ரூபா கொடுவாயூர், நரேந்திர பிரசாத் ,கீதா கைலாசம், ராஜு ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா நடித்துள்ளனர்.
படத்தின் கதை, திரைக்கதையை எழுதி பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ளார். . ஓளிப்பதிவு: சுஜித் சாரங், எடிட்டர் மற்றும் கலரிஸ்ட் :ஸ்ரீஜித் சரங்,இசை : ஜெசின் ஜார்ஜ் ,வசனங்கள்: எஸ் ராஜேந்திரன் , கலை : பி ஜோசப் பாபின்,ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா, நைசாட் மீடியா வொர்க்ஸ் சார்பில் சீனிவாசராவ் ஜலகம் தயாரித்திருக்கிறார்.
சற்றே வித்தியாசமான அதிர்ச்சியூட்டும் கதை தான்.மனிதர்கள் நீதி கேட்கலாம். ஒரு பெண் பிணம் நீதி கேட்டால் எப்படி இருக்கும் ? அந்தப் பெண் பிணம் என்பது ஒரு பெண் பிணம் தானா? பெண் இனத்தின் பிரதிநிதியாக அல்லவா இருக்கிறது?
நீதி கேட்கும் பெண் சடலம் என்கிற கதையின் பின்னணியில் சமூக அவலத்தைத் தோலுரித்துக் குத்திக் கிழித்து காட்டும் அமானுஷ்யமான திரில்லர் படம் இது என்று கூறலாம்.
தஞ்சை பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தில் ஊர்த் தலைவர் இருக்கிறார்.அவரது மகள் தான் லீலா என்கிற ரூபா கொடுவாயூர். பக்திமிக்க ஒரு நல்ல குடும்பம்.
அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி என்று மகிழ்ச்சியான குடும்பத்தில் இருக்கிறார் ரூபா.ஒரு நாள் அவரது அப்பா மகளுடனான வாக்குவாதத்தில் மகளைத் திட்டி ,அறைந்தும் விடுகிறார். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மகள் ரூபா தற்கொலை செய்து கொள்கிறார்.இதை மறைத்து அவர் மூச்சுப் பிரச்சனை கொண்ட ஆஸ்துமா நோயினால் இறந்ததாக மற்றவர்களை நம்ப வைத்து விடுகிறார்கள் குடும்பத்தினர்.
இறுதிச் சடங்குகள் முடிந்து சுடுகாட்டுக்குச் சடலத்தை எடுத்துச் செல்லத் தயாராகின்றனர்.தூக்க முயன்ற போது, தூக்க முடியாத அளவுக்கு, அசைக்க முடியாத அளவிற்குச் சடலம் கனமாக இருக்கிறது.அதுமட்டுமல்ல அந்த உடலில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று அசைவுகள் தெரிகின்றன.அந்தத் துக்க வீடு வியப்பு ஒரு பக்கம் அதிர்ச்சி ஒரு பக்கம் என்று சலசலப்பாகிறது.
மீண்டும் இறந்த உடலைத் தூக்க முயற்சி செய்கிறார்கள். அப்போது அந்த சடலம் எழுந்து உட்கார்ந்து விடுகிறது. இதனால் அந்தப் பகுதியே பெரும் பரபரப்புக்கு உள்ளாகிறது.
துக்க வீட்டுக்கு வந்த ஊர் மக்கள் யாரும் தங்கள் வீட்டுக்குச் செல்லவில்லை.அதிர்ச்சியில் ஆழ்ந்து அங்கேயே காத்திருக்கிறார்கள். மறுபக்கம் சுடுகாட்டில் இறுதிச் சடங்கு செய்பவரை அழைத்து வருகிறார்கள்.நிலைமை என்ன என்று பார்க்கச் சொல்கிறார்கள்.உட்கார்ந்த நிலையில் இருக்கும் அந்தச் சடலத்தை பார்த்துவிட்டு, இந்த பெண் உங்களிடம் ஏதோ சொல்ல வருகிறார், என்று அந்த ஆள் சொல்கிறார். அதன்படி, இறந்த நாயகி ரூபா என்ன சொல்ல வருகிறார்?, என்பதை மிக சுவாரஸ்யமாகச் சொல்வதே ‘எமகாதகி’.
சடலம் எழுவது உட்காருவது எல்லாம் நம்ப முடியாமல் நமக்குத் தோன்றலாம். ஆனால் இது மாதிரி ஒரு நிஜ சம்பவம் நடந்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் தான் எடுத்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.
நன்கு பார்த்து பழகிய பக்கத்து வீட்டு பெண்ணைப் போல தோற்றம் நாயகி ரூபாவுக்கு .இயல்பும் மீறாத அழகான அளவான நடிப்பின் மூலம் கவர்கிறார்.உயிரற்ற உடலாக இருந்தாலும் பார்வையாளர்களைக் கதிகலங்க வைத்து விடுகிறார்.காதலனிடம் தன் காதலை வெளிப்படுத்தும் விதம், நாணம் கலந்த சிரிப்பு போன்றவற்றின் மூலம் அறிமுக நாயகி ரூபா, பார்வையாளர்களைக் கவர்ந்து விடுகிறார்.படத்தில் பெரும் பகுதி பேசாமல் அசையாமல் தான் இருக்கிறார். அந்த மௌனமான ஆவேச சிரிப்பினால் நெஞ்சை பதற்றம் கொள்ள வைக்கிறார். அவரது பாவனைகள் சிலிப்பூட்டும் ரகம்.இவருக்குக் கதாநாயகிகள் உலகத்தில் ஓர் இடம் உண்டு என்பதை அவரது நடிப்பு சாட்சியாகச் சொல்கிறது.
நடிகர் நரேந்திர பிரசாத் ரூபாவின் காதலனாக வருகிறார்.நல்ல போட்டோ ஜெனிக் முகம், பார்த்தவுடன் பிடித்து விடும் ரகம்.அவரது தோற்றம் மட்டுமல்ல காதலியுடன் காதல் செய்யும் காட்சிகளும் நன்றாக உள்ளன.கீதா கைலாசம் நாயகியின் அம்மாவாக நடித்திருக்கிறார். உயிரோட்டமான நடிப்பால் அந்தப் பாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.அப்பாவாக வரும் ராஜு ராஜப்பன், அண்ணனாக வரும் சுபாஷ் ராமசாமி, அண்ணியாக வரும் ஹரிதா ஆகியோருடன் ஊர் மக்களாக நடித்திருப்பவர்கள் என அனைவரும் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான தேர்வுகள்.அவர்கள் அனைவருமே தங்களது இயல்பான நடிப்பின் மூலம்,கதை மாந்தர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜெசின் ஜார்ஜ், இசையில் பாடல்கள் காதல் ரசம் சொட்டுபவை.படத்தின் தன்மையை உயர்த்திப் பிடிக்கும் அவரது பின்னணி இசை படத்திற்குப் பெரும் பலம்.
ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், குறைந்த ஒளியைப் பயன்படுத்தி இன்டோர் காட்சிகளாகக் கிராமத்து பழங்காலத்து வீட்டினுள் நம்மையும் கொண்டு சென்றுவேடிக்கை பார்க்க வைக்கிறார்.
அந்த வீட்டைக் காட்சிப்படுத்திய விதம் மற்றும் சடலத்தின் மாற்றங்கள் மூலம் தனது கேமரா மூலமாகவே ஏதோ ரகசியம் இருக்கிறது, என்பதை உணர வைத்துவிடுகிறார்.
படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங்,கூர்மையான கத்தரிப்புகளுடன் படத்திற்கு மேன்மை செய்துள்ளார்.
வன்முறைக் காட்சிகள் இல்லை என்றாலும் சாதி பாகுபாட்டின் வன்மத்தை,அது ஏற்படுத்தும் பாதிப்பைப் படத்தில் காட்டியுள்ளார்கள். எஸ்.ராஜேந்திரனின் வசனங்கள் கூர்மையானவை.
ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டால் ஊர் என்ன பேசிக் கொள்ளும் என்கிற சிந்தனையில் இருந்து எழுந்து பொறுப்புடன் பெண்ணியம் பேசுகிற படமாக மாறி உள்ளது -எம காதகி என்பது ஒற்றை நபர் அல்ல ஒரு இனத்தின் அடையாளம் என்று உணர வைக்கிறது.
படத்தில் எஸ். ராஜேந்திரனின் வசனங்கள், குறிப்பாக இறுதிக்காட்சியில் பேசப்படும் வசனங்கள் ஓங்கி அறைகின்றன .திரையரங்குகளில் கைத்தட்டல்களை அள்ளும்.
தான் பார்த்த உண்மைச் சம்பவத்தை இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் திரை மொழி வெளிப்படும் வகையில் இயக்கி உள்ளார். அந்த சம்பவங்களுடன் பார்வையாளர்களை பயணிக்க வைத்திருப்பவர், பார்வையாளர்களின் கவனம் திருப்பும் விதமாக காட்சிகளை வடிவமைத்து இறுதியில் எதிர்பார்க்காததை சொல்லி படத்தை முடித்திருப்பது சபாஷ் போட வைக்கிறது. படத்தில் இடம்பெறும் காதல் காட்சிகள் குறைவாக இருந்தாலும் அதை காட்சிப்படுத்திய விதம் இதம். குறிப்பாக நாயகன், நாயகி இடையிலான காதல் உணரப்படும் இடங்கள், அவர்களின் திரைத் தோற்றம் படத்திற்குப் பலம்.
சாதிப் பாகுபாடு, பெண்ணியம், ஆணவக்கொலை மற்றும் அதன் பின்னணி ஆகியவை குறித்தும் படம் பேசுகிறது. படம் கிராமத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தை மிக சுவையான திரைக்கதை மூலம் எதிர்பாராத திருப்பங்களுடன் வடமாக்கி உள்ளார்கள்.
கதையைச் சமூக அக்கறையோடு கையாண்டிருக்கும் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன், பாராட்டுக்குரியவர் .ஏனென்றால் சிறந்த படைப்பாக மட்டும் இன்றி திரை ரசிகர்கள் ரசிக்கும்படியான சுவாரஸ்யமான படமாகவும் கொடுத்திருக்கிறார்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது .பெண்களின் உறுதி அளவில்லாதது என்பதை அழகாகக் கூறியிருக்கிறார் இந்த ‘எமகாதகி’ திரைப்படத்தில்.இந்த படம் நிச்சயமாக ஒரு புதிய திரை அனுபவமாக இருக்கும்.