் அது சார்ந்த கதையையும் பல திருப்பங்களுடன், சிறு தொய்வில்லாமல் நகர்த்திச் சென்று முழுமையான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படமாகக் கொடுத்திருக்கிறார்.படத்தின் முதல் காட்சி முதல் இறுதி வரை பல திருப்பங்கள் இருந்தாலும், எதையும் பார்வையாளர்களின் யூகத்தின்படி சொல்லாமல், அவர்களை முழுமையாக படத்துடன் ஒன்றிவிட செய்யும் விதத்தில் திரைக்கதையை மிக கூர்மையாக வடிவமைத்திருக்கும் இயக்குநர் முழு படத்தையும் கவனம் குவித்து ரசிக்கும் வகையில் வைத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘வல்லான்’ ஆக்ஷன் சஸ்பென்ஸ் பட ரசிகர் மனதை வெல்வான்.