‘மர்மர்’ திரைப்பட விமர்சனம்

ரிச்சி கபூர் – ரிஷி , தேவ்ராஜ் ஆறுமுகம் – மெல்வின் , சுகன்யா ஷண்முகம் – அங்கிதா, யுவிகா ராஜேந்திரன் – காந்தா, அரியா செல்வராஜ் – ஜெனிபர் ஆகக் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மர்மர் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஹேம்நாத் நாராயணன்.

எஸ்.பி.கே பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்டாண்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் பிரபாகரன் இணைந்து தயாரித்திருக்கும் படம் இது.ஒளிப்பதிவாளர்: ஜேசன் வில்லியம்ஸ் , படத்தொகுப்பு: ரோஹித், ஒலி வடிவமைப்பு: கேவ்வின் பிரெடெரிக் , தயாரிப்பு வடிவமைப்பு: ஹாசினி பவித்ரா , உடை : பிரகாஷ் ராமசந்திரன்.

மர்மர் ,தமிழ் சினிமாவின் முதல் ஃபவுண்ட் புட்டேஜ் ஹாரர் படம் என்ற எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ளது.

மர்மர் என்றால் என்ன முணுமுணுத்தல்.அதாவது பெரிதாக ஓசைப்படாமல் தனக்குள் பேசிக்கொள்வது எனலாம்.

மர்மர் என்பதற்குப் பதில் மர்மம் என்று வைத்திருக்கலாம். அந்த அளவுக்கு சஸ்பென்சாக இந்தக் கதையை உருவாக்க நினைத்துள்ளனர்.

இதய பலவீனம் உள்ளவர்கள் இந்த படத்தைப் பார்க்கத் தயங்க வேண்டும் என்றெல்லாம் விளம்பரம் செய்திருந்தார்கள்.

திருவண்ணாமலை ஜவ்வாது மலை ஒட்டிய காடுதான் கதை நிகழ்விடம்.

இரண்டு ஆண், இரண்டு பெண் என்று நான்கு வாலிப யூடியூபர்கள் . அமானுஷ்யமான அனுபவங்களை நேயர்களுக்குக் கொடுப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் .அவர்கள் நால்வருமே அதீத சுதந்திரம் கொண்டவர்கள் . மது புகை கெட்ட வார்த்தை மற்ற விஷயங்களில் சுதந்திர எல்லையைத் தாண்டுபவர்கள் .சமத்துவம் பேசுபவர்கள் .எல்லா மரபுகளையும் மீறுபவர்கள் இது போதும் அவர்களைப் பற்றி சொல்ல.

இப்படிப்பட்டவர்கள் அந்தக் காத்தூர் கிராமத்துக் காட்டுப் பகுதிக்குச் செல்கிறார்கள்.அந்தத் கிராமத்தைப் பற்றி கேள்விப்படும் அமானுஷ்ய விஷயங்களை ஆவணப் பதிவு செய்ய அங்கே செல்கிறார்கள்.

அங்கே மங்கை என்ற ஒரு மர்ம பாத்திரம் இருக்கிறது ரத்தவாடை கண்டால் அங்கே ஒரு விபரீதம் நடக்கும் என்பது அந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.பௌர்ணமி தினத்தன்று ஆற்றில் சப்த கன்னியர்கள் குளிக்கும் நடமாட்டம் உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
இந்தச் சூழலில் இந்த நால்வரும் ஒன்றாகச் சேர்ந்து உண்மை அறியும் விதமாக அந்த அமானுஷ்ய சக்தியைத் தேடி போகிறார்கள்.கூடவே ஊர்க்கார பெண் ஒருத்தியை துணைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.ஒரு கட்டத்தில் அவள் காணாமல் போகிறாள்.பிறகு அவளது மகள் காந்தா உதவ வருகிறாள். ஒரு கட்டத்தில் இவர்களும் ஒருவரை ஒருவர் பிரிகிறார்கள். அவர்கள் அந்தக் காட்டில் சந்திக்கும் அமானுஷ்யமான அனுபவங்கள் தான் இந்தத் திரைப்படம்.

ஆரம்பத்தில் என்னவோ இந்த இளைஞர்கள் கிராமத்திற்குள் செல்லும் பயணம் ஜாலியாக வே உள்ளது. உள்ளே நுழையும்போது மக்கள் ஒவ்வொருவரும் எச்சரிக்கையும், பயத்தையும் கொடுக்கிறார்கள்.அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் உள்ளே செல்லும்போது இரவு நேரத்தில் பல அமானுஷ்ய அசைவுகளும், காலடிச் சத்தங்களும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கின்றன. பேய் இருக்கிறதா என்பதை ஆராய ஒய்ஜா போர்டை வைத்து விளையாடுகிறார்கள். அதற்குப் பின்னால் இவர்கள் கேட்ட கதை உண்மையா? இல்லையா? என்பது தான் மீதிக் கதை.

தமிழ் சினிமாவில் திகில், பேய்ப் படங்கள் புதிதல்ல. ஆனால், ‘ஃபவுண்ட் ஃபுட்டேஜ் ஹாரர்’ பாணி என்பது சற்றுப் புதிதாக உள்ளது.

திகில் ஊட்டுவதற்கு பெரும்பாலும் உண்மையாகவே இரவு நேரத்தில் தான் படப்பிடிப்பை நடத்தி இருந்தார்கள்.

பகல் நேரத்தில் சருகு, இலைகள், மரங்கள் இடையே நடக்கும் பயணம், இரவில் நெருப்பு வெளிச்சம், டார்ச் லைட்டில் என்று அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இதற்காக ஒளிப்பதிப்பாளர் ஜோசப் கடினமாக உழைத்துள்ளார்.

இது மாதிரி படங்களில்
பின்னணி ஒலிகளும் லைவாக இருக்க வேண்டும். அதை மனதில் கொண்டு தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.அதை இறுதிவரை பராமரித்துள்ளனர். .

படத்தில் வரும் சத்தங்கள் பார்வையாளர்களை மிரட்டுகிறது.

ஒவ்வொரு ஒலியுமே துல்லியம். படத்தினுடைய ஒலிஅமைப்பு, ஒளிப்பதிவு, லைட்டிங், கலரிங் எல்லாமே சிறப்பு. ஆனால், தாராளமாகக் கெட்ட வார்த்தைகள் பேசும் சில காட்சிகள் முகம் சுளிக்கும் வகையிலும், ஒவ்வாமை ஏற்படும் வகையிலும் இருந்தாலும் விறுவிறுப்பு குறையாமல் இயக்குநர் படத்தைக் கொண்டு சென்று இருக்கிறார். மொத்தத்தில் ஒரு திரில்லரான அனுபவம் தரும் படமாக ‘மர் மர்’ இருக்கிறது.